நவராத்திரி தத்துவம் – சக்தியின் மகிமை - நவகாளி அருள்
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் நவராத்திரியின்போது படிகள் கட்டி, அதில் பொம்மைகள் வைத்து அலங்கரிக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஐந்தாக இருந்த படிகள், காலப்போக்கில் ஏழு, ஒன்பது என்று ‘ஒற்றைப் படை’ எண்ணிக்கையில் வளர்ந்தன. ஆனால் கலசத்தில், மாவிலைக் கொத்தொடு, மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து, அதில் தேவியை வழிபடும் வழக்கமே ஆதியில் இருந்தது; படிகள் கட்டும் பழக்கம், பின்னாளில் உருவானது என்றும் சில பெரியோர்கள் கருதுகின்றனர்.
அம்பத்தூர் ‘பீட நிர்மயா’ என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சென்னை, அம்பத்தூரில் உள்ள வைஷ்ணவி ஆலயமும் இந்தப் பீடங்களில் ஒன்று. மற்றைய பீடங்கள் பெரும் தலங்களாக விளங்கும் காஞ்சி, மதுரை, திருவாரூர், காஷ்மீரம், நேபாளம், துவாரகை, கோலாப்பூர், சிருங்ககிரி, உஜ்ஜயினி, கொல்கட்டா போன்றவையாக இருக்கின்றன. இன்றைய அம்பத்தூர், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கியதால், ‘ஐம்பத்தோரூர்’ என்றழைக்கப்பட்டதாகவும், காலப் போக்கில் இப்பெயர் மருவி, அம்பத்தூராக மாறியிருக்கலாமென்றும் சான்றோர்கள் கருதுகின்றனர். (ஆதாரம்: திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட, ‘மங்கலம் அருளும் மகா காளி’ என்னும் பெருந்திரட்டு நூல்).
கல்பதரு! ‘காளி கல்ப தரு’ என்னும் வடமொழி நூலில், அம்பிகையின் முக்கிய பக்தர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அனுமன், விநாயகர், இந்திரன், பரசுராமர், கங்கையன்னை, திருமகள், சூரிய பகவான், சந்திரன், சுக்கிரன், ராவணன், குபேரன், வாயு, பூமாதேவி, ராமபிரான், பரதன், பிரகலாதன், சுகதேவன் ஆகியோரை அன்னையின் திருவருள் பெற்றவர்களாக, ‘காளி கல்ப தரு’ அடையாளம் காட்டுகின்றது. ‘கல்ப தரு’ என்பதற்கு ‘கற்பக மரம்’ என்று பொருள். கேட்டதையெல்லாம் தரும் ஆற்றலுடையது இந்த மரம். ஆனால் கேட்பவர்களின் தகுதியறிந்து தக்கனவற்றைத் தருவது தேவியின் வரம்.
தீமைகளின் எதிரி ராவணன், மாபெரும் சிவ பக்தன் என்பதை உலகே அறியும். அதே அசுரன், தேவி உபாசகனாகவும் இருந்துள்ளான். இலங்கையில் இருந்த அம்பிகையின் ஆலயத்துக்குச் சென்று அன்றாடம் வழிபாடு செய்வானாம் இந்த அசுர வேந்தன். அன்னையும் பக்திக்கு வசமாகி அளவற்ற செல்வமும், வலிமையும் ராவணனிடம் தங்கியிருக்க அருள் புரிந்தாள். ஆனால் சீதா பிராட்டியை ராவணன் கடத்திக் கொண்டு வந்ததுமே, சாந்த வடிவினளாய் இருந்த சக்தி, உக்கிர வடிவம் கொண்டாள். வானரப் படையுடன் ராம பிரான் இலங்கையுள் நுழைந்ததுமே அவருக்குப் பக்க பலமாக நின்றாள். விஷ்ணு- சக்தி கூட்டணி பலத்தால், எவராலும் வெல்ல முடியாத ராவணன் மாண்டு போனான். ‘பக்தனாக இருந்தாலும், மாற்றான் மனைவியைக் கவர்வது போன்ற மகாபாதகங்களைச் செய்பவரைவிட்டு தேவியின் திருவருள் நீங்கிவிடும்’ என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இதே காரணத்தினால்தான் ராவணனுக்கு சிவபெருமான் கொடுத்த வாளும் யுத்த நேரத்தில் பயனில்லாமல் போனது. பக்தன் என்ற கர்வத்தினால் பாவம் செய்வோர்க்கு, ராவணனின் முடிவே ஒரு சிறந்த பாடமாகும்!
