9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

style="text-align: center; ">9ஆம் பத்து 8ஆம் திருமொழி

1818

முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார்

கலவியை விடுதடு மாறல்

அந்தர மேழும் அலைகட லேழும்

ஆயவெம் மடிகள்தம் கோயில்,

சந்தொடு மணியும் அணிமயில் தழையும்

தழுவிவந் தருவிகள் நிரந்து,

வந்திழி சாரல் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. (2) 9.8.1

1819

இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி

எழுமினோ தொழுதும் என்று இமையோர்

அண்டரும் பரவ அரவணைத் துயின்ற

சுடர்முடிக் கடவுள்தம் கோயில்

விண்டலர் தூளி வேய்வளர் புறவில்

விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்

வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.2

1820

பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப்

பெருநிலம் அருளின்முன் அருளி

அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும்

அளந்தவெம் மடிகள்தம் கோயில்

கணிவளர் வேங்கை நெடுநில மதனில்

குறவர்தம் கவணிடைத் துரந்த

மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.3

1821

சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச்

சுடுசரம் அடுசிலைத் துரந்து

நீர்மையி லாத தாடகை மாள

நினைந்தவர் மனம்கொண்ட கோயில்

கார்மலி வேங்கை கோங்கலர் புறவில்

கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்

வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.4

1822

வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய

மணிமுடி ஒருபதும் புரள

அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட

அமர்ச்செய்த அடிகள்தம் கோயில்

பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப்

பிரசம்வந் திழிதர பெருந்தேன்

மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.5

1823

விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று

விளங்கனிக் கிளங்கன்று விசிறி,

குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த

கூத்தவெம் மடிகள்தம் கோயில்

தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத்

தடவரைக் களிறென்று முனிந்து

மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.6

1824

தேனுகன் ஆவி போயுக அங்கோர்

செழுந்திரள் பனங்கனி யுதிர

தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர்

எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,

வானகச் சோலை மரகதச் சாயல்

மாமணிக் கல்லதர் நிறைந்து,

மானுகர் சாரல் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.7

1825

புதமிகு விசும்பில் புணரிசென் றணவப்

பொருகடல் அரவணைத் துயின்று,

பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த

பனிமுகில் வண்ணர்தம் கோயில்,

கதமிகு சினத்த கடதடக் களிற்றின்

கவுள்வழிக் களிவண்டு பருக,

மதமிகு சாரல் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.8

1826

புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள்

ஒத்தன பேசவும் உகந்திட்டு,

எந்தைபெம் மானார் இமையவர் தலைவர்

எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,

சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்

தாழ்வரை மகளிர்கள் நாளும்,

மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை

வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.9

1827

வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை

மாமணி வண்ணரை வணங்கும்,

தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல்

சூழ்வயல் ஆலிநன் னாடன்

கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன்

கலியன்வா யொலிசெய்த பனுவல்,

கொண்டிவை பாடும் தவமுடை யார்கள்

ஆள்வரிக் குரைகட லுலகே. (2) 9.8.10

Leave a Reply