முன்னொரு காலத்தில் சோமுகன் என்ற அசுரன் பிரம்மனிடமிருந்து வேத சாஸ்திரங்களையும், ஞானத்தையும், படைக்கும் திறனையும் அபகரித்துச் சென்றான். பிரம்மன் ஸ்ரீவைகுண்டம் வந்து இங்குள்ள கலச தீர்த்தத்தில் நீராடி கடுந்தவம் புரிய நாராயணன் பிரம்மன் முன் தோன்ற வேண்டுவன கேள் என்று அருள பிரம்மனும், தான் இழந்தவற்றை வேண்டிப் பெற்றுக் கொண்டான். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன் இத்தலத்தில் “ஸ்ரீ வைகுண்டநாதன்” எனும் பெயரில் தன்னை வணங்கும் அடியார்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளச் செய்ய எழுந்தருளியுள்ளான்.
ஸ்ரீவைகுண்டம் நகரில் காலதூஷகன் என்பவன் தன் நண்பர்களுடன் திருட்டுத் தொழிலை செய்து வந்தான். இவன் திருடச் செல்லுமுன் ஸ்ரீவைகுண்டநாதனை சேவித்து தான் திருட்டுத் தொழிலின் போது யார் கண்ணிலும் படாமலும், யாரிடமும் பிடிபடாமலும் இருக்க வேண்டும் என்றும் திருடிய பொருளில் பாதியை உன் சந்நிதியில் சேர்த்து விடுவதாகவும் கூறினான். அவ்வாறே தான் திருடியவற்றில் பாதியை பெருமான் சந்நிதியிலும் மீதமுள்ளவற்றை தன் சகாக்களுடன் கலைஞர்கள், ஏழைகளுக்கு தருமம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனையில் திருடும் போது இவன் தப்பி ஓடி வந்துவிட இவனது சகாக்கள் காவலாளிகளிடம் மாட்டிக் கொள்ள அவர்கள் மூலம் காலதூஷனைப் பற்றி அறிந்த அரசன் அவனை பிடித்து வர உத்தரவிட்டான். அதையறிந்த காலதூஷகன் வைகுண்ட நாதனை சரணடைந்து காப்பாற்ற வேண்டினான். ஸ்ரீவைகுண்டநாதனே அரசவைக்கு காலதூஷகன் வேடத்தில் சென்று அரனை தருமத்தை செய்வித்து குடிமக்களை காக்க வேண்டும் நீ அவ்வாறு செய்யத் தவறியதால் அதை உனக்கு உணர்த்தவே இத்திருவிளையாடல் நடத்தினேன் என்று கூறி அரசனுக்கும், திருடனான காலதூசகனுக்கும் காட்சியளித்தார். திருடன் வேடத்தில் வந்ததால் பெருமாள் ஸ்ரீ கள்ளபிரான் (சோரநாதன்) என அழைக்கப்பட்டார்.
காலமாற்றங்களில் கோவில் மண்ணில் புதையுண்டு போனது. அப்போது மேய்ச்சலுக்கு வந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு வைகுண்டநாதர் இருக்கும் இடத்திற்கு நேர் மேலே தன் பாலை சுரக்கும். இது பெருமானுக்கு திருமஞ்சனம் போன்றது. இதை அறிந்த மன்னன் பயபக்தியோடு பூமியை தோண்ட வைகுண்டபதியை கண்டு ஆனந்தமடைந்து பெருமானை எடுத்து பெரிய சந்நிதியை கட்டுவித்து தினந்தோறும் பால்திருமஞ்சனம் செய்வித்தான். பெருமாள் கோவிலில் தினமும் திருமஞ்சனம் நடைபெறுவது அபூர்வம். ஆனால் இங்கு தினமும் பெருமானுக்கு பால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
மேலும் இங்கு இரண்டு தாயார்களுக்கு தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னதியும் கோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன.
இங்கு வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தில் ஸ்ரீ கள்ளபிரான், ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான், ஸ்ரீ விஜயாசனம், ஸ்ரீ காசினி சேந்தர் போன்ற எம் பெருமான்கள் கருட வாகனத்திலும் ஸ்ரீ நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.
சித்திரை, ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கதிர்கள் பெருமாள் திருவடிகளை சேவிக்கும் இதற்காக இக்கோவில் கொடிமரம் சற்று விலகியுள்ளது.
இங்கு வந்து எம்பெருமானை சேவிப்பர்களுக்கு சகல பாவங்களும் நீங்கி பரிபூரண கடாட்சம் கிடைக்கும். தாயாருக்கு திருமஞ்சன செய்வித்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு பயணிகள் ரயில்களும் உள்ளன.
தலத்தின் பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் :வைகுண்டநாதன்
உற்ஸவர் :கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டனாயகி , சூரனந்த நாயகி
மார்க்கம் :திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில் திருநெல்வேலியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
நடை திறக்கும் நேரம் காலை 07 – 12 – மாலை 5 – 8
ஸ்ரீ வைகுண்டம் – ஸ்ரீனிவாச பட்டர் 99420 86097, 0463 0 – 256097