திருமங்கையாழ்வாரின்
பெரிய திருமொழி
2ஆம் பத்து 1ஆம் திருமொழி
1048
வானவர் தங்கள் சிந்தை போலேன்
நெஞ்சமே. இனிதுவந்து, மாதவ
மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை,
கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. (2) 2.1.1
1049
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்
உகந்தவர் தம்மை, மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,
குறவர் மாதர்க ளோடு வண்டு
குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,
அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.2
1050
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்
ஏத்து வாருற வோடும், வானிடைக்
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்,
வண்டு வாழ்வட வேங்கடமலை
கோயில் கொண்டத னோடும், மீமிசை
அண்ட மாண்டிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.3
1051
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே.
பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர்
வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.4
1052
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப்
புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்
எங்கும் வானவர் தான வர்நிறைந்
தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.5
1053
துவரி யாடையர் மட்டை யர்சமண்
தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்,
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம்
கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,
அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே. 2.1.6
1054
தருக்கி னால்சமண் செய்து சோறுதண்
தயிரினால்திரளை,மி டற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
கோயில் கொண்டத னோடும், வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.7
1055
சேயனணியன் சிறியன் பெரிய னென்பது
சிலர்ப்பேசக் கேட்டிருந்
தே,என் னெஞ்சமென் பாய்,.எனக் கொன்று சொல்லாதே,
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி
வேங்க டமலை கோயில் மேவிய,
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.8
1056
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என்
நெஞ்சமென் பாய். துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரை யோனு மீசனும்
அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.9
1057
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க
டமலை கோயில் மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி
கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. (2) 2.1.10