திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வாரின் திருச்சரிதம̷் 0;

பொருட்களை வேண்டுமானால் துலாக்கோலில் எடைபோடலாம்; ஆனால் ஒரு ஊரையே துலாக்கோலில் நிறுக்க முடியுமா?

முடிந்திருக்கிறதே… நம்மால் முடியாது, ஆனால் பிரமன் நினைத்தால் முடியுமல்லவா…

ஆம். இது நடந்ததாகச் சொல்லப்படுவது வேத காலத்தில். பிருகு, அத்திரி மகரிஷி, வசிஷ்டர், பார்க்கவர் போன்ற முனிவர்கள் பூமிக்குச் சென்று தவமியற்ற வேண்டும் என்று எண்ணினர். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு எண்ணம் உதித்தது. அந்த எண்ணம் என்னவென்றால், தாங்கள் தவமியற்றும் இடம் பகவான் விஷ்ணுவால் அவருடைய மகிமையால், உலகிலேயே மிகச் சிறந்த தலமாக இருக்க வேண்டும் என்பதுதான்!

முனிவர்கள் அனைவரும் பிரமனிடம் சென்றார்கள். தங்கள் எண்ணத்தைத் தெரிவித்தார்கள். பிரமன் ஒருகணம் யோசித்தான். பிறகு இதுதான் அந்தத் தலம் என்று சொல்லி, திருமழிசைத் தலத்தைச் சுட்டிக் காட்டினான். ஆனால் அதை முனிவர்கள் நம்ப வேண்டுமே? தேவனே இது எந்த வகையில் உலகிற் சிறந்த தலம் என்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

பிரம்மதேவன் உடனே இந்தத் தலத்தை நிறுத்துக் காட்டிவிடுகிறேன் என்று சொல்லி, ஒரு துலாக்கோலில் ஒரு தட்டில் மற்ற எல்லாத் தலங்களையும் வைத்து, இந்தத் திருமழிசைத் தலத்தை மற்றொரு தட்டில் வைத்து எடை போட்டுக் காட்டினார். ஆச்சரியப்படும் விதத்தில், மற்ற எல்லாத் திருத்தலங்களையும் சேர்ந்த தட்டைவிட கனத்தால் அதிகரித்து திருமழிசைத் தலம் இருந்த தட்டு மட்டும் கீழே தாழ்ந்து இத்தலத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்தது. மறுகணம் தேவர்கள் சந்தோஷ மிகுதியால் ஆர்ப்பரித்து, பிரம்மதேவனே, இந்தத் தலத்தையே நாங்கள் எங்கள் தவத்துக்கு ஏற்ற இடமெனத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லி பூரிப்படைந்தனர். இந்தத் தலமே மஹிசாரண்யம் என்று பெயர் பெற்றுப் பின்னர் திருமழிசை என்று பெயர் பெற்றது.

பிரம்மதேவன் இந்தத் தலத்தை துலாக்கோலில் எடைபோட்டு இதன் பெருமையை உணர்த்திய செய்தியை, திருக்கச்சி நம்பிகள் தம்முடைய ஒரு வெண்பா மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

உலகு மழிசைய முள்ளுணர்ந்து தம்மில்

புலவர் புகழ்க் கோலால் தூக்க – உலகுதன்னை

வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே

வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசை திருத்தலத்தில் உள்ள ஆலயத்தில் ஒரு சிலா உருவம் இந்தக் கதையைச் சொல்லும் வண்ணம் உள்ளது. மேற்கண்ட இந்தப் பாடலில் புலவர் என்று திருக்கச்சி நம்பிகள் குறிப்பிடும் பிரம்மதேவன் துலாக்கோல் ஏந்தி நிற்கும் காட்சியைச் சித்திரிக்கும் அந்த உருவம் இந்தக் கதையைச் சொல்லும்.

அதுசரி, ஏன் அனைத்து திவ்விய தேசங்களைக் காட்டிலும் இந்தத் தலம் உயர்ந்தது என்று பிரம்மதேவன் காட்டினான் என்றால், அது அந்த மண்ணில் ஒரு மகானின் அவதாரம் நிகழப் போவதைக் காட்டத்தான் என்பது புரியும். ஸ்ரீமந் நாராயணின் மனத்துக்கு உகந்த இடமாகவும் மாறிப்போனதற்குக் காரணம் இங்கு அவரையே சொன்னபடி கேட்கச் செய்த ஒரு பிள்ளை அவதரிக்க இருப்பதன் காரணத்தால்தான்.

அந்தப் பிள்ளை, பெருமாளுக்கே மிகப் பிரியமான பிள்ளை. அந்தப் பிள்ளை சொன்னதெல்லாம் பெருமாள் மனமுவந்து கேட்டு நடந்திருக்கிறார். பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் என்றால் பெருமாளும் சுருட்டிக் கொண்டு அவரோடு நடந்திருக்கிறார். பின்னர், பழையபடி பைந்நாகப் பாய் விரித்துக் கொள் என்றால், தந்தையான அவர் அந்தப் பிள்ளையின் சொற்படி கேட்டு அப்படியே செய்திருக்கிறார். அப்படி படுத்துக்கொண்டிருந்த பெருமாளைப் பார்த்து ஓரிடத்தில், என்ன பெருமாளே வந்தது கூடத்தெரியாமல் நீர் அப்படியே படுத்துக்கொண்டிருக்கிறீரே என்று செல்லமாகக் கேட்க, அவரும் பிள்ளையின் சொல்லுக்காக எழுந்திருந்து அவருடன் பேசவும் செய்திருக்கிறார். இப்படியெல்லாம் மகிமைகளை நடத்திக் காட்டிய அந்தப் பிள்ளைதான், திருமழிசை திருத்தலத்தில் அவதரித்த திருமழிசையாழ்வார்.

 

Leave a Reply