நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார்

2402:
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள், – இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு ? 21

2403:
அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின், – குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து 22

2404:
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, – மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23

2405:
நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும்
இகழ்ந்தா யிருவரையும் வீயப், – புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை 24

2406:
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று 25

2407:
மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்குமா று 26

2408:
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது 27

2409:
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, – இதுவிலங்கை
தானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு. 28

2410:
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், – மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன். 29

2411:
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல். 30

Leave a Reply