style="text-align: center; ">9ஆம் பத்து 2ஆம் திருமொழி
1758
பொன்னிவர் மேனி மரக தத்தின்
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில்நல் வேத மோதும்
வேதியர் வானவ ராவர்தோழீ,
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
அச்சோ ஒருவர் அழகியவா. (2) 9.2.1
1759
தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும்
சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த
சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன்
செஞ்சுட ராழியும் சங்குமேந்தி
பாடக மெல்லடி யார்வ ணங்கப்
பன்மணி முத்தொடி லங்குசோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும்
அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.2
1760
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம்
தாயின நாயக ராவர் தோழீ.
தாமரைக் கண்கள் இருந்தவாறு,
சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச்
செவ்விய வாகி மலர்ந்தசோதி
ஆயிரம் தோளொ டிலங்கு பூணும்
அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.3
1761
வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல்
கையன ஆழியும் சங்கும் ஏந்தி,
நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார்
நாகரி கர்பெரி துமிளையர்
செம்பவ ளமிவர் வாயின் வண்ணம்
தேவ ரிவர துருவம்சொல்லில்
அம்பவ ளத்திர ளேயு மொப்பர்
அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.4
1762
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவல ரேயொப்பர் குன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்கு டையர்
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்
மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோவொருவரழகியவா. 9.2.5
1763
வெஞ்சின வேழம் மருப்பொ சித்த
வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை
தஞ்சுடை யாளர்கொல் யான றியேன்
தாமரைக் கண்க ளிருந்தவாறு
கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த
காளையா ரவர்கண் டார்வணங்கும்
அஞ்சன மாமலை யேயு மொப்பர்
அச்சோவொருவரழகியவா. 9.2.6
1764
பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும்
பேரரு ளாளர்கொல்? யானறியேன்,
பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ.
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணிகெழு தாமரை யன்ன கண்ணும்
அங்கையும் பங்கய மேனிவானத்து,
அணிகெழு மாமுகி லேயு மொப்பர்
அச்சோவொருவரழகியவா. 9.2.7
1765
மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட
மாலிருஞ் சோலைம ணாளர்வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்?
மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த
மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்
அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார்
அச்சோவொருவரழகியவா. 9.2.8
1766
எண்டிசை யுமெறி நீர்க்க டலும்
ஏழுல குமுட னேவிழுங்கி
மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும்
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர்
கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்
அண்டத் தமரர் பணிய நின்றார்
அச்சோவொருவரழகியவா. 9.2.9
1767
அன்னமும் கேழலும் மீனு மாய
ஆதியை நாகை யழகியாரை
கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க்கலி கன்றி குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை
ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார்,
மன்னவ ராயுல காண்டு மீண்டும்
வானவ ராய்மகிழ் வெய்துவரே. (2) 9.2.10