திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

thiruvannamalai deepam kodiyetram

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.24 திங்கள் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நவ.24 திங்கள் அன்று நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அண்ணாமலையார் சந்நிதி எதிரேயுள்ள தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைத்தனர்.

கொடியேற்றத்தின் போது பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வந்தனர். இரவு வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் வீதியுலா நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. தீபத் திருவா நடைபெறும், காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் கோவில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள் . வரும் 29-ந் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், மறு நாள் 30-ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெறுகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீப தரிசனம் டிச.3- ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆட, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

thiruvannamalai deepa invitation

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025:

விழா குறித்த அட்டவணை விவரம்

நவம்பர் 24 திங்கள் – கொடியேற்றம் (காலை 6 முதல் 07.15 வரை)

நவம்பர் 27 வியாழன் – வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனம்

நவம்பர் 28 வெள்ளி – வெள்ளி ரிஷப வாகனம்

நவம்பர் 29 சனி – வெள்ளி ரதம்

நவம்பர் 30 ஞாயிறு – பஞ்சமூர்த்திகள் மகா ரதம் (காலை 6 மணி முதல் 07.30 மணிக்குள் வடம் பிடித்தல்)

டிசம்பர் 03 புதன் – பரணி தீபம் (காலை 4 மணி), மகா தீபம் (மாலை 6 மணி)திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும்.

காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தையும் தரிசிப்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மகாதீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்துபவர்களும் ஆன்லைன் வழியாக காணிக்கை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவில் சுமார் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீபத் திருவிழாவின் போது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால், நெரிசலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி காவல் துறை டிஜிபி மற்றும் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பக்தா்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம், நடப்பாண்டும் பின்பற்றப்படும். காா்த்திகை தீபத் திருவிழாவை பக்தா்கள் காண வசதியாக கோயிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 15,000 போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனா். 88 குற்றத் தடுப்புக் குழுக்கள், 87 சதி செயல்கள் தடுப்புக் குழுக்கள், கிரிவலப் பாதையில் பக்தா்களை துன்புறுத்துவதைத் தடுக்கவும், பணம் பறிப்பதைத் தடுக்கவும் சிறப்புக் குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாட வீதிகளில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழா நாளில், அதிக விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பக்தா்களின் வசதிக்காக 7 மருத்துவக் குழுக்களை நியமிக்க சுகாதாரத் துறையிடம் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது – என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து, கார்த்திகை தீப விழா அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழாவை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் என நம்புகிறோம். கார்த்திகை தீப விழா, தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று. கடந்த ஆண்டுகளில் பெருந்திரளில் பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல், சில சம்பவங்களை ஏற்படுத்தியது என தெரிவித்த நீதிபதி விசாரணையை வியாழக்கிழமைக்கு (நவ.27) ஒத்திவைத்தார்.



Leave a Reply