திருவாய்மொழி முதல் பத்து

நம்மாழ்வார்

style="text-align: center; ">1ஆம் பத்து 4 ஆம்திருவாய்மொழி

 

2824

அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி

வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ? (2) 1.4.1

 

2825

என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்

என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?

முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்

முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே? 1.4.2

 

2826

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.

மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு

மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று , ஒருத்தி

மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. 1.4.3

 

2827

என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத

என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ

நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்

நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ? 1.4.4

 

2828

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,

நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்

மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.

மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. 1.4.5

 

2829

அருளாத நீரருளி யவராவி துவராமுன்

அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று

அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி

யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே? 1.4.6

 

2830

என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது

என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு

என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருவாய்ச்சொல்

என்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே? 1.4.7

 

2831

நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்

நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது

வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. 1.4.8

 

2832

நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,

வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,

வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?

ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. 1.4.9

 

2833

உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,

கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்

அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி

விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. 1.4.10

 

2834

அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை

வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த

அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்

வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. (2) 1.4.11