9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

9ஆம் பத்து 5ஆம் திருமொழி

1788

தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த்

தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்

துவள என் னெஞ்சகம் சோரவீரும்

சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்

இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார்

என்னல மைந்துமுன் கொண்டுபோன

குவளை மலர்நிற வண்ணர்மன்னு

குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். (2) 9.5.1

1789

தாதவிழ் மல்லிகை புல்லிவந்த

தண்மதி யினிள வாடையின்னே

ஊதை திரிதந் துழறியுண்ண

ஓரிர வுமுறங் கேன் உறங்கும்

பேதையர் பேதைமை யாலிருந்து

பேசிலும் பேசுக பெய்வளையார்

கோதை நறுமலர் மங்கைமார்வன்

குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். 9.5.2

1790

காலையும் மாலையொத் துண்டுகங்குல்

நாழிகை யூழியின்f நீண்டுலாவும்,

போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும்

பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி

மாலவன் மாமணி வண்ணன்மாயம்

மற்று முளவவை வந்திடாமுன்

கோல மயில்பயி லும்புறவில்

குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். 9.5.3

1791

கருமணி பூண்டுவெண் ணாகணைந்து

காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும்

ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள

ஓரிர வுமுறங் காதிருப்பேன்

பெருமணி வானவ ருச்சிவைத்த

பேரரு ளாளன் பெருமைபேசி

குருமணி நீர்கொழிக் கும்புறவில்

குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.4

1792

திண்டிமி லேற்றின் மணியும் ஆயன்

தீங்குழ லோசையும் தென்றலோடு

கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற

கோல இளம்பிறை யோடுகூடி

பண்டையவல்லவிவைநமக்குப்

பாவியே னாவியை வாட்டஞ்செய்யும்

கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு

குறுங்யுஉடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.5

1793

எல்லியும் நன்பக லுமிருந்தே

ஏசிலும் ஏசுக ஏந்திழையார்

நல்லர் அவர்திறம் நாமறியோம்

நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை

வல்லன சொல்லி மகிழ்வரேனும்

மாமணி வண்ணரை நாம்மறவோம்

கொல்லை வளரிள முல்லைபுல்கு

குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.6

1794

செங்க ணெடிய கரியமேனித்

தேவ ரொருவரிங் கேபுகுந்து என்

அங்கம் மெலிய வளைகழல

ஆதுகொ லோ என்று சொன்னபின்னை

ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ

டாடு மதனை யறியமாட்டேன்

கொங்கலர் தண்பணை சூழ்புறவில்

குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.7

1795

கேவல மன்று கடலினோசை

கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என்

ஆவி யளவும் அணைந்துநிற்கும்

அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு

ஏவலங் காட்டி இவனொருவன்

இப்படி யேபுகுந் தெய்திடாமுன்

கோவலர் கூத்தன் குறிப்பறிந்து

குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.8

1796

சோத்தென நின்று தொழவிரங்கான்

தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்

போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான்

போயின வூரறி யேன் என்கொங்கை

மூத்திடு கின்றன மற்றவன்றன்

மொய்யக லம் அணை யாதுவாளா

கூத்த னிமையவர் கோன்விரும்பும்

குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.9

1797

செற்றவன் தென்னிலங் கைமலங்கத்

தேவர்பி ரான்திரு மாமகளைப்

பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட

பேரரு ளாளன் பெருமைபேசக்

கற்றவன் காமரு சீர்க்கலியன்

கண்ணகத் தும்மனத் துமகலாக்

கொற்றவன் முற்றுல காளிநின்ற

குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். (2) 9.5.10

Leave a Reply