திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

(கல்யாணி ராகம் – ரூபக தாளம்)

812:
நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்,
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்,
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே. (2) (61)

813:
கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்,
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்,
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்,
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்ப துன்னையே (2) (62)

814:
நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்,
சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே,
குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்,
நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே? (63)

815:
நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து,
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்,
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்,
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே. (64)

816:
நிற்பதும்மொர் வெற்பகத்தி ருப்பும்விண்கி டப்பதும்,
நற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்,
அற்புதன னந்தசயன னாதிபூதன் மாதவன்,
நிற்பதும்மி ருப்பதும்கி டப்பதும்என் நெஞ்சுளே. (65)

817:
இன்றுசாதல் நின்றுசாத லன்றியாரும் வையகத்து,
ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ,
அன்றுபார ளந்தபாத போதையுன்னி வானின்மேல்,
சென்றுசென்று தேவராயி ருக்கிலாத வண்ணமே? (66)

818:
சண்டமண்ட லத்தினூடு சென்றுவீடு பெற்றுமேல்
கண்டுவீடி லாதகாத லின்பம்நாளு மெய்துவீர்,
புண்டரீக பாதபுண்ய கீர்த்திநுஞ்செ விமடுத்து
உண்டு,_ம்மு றுவினைத்து யருள்நீங்கி யுய்ம்மினோ. (67)

819:
முத்திறத்து வாணியத்தி ரண்டிலொன்று நீசர்கள்,
மத்தராய்ம யங்குகின்ற திட்டதிலி றந்தபோந்து,
எத்திறத்து முய்வதோரு பாயமில்லை யுய்குறில்,
தொத்துறத்த தண்டுழாய்நன் மாலைவாழ்த்தி வாழ்மினோ. (68)

820:
காணிலும்மு ருப்பொலார்செ விக்கினாத கீர்த்தியார்,
பேணிலும்வ ரந்தரமி டுக்கிலாத தேவரை,
ஆணமென்ற டைந்துவாழும் ஆதர்காள்.எம் மாதிபால்,
பேணிநும்பி றப்பெனும்பி ணக்கறுக்க கிற்றிரே. (69)

821:
குந்தமோடு சூலம்வேல்கள் தோமரங்கள் தண்டுவாள்,
பந்தமான தேவர்கள்ப ரந்துவான கம்முற,
வந்தவாண னீரைஞ்நூறு தோள்களைத்து ணித்தநாள்,
அந்தவந்த வாகுலம மரரேய றிவரே. (70)

Leave a Reply