style="text-align: center; ">9ஆம் பத்து 4ஆம் திருமொழி
1778
காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏவாயி னூடியங்கும் எ·கில் கொடிதாலோ
பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே. (2) 9.4.1
1779
முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்
பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே. 9.4.2
1780
வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம்
செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள்
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே. 9.4.3
1781
பரிய இரணியன் தாகம் அணியுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு
பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்
அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே. 9.4.4
1782
வில்லால் இலங்கை மலங்கச் சரந்fதுரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்,
எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும்,
புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே. 9.4.5
1783
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்
அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்
செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே. 9.4.6
1784
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்
தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ
புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே. 9.4.7
1785
தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு
பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே. 9.4.8
1786
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,
ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே. 9.4.9
1787
பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை
கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே. (2) 9.4.10