நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார்

2452:
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71

2453:
இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்? 72

2454:
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த
பண்டைத்தா னத்தின் பதி. 73

2455:
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லதொன் றேத்தாதென் நா. 74

2456:
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் – பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு. 75

2457:
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட்ட தற்பு. 76

2458:
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், – எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு. 77

2459:
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, – வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங்
காரலங்க லானமையா லாய்ந்து. 78

2460:
ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், – ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து. 79

2461:
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன், – பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு, படுநரகம்
வீடின வாசற் கதவு. 80

Leave a Reply