e0af8d-e0ae9ae0af88e0aeb5-e0ae92.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் – 196
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
குறித்தமணி – பழநி
சைவ ஒளி பரவியது
“சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று குலச்சிறை நாயனாரும் இராணி மங்கையற்கரசி அம்மையாரும் ஏங்கி நின்ற காலத்தில் திருஞான சம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்; அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து, சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள்.
சம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை முன்பே அனுபவித்து உணர்ந்தவர், எனவே “பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்ளை” என்றார். அப்போது
வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே,
ஆசு அறும் நல்லநல்ல, அவைநல்ல, நல்ல
அடியாரவர்க்கு மிகவே”
என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்களுடன் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளினார். அப்போது எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். திருஞானசம்பந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.
சீகாழிச் செம்மல் நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கினார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை வாழ்த்தினார். அப்பொது குலச்சிறையார் கைகூப்பி,
சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்,
இன்று எழுந்தருளப் பெற்ற பேறு இதனால்
எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நல்தமிழ் வேந்தனும் உய்ந்து,
வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
மேன்மையும் பெற்றனம் என்பார்
திருஞானசம்பந்தர் வருகையைக் கண்டு சமணர்கள் வருந்தி, கண் முட்டு கேட்டு முட்டு என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அனுமதி பெற்று சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் இல்லாது போனது. சமணர்கள் அது கண்டு, தாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை அடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,
செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே
என்று பாடியருளினார்.
“பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அருகில் வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.
மங்கையர்க்கரசியார் மகிழ்நனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்கத்தில் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து, ஆளுடைப்பிள்ளையை அழைத்தனர்.
புகலி வேந்தர் வந்தாரா? சைவ ஒளி பரவியதா?
திருப்புகழ் கதைகள்: சைவ ஒளி பரவல்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.