style="text-align: center;">1ஆம் பத்து 5 ஆம் திருவாய்மொழி
2835
வளவே ழுலகின் முதலாய்
வானோ ரிறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட
கள்வா. என்பன், பின்னையும்,
தளவேழ் முறுவல் பின்னைக்காய்
வல்லா னாயர் தலைவனாய்,
இளவே றேழும் தழுவிய
எந்தாய். என்பன் நினைந்துநைந்தே. (2) 1.5.1
2836
நினைந்து நைந்துள் கரைந்துருகி,
இமையோர் பலரும் முனிவரும்,
புனைந்த கண்ணி நீர்சாந்தம்
புகையோ டேந்தி வணங்கினால்,
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
வித்தாய், முதலில் சிதையாமே,
மனஞ்செய் ஞானத் துன்பெருமை
மாசூ ணாதோ மாயோனே. 1.5.2
2837
மாயோ னிகளாய் நடைகற்ற
வானோர் பலரும் முனிவரும்,
நீயோ னிகளைப் படை என்று
நிறைநான் முகனைப் படைத்தவன்
சேயோ னெல்லா அறிவுக்கும்,
திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும்
தாயோன் தானோ ருருவனே. 1.5.3
2838
தானோ ருருவே தனிவித்தாய்த்
தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந் தன்எம் பெருமானே. 1.5.4
2839
மானேய் நோக்கி மடவாளை
மார்வில் கொண்டாய். மாதவா.
கூனே சிதைய வுண்டைவில்
நிறத்தில் தெறித்தாய். கோவிfந்தா.
வானார் சோதி மணிவண்ணா.
மதுசூ தாநீ யருளாய் உ ன்
தேனே மலரும் திருப்பாதம்
சேரு மாறு வினையேனே. 1.5.5
2840
வினையேன் வினைதீர் மருந்தானாய்.
விண்ணோர் தலைவா. கேசவா.
மனைசே ராயர் குலமுதலே.
மாமா யன்னே. மாதவா.
சினையேய் தழைய மராமரங்கள்
ஏழும் எய்தாய். சிரீதரா.
இனையா யினைய பெயரினாய்.
என்று நைவன் அடியேனே. 1.5.6
2841
அடியேன் சிறிய ஞானத்தன்,
அறித லார்க்கு மரியானை
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி
புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை யடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்,
இதனில் மிக்கோர் அயர்வுண்டே? 1.5.7
2842
உண்டா யுலகேழ் முன்னமே,
உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும்
மனிசர்க் காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8
2843
மாயோம் தீய அலவலைப்
பெருமா வஞ்சப் பேய்வீய
தூய குழவி யாய்விடப்பால்
அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன்
மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மா னென்னம்மான்
அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. 1.5.9
2844
சார்ந்த இருவல் வினைகளும்
சரித்து மாயப் பற்றறுத்து
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்
திருத்தி வீடு திருத்துவான்,
ஆர்ந்த ஞானச் சுடராகி
அகலம் கீழ்மேல் அளவிறந்து,
நேர்ந்த வுருவாய் அருவாகும்
இவற்றி னுயிராம் நெடுமாலே. 1.5.10
2845
மாலே. மாயப் பெருமானே.
மாமா யனே. என்றென்று
மாலே யேறி மாலருளால்
மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழ ரிசைகாரர்
பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும்
வல்லார்க் கில்லை பரிவதே. 1.5.11