திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

 

ஆழ்வார் சொன்ன வண்ணம் பெருமாள் செய்தார̷் 0;

அந்த நேரத்தில்தான் கணிகண்ணன் அவரைத் தேடி வந்தார். அவர் திருமழிசையாரின் திருவருள் பெற்று, அவருடைய சீடராகி தொண்டுகள் பல செய்து வந்தார். இவ்வாறு இருக்கும்போது கிழவி ஒருத்தி திருமழிசையாரின் பெருமைகளைக் கேள்விப்பட்டு வந்து, நாள்தோறும் அவர் உள்ள இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்தி கோலமிட்டு வந்தாள். ஒருநாள் திருமழிசையாழ்வார் கண் விழித்தபோது, அவளை நோக்கி, ஓபெருமாட்டி! உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ என்ன விரும்புகிறாய்?ஔ என்று கேட்டார்.

அதற்கு உடல் தளர்ந்த அந்தக் கிழவி ஓஎன்னை வாட்டி வருத்தும் கிழப் பருவம் என்னை விட்டு நீங்கினால் போதும்!ஔ என்று வரம் கேட்டாள். திருமழிசையாரும் புன்முறுவல் பூத்து, ஓஅப்படியே ஆகட்டும்ஔ என்றவுடனேயே, கிழவியின் நரையும் மூப்பும் நீங்கி இளம் குமரியாக மாறினாள். தன் அழகைக் கண்டு தானே சொக்கிப் போனாள் அவள். திருமழிசையாழ்வாரைத் தொழுது அவரை வியந்து போற்றி வணங்கி வீடு சென்றாள்.

ஒருநாள் அவள் தன் வீட்டு மேல்மாடத்தில் நின்றுகொண்டு வீதியை நோக்கிக்கொண்டிருந்தாள். அப்போது காஞ்சியை ஆண்டுவந்த பல்லவ மன்னன் பட்டத்து யானையின் மேல் அமர்ந்து பவனி வந்தான். வீட்டின் மேல் மாடத்தில் நின்றுகொண்டிருந்த இந்த அழகுக் கன்னியைக் கண்டான். அவன் மனம் அவள் அழகில் மயங்கியது. அந்த மயக்கத்துடனேயே அரண்மனைக்குத் திரும்பினான் மன்னன். எண்ணம் முழுதும் அந்தக் கன்னியே ஆக்கிரமிக்க, தன் விருப்பத்தை அரண்மனை சேவகர்களிடம் கூறி, அந்தப் பெண்ணை அரண்மனைக்கு அழைத்துவரச் சொன்னான்.

மன்னன் சொல்லைத் தட்டாமல் அரண்மனைக்கு வந்த அந்தப் பெண்ணிடம், மன்னன் தன் காதல் வார்த்தைகளைக் கூறி, அவளைப் பட்டத்து ராணியாக்கும் தன் விருப்பத்தையும் சொன்னான். அவளும் மன்னனின் விருப்பத்தை உடனே ஏற்றாள். இருவரும் மணம் புரிந்து அந்தப்புர வாழ்க்கையை மகிழ்ச்சியுடனேயே கழித்து வந்தார்கள்.

நாட்கள் சென்றன. மன்னனுக்கு வயதாகிக் கொண்டு வருவது அவனுடைய நரை முடி, உடல் தளர்ச்சி போன்றவை மூலம் தெரிந்தது. முன்னைப்போல் அந்தப்புரத்தில் அவனால் மகிழ்ச்சியோடு இருக்க முடியவில்லை. ஆனால்… ஆனால்…

இந்த மகாராணி மட்டும் இப்படி கட்டுடல் குலையாமல், இளமை அழகு குறையாமல் எப்படி இருக்கிறாள்? மன்னன் ஆச்சர்யப்பட்டுப் போனான். அதை அவளிடமே கேட்டும் விட்டான் .

ஓவயதான காரணத்தால் நானோ கிழவனாகிக் கொண்டு வருகிறேன். ஆனால் நீ மட்டும் எப்படி இன்னும் இளமைப் பொலிவோடு அழகாகத் திகழ்கிறாய்? உன் அழகுக்கும் இளமைக்கும் ஏதேனும் ரகசியம் உண்டோ ?ஔ என்று கேட்க, மன்னனிடம் பொய் ஏதும் கூற விரும்பாத அரசி, தனக்கு இளமை எப்படி வந்தது என்ற வரலாற்றைக் கூறினாள்.

ஓமன்னர்பெருமானே! பைந்தமிழால் பரமனுக்குப் பாட்டிசைக்கும் திருமழிசையாழ்வார் அருளால் எனக்குக் கிடைத்த இளமை அழகு இது. அவருடைய சீடர் கணிகண்ணர் தினமும் பிட்சை ஏற்க நம் அரண்மனைக்கு வருகிறார். நீங்கள் அவருடைய உதவி பெற்று, ஆழ்வார் திருவாக்கு அருளைப் பெற்றால் நீங்களும் என்றென்றும் இளமை அழகோடு திகழலாம்…ஔ என்றாள்.

