9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

9ஆம் பத்து 6ஆம் திருமொழி

1798

அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர்,

பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்

தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில்

கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே. (2) 9.6.1

1799

துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள்,

பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்,

செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும்,

கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே. 9.6.2

1800

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்,

கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்,

ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி,

கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே. 9.6.3

1801

சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன்

உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும்,

இரவும் பகலும் ஈன்தேன் முரல, மன்றெல்லாம்

குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே. 9.6.4

1802

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்

ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும்,

மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான்,

கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே. 9.6.5

1803

தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி,

தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள்,

மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் வானில்

கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே. 9.6.6

1804

வல்லிச் சிறு_ண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற,

அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள்

சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான்,

கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே. 9.6.7

1805

நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,

ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள்,

தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும்

கூர்வாய் நாரை பேடையொ டாடும் குறுங்குடியே. 9.6.8

1806

நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,

சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,

என்றும் மிரவும் பகலும் வரிவண் டிசைபாட,

குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே. 9.6.9

1807

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்,

கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்,

கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை

நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே. (2) 9.6.10

Leave a Reply