9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

9ஆம் பத்து 3ஆம் திருமொழி

1768

தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு

பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய்

என்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம்,

புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே. (2) 9.3.1

1769

உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு

முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,

பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்

பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே. 9.3.2

1770

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு

தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து பின்

பேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம்

போது நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே. 9.3.3

1771

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்

நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன்

மங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர்

பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே. 9.3.4

1772

உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு

துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து பின்

தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம்,

புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே. 9.3.5

1773

எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு

வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம்

கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும்,

புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே. 9.3.6

1774

பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய்

இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்?

விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை

புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே. 9.3.7

1775

அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,

சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு,

உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை

புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே. 9.3.8

1776

ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப்

பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின்

ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப்

போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே. 9.3.9

1777

இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை

புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல்

கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை

வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே. (2) 9.3.10

Leave a Reply