மறுநாள் அரண்மனைக்கு வரப்போகும் கணிகண்ணனின் வரவுக்காக பல்லவன் காத்திருந்தான். பிட்சை ஏற்க வந்த கணிகண்ணனைக் கண்ட அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. கணிகண்ணனை அழைத்த மன்னன், தன் உள்ளக் கிடக்கையைத் தெரியப்படுத்தினான். ஓசீடரே தங்களுக்கு ஒரு வேண்டுகோள்… தங்கள் குருவான திருமழிசையாழ்வாரை இந்த அரண்மனைக்கு அழைத்துவாருங்கள். அவர் அருள் பெறவேண்டும்…ஔ என்று கேட்டுக் கொண்டான்.

கணிகண்ணருக்கோ ஆச்சர்யம். ஏன் ஆழ்வாரை இந்த மன்னன் அரண்மனைக்கு அழைக்க வேண்டும்? என்று யோசித்தவாறே, ஓமன்னா! அவர் இதுபோன்று எங்கும் எவர் அரண்மனைக்கும் வரமாட்டார்ஔ என்று மறுமொழி உரைத்தான்.

சரி! அப்படியானால் எனக்கு இளமை அழகு என்றென்றும் வாய்க்க உம் வாயால் நீரே என்னைப் பற்றிப் பாடி விடுமே!ஔ என்று கேட்டான் மன்னன்.

பரமனைப் பாடும் வாயால் பாமரனைப் பாடும் குணம் பெற்றவன் யானில்லை! மனிதரைப் பாடிப் பிழைக்கும் புலவனும் அல்லன்! ஆகவே என்னால் உம்மைப் பாடமுடியாது…ஔ என்று பதிலுரைத்தான் கணிகண்ணன்.

நாட்டை ஆளும் மன்னன் தெய்வத்துக்குச் சமானமன்றோ? ஆகவே நீர் ஏன் என்னைப் பாடக்கூடாது? நீர் என்னைப் பாடுவது அந்தத் திருமாலையே பாடுவதற்குச் சமமல்லவா? ஆகவே பாடும்..ஔ என்றான் மன்னன்.

அப்படியா.. சரி இதோ பாடுகிறேன்…ஔ என்று சொல்லி ஒரு பாடலைப் பாடினான் கணிகண்ணன்.

ஆடவர்கள் எங்கண் அகல்வார் அருள்சுரந்து

பாடகமும் ஊரகமும் பாம்பணையும் – நீடியமால்

நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ

மன்னார் பொழிற்கச்சி பாண்டி.

– இப்பாடலைக் கேட்டு மன்னனுக்குக் கோபம்தான் வந்தது.

என்ன கணிகண்ணரே! என்னைப் பற்றி பாடச் சொன்னால், கோயிலில் படுதிருக்கும் திருமாலைப் பாடுகிறீரே! என்று சினந்து கேட்டான்.

அதற்கு கணிகண்ணன் குறும்போடு பதிலிறுத்தான்…

நீர்தானே சற்றுமுன் சொன்னீர்… மன்னனும் திருமாலும் ஒன்று; அவரைப் பாடினால் என்ன? மன்னனைப் பாடினால் என்ன? இரண்டும் ஒன்றுதான் என்றீரே! அதனால்தான் நான் திருமாலைப் பாடினேன். அப்படிப் பார்த்தால் அது உம்மையும் பாடியதாகத்தானே அர்த்தம்… என்று குறும்பாகச் சொன்னான்.

மன்னனுக்கு கோபம் தலைக்கேறியது. என் சொல்லையும் மீறி என்னைப் பாடாத நீர் இனிமேல் என் நகரில் இருக்கக்கூடாது. நீர் உடனே இந்த நகரை விட்டு வெளியேறி விடும் என்று ஆணையிட்டான்.

கணிகண்ணரோ, ஓமன்னா… நான் பாடிப் பரவும் அந்தப் பரந்தாமன் உம் நகரத்துக் கோயிலில் மட்டும் உறங்குவதில்லை… நான் இந்த நகரை விட்டுப் போய்விடுகிறேன்.ஔ என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அந்த அரண்மனையை விட்டு வெளியேறினான்.

ஆழ்வாரிடம் சென்று அவரடி பணிந்து அரண்மனையில் நடந்தவற்றைக் கூறினான் கணிகண்ணன். ஓசுவாமி நான் இந்த நகரை விட்டுப் போகின்றேன். எனக்கு விடை கொடுங்கள்ஔ என்று இறைஞ்சி நின்றான்.

ஆழ்வார் மனம் துணுக்குற்றது. தம் பிரியமுள்ள சீடன் தன்னையும் இந்த நகரையும் விட்டுப் பிரிந்து போக அனுமதி கேட்கிறான். அவனை விட்டுப் பிரிந்திருந்து தாம் மட்டும் இந்த நகரத்தில் எப்படி இருப்பது என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது.

