திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

 

 

(சங்கராபரணம் ராகம் – திரிபுடை தாளம்)

842:
பண்ணுலாவு மென்மொழிப்ப டைத்தடங்க ணாள்பொருட்டு
எண்ணிலாவ ரக்கரைநெ ருப்பினால்நெ ருக்கினாய்,
கண்ணலாலொர் கண்ணிலேன்க லந்தசுற்றம் மற்றிலேன்,
எண்ணிலாத மாய.நின்னை யென்னுள்நீக்க லென்றுமே. (91)

843 :
விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார்,
கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாய. வேலைநீர்,
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு,
அடைக்கலம்பு குந்தவென்னை யஞ்சலென்ன வேண்டுமே. (92)

844:
சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே,
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே,
கரும்பிருந்த கட்டியே.க டல்கிடந்த கண்ணனே,
இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே. (93)

845:
ஊனின்மேய ஆவிநீஉ றக்கமோடு ணர்ச்சிநீ,
ஆனில்மேய ஐந்தும்நீஅ வற்றுள்நின்ற தூய்மைநீ,
வானினோடு மண்ணும்நீவ ளங்கடற்ப யனும்நீ,
யானும்நீய தன்றியெம்பி ரானும்நீயி ராமனே. (94)

846:
அடக்கரும்பு லன்கள்ஐந்த டக்கியாசை யாமவை,
தொடக்கறுத்து வந்துநின்தொ ழிற்கணின்ற வென்னைநீ,
விடக்கருதி மெய்செயாது மிக்கொராசை யாக்கிலும்,
கடற்கிடந்த நின்னலாலொர் கண்ணிலேனெம் மண்ணலே. (95)

847:
வரம்பிலாத மாயைமாய. வையமேழும் மெய்ம்மையே,
வரம்பிலூழி யேத்திலும்வ ரம்பிலாத கீர்த்தியாய்,
வரம்பிலாத பல்பிறப்ப றுத்துவந்து நின்கழல்,
பொருந்துமாதி ருந்தநீவ ரஞ்செய்புண்ட ரீகனே. (96)

848:
வெய்யவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்துசீர்க்
கைய,செய்ய போதில்மாது சேருமார்ப நாதனே,
ஐயிலாய வாக்கைநோய றுத்துவந்து நின்னடைந்து,
உய்வதோரு பாயம்நீயெ னக்குநல்க வேண்டுமே. (97)

849:
மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்து,நின்க ணாசையேதொ டர்ந்துநின்ற நாயினேன்,
பிறந்திறந்து பேரிடர்ச்சு ழிக்கணின்று நீங்குமா,
மறந்திடாது மற்றெனெக்கு மாய.நல்க வெண்டுமே. (98)

850:
காட்டினான்செய் வல்வினைப்ப யன்றனால்ம னந்தனை,
நாட்டிவைத்து நல்லவல்ல செய்யவெண்ணி னாரென,
கேட்டதன்றி யென்னதாவி பின்னைகேள்வ. நின்னொடும்,
பூட்டிவைத்த வென்னைநின்னுள் நீக்கல்பூவை வண்ணனே. (99)

851:
பிறப்பினோடு பேரிடர்ச் சுழிக்கண்நின்றும் நீங்குமஃது,
இறப்பவைத்த ஞானநீச ரைக்கரைக்கொ டேற்றுமா,
பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம்,
பெறற்கரிய மாயனே. எனக்குநல்க வேண்டுமே. (100)

Leave a Reply