9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து

9ஆம் பத்து 1ஆம் திருமொழி

1748

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய

வாளர வினணை மேவி

சங்கமா ரங்கைத் தடமல ருந்திச்

சாமமா மேனியென் தலைவன்

அங்கமா றைந்து வேள்விநால் வேதம்

அருங்கலை பயின்று எரி மூன்றும்

செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. (2) 9.1.1

1749

கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக்

கராம்கொளக் கலங்கியுள் நினைந்து

துவளமேல் வந்து தோன்றிவன் முதலை

துணிபடச் சுடுபடை துரந்தோன்

குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர்

கொய்ம்மலர் நெய்தலொண் கழனி

திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.2

1750

வாதைவந் தடர வானமும் நிலனும்

மலைகளும் அலைகடல் குளிப்ப

மீதுகொண் டுகளும் மீனுரு வாகி

விரிபுனல் வரியகட் டொளித்தோன்

போதலர் புன்னை மல்லிகை மௌவல்

புதுவிரை மதுமல ரணைந்து

சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.3

1751

வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி

வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண்

பன்றியாய் அன்று பார்மகள் பயலை

தீர்த்தவன் பஞ்சவர் பாகன்

ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்

து உயர்கொடி யொளிவளர் மதியம்,

சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.4

1752

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய்

மூவடி நீரொடும் கொண்டு

பின்னுமே ழுலகும் ஈரடி யாகப்

பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்

அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத்

தலைபுன லிலைக்குடை நீழல்

செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.5

1753

மழுவினால் அவனி அரசைமூ வெழுகால்

மணிமுடி பொடிபடுத்து உதிரக்

குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம்

தவிர்ந்தவன் , குலைமலி கதலிக்

குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும்

குளிர்தரு சூதம்மா தவியும்

செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.6

1754

வானுளா ரவரை வலிமையால் நலியும்

மலிகடல் இலங்கையார் கோனை

பானுசேர் சரத்தால் பனங்கனி போலப்

பருமுடி யுதிரவில் வளைத்தோன்

கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக்

கணமுகில் முரசநின் றதிர

தேனுலா வரிவண் டின்னிசை முரலும்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.7

1755

அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை

அஞ்சிடா தேயிட, அதற்குப்

பெரியமா மேனி யண்டமூ டுருவப்

பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்

வரையின்மா மணியும் மரகதத் திரளும்

வயிரமும் வெதிருதிர் முத்தும்

திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும்

திருக்கண்ணங் குடியுள் நின் றானே. 9.1.8

1756

பன்னிய பாரம் பார்மகட் கொழியப்

பாரத மாபெரும் போரில்

மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர்

மைத்துனர்க் குய்த்தமா மாயன்

துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும்

சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.9

1757

கலையுலாவல்குல் காரிகை திறத்துக்

கடல்பெரும் படையொடும் சென்று

சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற

திருக்கண்ணங் குடியுள்நின் றானை

மலைகுலா மாட மங்கையர் தலைவன்

மானவேல் கலியன்வா யொலிகள்

உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும்

வல்லவர்க் கில்லைநல் குரவே. (2) 9.1.10

Leave a Reply