தை அமாவாசை; சிறப்பு வழிபாடுகள்!

ஆன்மிக கட்டுரைகள் சிவ ஆலயம் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

அமாவாசை பௌர்ணமி இரண்டுமே சிவ பூசைக்கு மிகச் சிறந்த நாட்கள். தைப் பூசம் தை அமாவாசை தை ஞாயிறு ஆகியவை மிகச் சிறந்த நாட்கள்.

தை அமாவாசையை அடுத்து வரும் சப்தமி ரத சப்தமி என்று பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. பொங்கல் போன்று இதுவும் சிப பக்தனான சூரியனை வழிபடும் நாள். ரத சப்தமி அன்றும் சர்க்கரைப் பொங்கலே முக்கிய நைவேத்தியம். நீராடும்போது எருக்கிலையோடு நீராடப்படும். கிழக்கே உதிக்கும் சூரியன் தெற்காகச் சென்று மேற்கே மறைதல் தட்சிணாயணம் எனப்படும். வடக்காகச் சென்று மறைதல் உத்தராயணம் எனப்படும்.

பத்தாவது ராசியான மகர ராசியில் சூரியன் நுழைவதால் மகர சங்கராந்தி எனப்படும் பத்தாவது மாதப் பிறப்பாகிய தை மாதம் முதல் நாள் உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. மகர சங்கராந்தி என்றால் மகரத்தால் வரும் நன்மை என்று பொருள். இதுவே தமிழில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக உள்ளது.

* அருக்கனில் சோதி அமைத்தோன் (திருவாசகம்)
* நாட்டம் மூவரில் பெற்றவன் (திருக்கோவையார்)
*அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ (அப்பர்)
* அட்ட மூர்த்தி அழகன் (திருவாசகம்)
*மாலை எழுந்த மதியே போற்றி ——- காலை முளைத்த கதிரே போற்றி கயிலை மலையானே போற்றி (அப்பர்) – என பரமேஸ்வரனால் படைக்கப்பட்ட சோதியாகவும் , ஈசனது முக்கண்ணில் ஒரு கண்ணாகவும், பஞ்ச பூதம் சூரியன் சந்திரன் ஆத்மா ஆகிய பரா பரனது எட்டுருவில் ஒரு உருவாகவும் பொலிவுறும் நெருப்புக் கோளமான சூரியனுக்கு அதிபதியான சூரிய தேவனது ஒரே ஒரு சக்கரம் கொண்ட தேர் ஏழாம் நாள் வடக்கு நோக்கித் திரும்புகிறது. இதனால் இதற்கு ரத சப்தமி என்று பெயர்.

தேர் வரைந்து பூசை செய்யப் படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேருக்குச் சக்கரம் ஒன்று, பாகனான அருணனுக்கோ கால்கள் இரண்டுமே இல்லை.

*புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித் தேரினான் பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் (சம்பந்தர் தேவாரம்)
*ஆழி ஒன்று ஈரடியும் இலன் பாகன் (மாணிக்க வாசகர், திருக்கோவையார்) – என்று திருமுறைகள் காட்டுகின்றன.

சூரிய தேவன் சிவ பூசை செய்து பரமேசுவரனது பேரருள் பெற்ற தலங்கள் பல. தஞ்சாவூருக்கு அருகே ஒரத்த நாடு பக்கம் உள்ள திருப்பரிதி நியமம் பரிதியப்பர் திருக்கோயில், சிதம்பரம் அருகே உள்ள திருவுச்சி (சிவபுரம்) உச்சி நாதேசுவரர் கோயில், திருவாரூர் அருகே உள்ள திருத்திலதைப்பதி மதிமுத்தர் கோயில் கும்ப கோணம் அருகே திருமங்கலக்குடி புராண வரதர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதர் கோயில் மற்றும் பலப் பல கோயில்கள் சூரிய தேவன் சிவ பூசை செய்து வரம் பெற்ற கோயில்கள்.

*சந்திரனொடு சூரியர் தாம் வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் (அப்பர்) – என சூரியனும் சந்திரனும் சிறந்த சிவபக்தர்கள் ஆதலால் பழைமையான எல்லா ஈசுவரன் கோயில்களிலும் திருமூலஸ்தான லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே ஒரு புறம் சூரியனும் மறு புறம் சந்திரனும் இருப்பதைக் காணலாம்.

  • சிவப்பிரியா

Leave a Reply