சப்த கன்னியர் ‘வாராஹி’ போன்ற சப்த (ஏழு) மாதர்களின் திருவுருவச் சிலைகளை பல்வேறு ஆலயங்களில் தரிசிக்கலாம். அபூர்வமாக சில கோயில்களில் ‘சப்த கன்னியர்’ வடிவங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த ஏழு தேவியரும், சப்த மாதர்களின்றும் வேறானவர்கள். சப்த கன்னியரின் திருநாமங்கள் தேவ கன்னி, பத்ம கன்னி, சிந்து கன்னி, அகஜா கன்னி, வன கன்னி, சுமதி கன்னி, பட்டாரகீது கன்னி என்பனவாம்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ‘காளி’ என்றவுடன் எல்லோர் நினைவிலும் எழுபவர், வங்காளத்தில் அவதரித்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆவார். சிவபெருமான், கிருஷ்ண பரமாத்மா, ராதை, ராமபிரான், சீதை, உள்ளிட்ட அனைத்துத் தேவ தேவியரின் வடிவங்களையும் பரமஹம்ஸர் தரிசித்திருக்கிறார். ஆனால் முதலில் இவர் கண்டது, காளியன்னையின் தெய்வீகக் காட்சியைத்தான். இவரது முக்கிய சீடரான நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்), ஆரம்பத்தில் ‘அருவ’ வழிபாட்டில்தான் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் குருவருளால், ‘விக்ரக ஆராதனை’ என்பது உண்மையான வழியே எனவுணர்ந்தார். குருவை போலவே சீடரும் தேவி உள்பட பல தெய்வங்களின் காட்சியைப் பின்னாளில் பெற்றார்.
நவராத்திரி! நவகாளி! தென்னாட்டில் துர்க்கை, லட்சுமி, சரசுவதி ஆகிய மூன்று பிரதான தேவியரை நவராத்திரி சந்தர்பத்தில் பூஜிக்கின்றனர். ஆனால் வட நாட்டில் (குறிப்பாக வங்காளத்தில்) தினத்துக்கு ஒரு தேவியாக ஒன்பது காளிகளை, இதே சமயத்தில் பூஜிக்கின்றனர். ஸித்தி காளி, மகா காளி, மயான காளி, குஹ்ய காளி, தட்சிண காளி, சாமுண்டி காளி, தன காளி, காமகூலா காளி, மகா நீல காளி என்பன இக்காளி அன்னையரின் திருநாமங்களாகும்.
கவிதை தெய்வம் ‘உவமைக்கு காளிதாஸன்’ என்று பண்டிதர்கள் போற்றுவார்கள். அறிவிலியாய் இருந்த இவர், காளியின் அருளால், இன்றளவும் ‘மஹா கவி’ என்னும் பெரும் புகழோடு விளங்கும் புலமையைப் பெற்றுள்ளார். தென்னகத்து மகா கவியான பாரதியாரும் பராசக்தியை வழிபடும் பேறு பெற்றவர். கவி காளமேகமும் ஆனைக்கா அம்பிகையின் அருளால் ‘பாடும் வரம்’ பெற்ற பாவலருள் ஒருவர். அன்னையின் அருள், ஊமைகளையும் கவிஞர்களாக்கும் என்பதனால், ‘மூகாம்பிகை’ என்ற பெயரும் பராசக்திக்கு உண்டு.
- ஆனந்த பைரவி