நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார்

2462:
கதவு மனமென்றும் காணலா மென்றும்,
குதையும் வினையாவி தீர்ந்தேன், – விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து. 81

2463:
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே?, – அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து. 82

2464:
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், – சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர். 83

2465:
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில். 84

2466:
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், – கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன். 85

2467:
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை. 86

2468:
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர். 87

2469:
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, – செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது. 88

2470:
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89

2471:
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், – மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர் 90

Leave a Reply