மாத சிவராத்திரிக்கும் மகாசிவராத்திரிக்கும் வேறுபாடு என்ன?

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
1733"/>

ஆன்மீக கேள்வி பதில். மகா சிவராத்திரி.
கேள்வி 3: மாத சிவராத்திரிக்கும் மகாசிவராத்திரிக்கும் வேறுபாடு என்ன?

பதில்: ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு அதிதேவதையை வேதம் தீர்மானித்துள்ளது. சதுர்த்தசி திதிக்கு பரமேஸ்வரன் அதிதேவதையாக கூறப்படுகிறார். அதே போல் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தசி அதாவது கிருஷ்ணபட்ச சதுர்த்தசி மாத சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி மகாசிவராத்திரி என்கிறோம்.

மாசி மாதம் சிவபெருமான் வழிபாட்டிற்கு சிறந்ததாக கூறப்படுகிறது. மாத சிவராத்திரி விரதத்தை நியமத்தோடு கடைபிடிப்பவர்கள் உள்ளார்கள். ஆண்டு முழுவதும் அந்த நியமத்தோடு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் எத்தனை பலனைப் பெறுவார்களோ அதே பலன் மகாசிவராத்திரி விரதத்தில் கிடைக்கிறது.

ஏனென்றால் ஒரு மாதத்திற்கு கிருஷ்ணபட்ச சதுர்த்தசி எத்தனை சிறப்பானதோ ஒரு ஆண்டுக்கு மாசி, பகுள சதுர்த்தசி அப்படிப்பட்ட சிறப்பானது. இதேபோல் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாதத்தில் முக்கியத்துவமுள்ள நாட்கள் உள்ளன. ஏகாதசி விரதம் எல்லா மாதத்திலும் உயர்ந்தது என்றாலும் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு உள்ளது அல்லவா?

அதேபோல் மாத சிவராத்திரி அனைத்தும் சிறந்ததே ஆனாலும் மகாசிவராத்திரி இன்னும் சிறப்பானது. அதேபோல் சிவராத்திரியன்று இரவில் வழிபடுவது என்பது இன்னும் சிறப்பானது. அதிலும் லிங்கோத்பவ காலம் என்பது அர்த்த ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு சிவ வழிபாடு செய்ய உகந்தது.

இதில் உள்ள பொருளை ஆராய்ந்தால்… சாதாரணமாக அனைவருக்கும் மூன்று சந்தியா காலங்களைப் பற்றி தெரியும். பிராத சந்தியா, மத்யான சந்தியா, சாயம் சந்தியா. இவற்றைத் தவிர நான்காவது சந்தியாகாலம் ஒன்று உள்ளது. அதனை துரீய சந்தியா என்பார்கள். அது நள்ளிரவு 12 மணியைக் குறிக்கிறது. அது அந்தர்முக நிலைக்குத் தகுந்தது.

வெளி உலக வாசனைகளைத் துறந்துவிட்டு அந்தர்முகமாக மனதினை பரமாத்மாவிடம் லயிக்கச் செய்து வழிபடுவதே துரீய சந்தியாகால வழிபாடு.

இந்த லயமே பிரளயம். பரமாத்மாவிடம் மனதை நிலைக்கச் செய்யும் தியான நிலை, அந்தர்முக ஸ்திதி, யோகத் தொடர்பான ராத்திரி. அந்த நிலையை நாம் மகாசிவராத்திரி யில் தரிசிக்க வேண்டும். அதனால்தான் மகா சிவராத்திரிக்கு அத்தனை முக்கியத்துவம் அளித்துள்ளார்கள்.

மாத சிவராத்திரியும் சிறப்பானது தான். ஆனால் அவை எல்லாவற்றையும் விட மகா சிவராத்திரிக்கு மேற்சொன்ன காரணங்களால் சிறப்பு கூடுகிறது.

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply