இங்குள்ள பிரதான அம்பாளின் திருநாமம், “ஸ்ரீகாமுகாம்பாள்’.
சிவபெருமானால் பொசுக்கப்பட்ட மன்மதன், பின் அவரருளால் ரதி தேவிக்கு மட்டும் தெரியுமாறு வரம் பெற்றான். பிறகு இத்தலத்துக்கு வந்து அம்பிகையின் அருளால், இழந்த மலர்க் கணைகளையும் வில்லையும் பெற்றதாகத் தல புராணம் கூறுகின்றது. காம தேவனுக்கு அருளியதால் “காமுகாம்பாள்’ என்று இத்தல நாயகி அழைக்கப்பட்டாள். (இப்புராணம், வேறு சில தலங்களுக்கும் கூறப்படுகின்றது).
துர்க்கையம்மன்
இக்கோயிலில் மகிஷனின் தலைமேல் நின்ற கோலத்தில் வடக்கு திசை நோக்கி அருள்புரிகிறாள் துர்க்கை. எட்டு திருக்கரங்கள் அம்பிகைக்கு அணி செய்கின்றன. இரண்டு கரங்களில் வரத அபய முத்திரை தாங்கியும், ஐந்து திருக்கரங்களில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் ஆகியவை தரித்தும், ஓர் இடக்கரத்தை தொடையில் பதித்தும் அன்னை நிற்கும் கோலம் அற்புதமானது! காணக் காணத் தெவிட்டாதது! தேவியின் முன்னே ஸ்ரீமஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மூக்குத்தி
துர்க்கா தேவியின் சிலா விக்ரகத்தில் இடது நாசியில் மூக்குத்தி அணிவதற்காக ஒரு சிறு துவாரம் அமைந்துள்ளது. இது பற்றிய கதையொன்று, இப்பகுதியில் பரவலாகக் கூறப்படுகிறது. இந்தத் திருவுருவத்தில் மூக்குத்தி அணிவிப்பதற்கான அமைப்பை சிற்பி ஏற்படுத்தவில்லை. மிகவும் பக்தியுடைய அந்தச் சிற்பி, சிலையை வடித்து முடித்த திருப்தியில் உறங்கப் போனார்.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய துர்க்கை, “”நான் மூக்குத்தி அணிய வேண்டும்” என்று கேட்க, சிற்பியோ “”விக்கிரக வேலை பூர்த்தியாகிவிட்டதே தாயே! இந்த நேரத்தில் உன் நாசியில் நான் கை வைத்து அது பின்னமாகிவிட்டால் என் மனம் மட்டும் அல்லாமல் ஊர் மக்கள் மனமும் சங்கடப்படுமே! தவிர எனது இத்தனை நாள் உழைப்பும் வீணாகுமே” என்று கனவிலேயே கவலை தெரிவித்தாராம். அதற்குப் புன்னகையைப் பதிலாக்கிய அம்பிகை, “”கவலைப்படாதே! உன் பொருட்டு நானே இத்திருவிளையாடலை நிகழ்த்துவேன். மூக்குத்தி அணிய முடிவெடுத்துவிட்டேன். நாளை பார்” என்று சொல்லி மறைந்தாளாம்.
மறுநாள் காலை, இடது நாசியில் மூக்குத்தி இடுமளவு துவாரம் இருந்ததாம். இன்றும் விசேஷ தினங்களில் அம்பிகைக்கு மூக்குத்தி அணிவித்து அழகு பார்க்கின்றனர் அன்பர்கள். தனது “சாந்நித்யத்தை’ காட்ட அம்பிகை நிகழ்த்திய அருள் விளையாட்டிது.
மேலும் விழா உள்ளிட்ட சிறப்பு நாட்களில் இந்த துர்க்கையின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவதை தரிசித்திருப்பதாக அடியார்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீசாமுண்டீஸ்வரி துர்க்கைக்கு நேர் எதிரே சுமார் இருபதடி உயரத்தில் சூல வடிவில் காணப்படுகிறாள் சாமுண்டீஸ்வரி. சூல வடிவிலான இந்தத் தேவிக்கு பூஜை செய்யப் படிக்கட்டுகள் உள்ளன. இது தவிர ஐந்தடி நீளத்திலும், ஓரடி நீளத்திலும் மூன்று சூலங்கள் இருக்கின்றன. எலுமிச்சம் பழத்தில் தேன் தடவி இந்தச் சூலத்தில் குத்தி வழிபட்டால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும் என்பது நம்பிக்கை.
இப்படிப் பல பெருமைகள் கொண்ட ஆலயம் மிகவும் சிதிலமடைந்து கிடந்தது. மண்டபங்களும், விமானங்களும் பொலிவிழந்து போயின. அடியார்களின் அயராத முயற்சியால் திருப்பணி துவங்கி, கடந்த 2008-ம் ஆண்டு “பாலாலயம்’ செய்யப்பட்டது. படிப்படியாக முக்கியத் திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. இம்மாதம் 21-ம் தேதி, குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்னமும் நிறைவேற வேண்டிய திருப்பணிகள் பல உள்ளன. அருள் மணம் கொண்ட உள்ளங்கள் திருப்பணிக்கு உதவலாம்.