ஓமெய்யன்பரே நீர் இந்நகரை விட்டுப் போவதானால் நான் மட்டும் இங்கு இருப்பேனா? நானும் உம்மோடு வருகிறேன். சற்று இங்கே இரும். ஆலயத்தில் அரிதுயில் புரியும் நம்பெருமானையும் எழுப்பிக் கொண்டு வருகிறேன்ஔ என்று சொல்லிவிட்டு திருவெஃகா கோவிலுள் சென்றார். அங்கே பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை நோக்கித் துதித்து, ஓகச்சி மணிவண்ணா, இவ்வூரைவிட்டு கணிகண்ணன் போகிறான். செந்நாப் புலவனான நாணும் துணிந்து போகிறேன். நீ இங்கு படுத்துக்கிடக்க வேண்டாம் . நீயும் உன் பாம்புப் படுக்கையான பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கிளம்புஔ என்று வேண்டிக்கொள்ளும் விதமாக பின்வரும் பாடலைப் பாடினார் .

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா – துணிவுடைய

செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

என்று வேண்டினார். அவ்வளவுதான்! கோயிலில் பள்ளி கொண்டிருந்த பெருமாளும் அரிதுயில் நீங்கி, துள்ளியெழுந்து, தம் பாம்பணையைச் சுருட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார். திருமழிசைப்பிரானை பின்தொடர்ந்து செல்லலானார்.

பெருமாள் புறப்பட்டுப் போனதால் மற்ற திருக்கோயில்களில் உள்ள தெய்வங்களும் மற்ற தேவர்களும் அவ்விறைவனைப் பின் தொடர்ந்து போனார்கள். அவர்கள் எல்லோரும் அந்நகரைவிட்டு நீங்கிச் சென்று, இரவு ஒரு சோலையில் தங்கினார்கள். அதனால் திருவெஃகா நகரம் களையிழந்தது. சூரியனும் அந்த நகரை விட்டு நீங்க, இருள் சூழ்ந்தது. பயிர்கள் முதலான எல்லா உயிர்களும் வாடின. எங்கும் வெறுமை நிறைந்தது. இதனால் பல்லவ மன்னன் மனம் பதைபதைத்தது. இதுபற்றிய விவரம் அறிந்து வருமாறு தன் ஒற்றர்களுக்குக் கட்டளையிட்டான் மன்னன்.

திருவெஃகா கோயிலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் தம் பாம்புப் படுக்கையை சுருட்டிக் கொண்டு திருமழிசையாழ்வாரையும், கணிகண்ணனையும் பின் தொடர்ந்து போய்விட்டதுதான் காரணம் என்பதை அறிந்து, மன்னன் தன் தவறுணர்ந்தான். உடனே தம் மதியமைச்சர்களோடு புறப்பட்டு, அவர்கள் தங்கியுள்ள சோலைக்கு வந்தான். கணிகண்ணரை நோக்கி, ஓமாலடியவரே! மன்னன் என்ற இறுமாப்பால் நான் அறியாமல் பேசிய மொழிகளை மறந்து என்னை மன்னித்து, மீண்டும் காஞ்சி நகருக்குத் திரும்பி வரவேண்டும்!ஔ என்று கேட்டுக் கொண்டார்.

கணிகண்ணன் திருமழிசையாழ்வாரை வேண்ட, அவரும் யதோக்தகாரிப் பெருமானைப் பார்த்து, ஓநம் கணிகண்ணன் போவதை நிறுத்திவிட்டான், செந்நாப் புலவனான நானும் துணிந்து நின்றேன்! நாங்கள் நகருக்குத் திரும்புகிறோம். மணிவண்ணா நீயும் உன் நகருக்குத் திரும்பி உன் கோயிலிலே பைந்நாகப் பாய் விரித்து அதில் படுத்துக்கொள்!ஔ என்று வேண்டிக் கொண்டார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய

செந்நாப் புலவனும் போக்கொழிந்தான் நீயும்உந்தன்

பைந்நாகப் பாய்படுத்துக் கொள்

இப்படிப் பாடிய அவருடைய வேண்டுதலை பெருமாள் ஏற்றார். திருமழிசையாருடனும் கணிகண்ணனோடும் மற்ற தேவர்களுடனும் திருவெஃகா திருத்தலம் வந்தார். பைந்நாகப் பாய் விரித்துப் படுத்து, தன் திருக்கை கீழ்ப்பட கண்வளர்ந்தார். இவ்வாறு ஆழ்வார் சொன்னவிதமே செய்தார். அதனால் அப்பெருமானை அன்று முதல் ஓசொன்னவண்ணம் செய்த பெருமாள்ஔ என்று எல்லோரும் போற்றி வரலானார்கள். அவ்விறைவன் தம் அடியார்களோடு ஒரு நாள் இரவு சென்று தங்கிய அந்த இடத்தை ஓர் இரவு இருக்கை எனும் பொருளில் வழங்கி. பின்னாளில் ஓரிருக்கை என்றாகி, தற்போது ஓரிக்கை என்று வழங்கப்படுகிறது.

நன்றிருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்

சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனான்

குன்றிருந்த மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்

நின்றிருந்து வெஃகணை கடந்தது என்ன நீர்மையே!

மீண்டும் நகரம் பொலிவுபெற்றது. மன்னன் மகிழ்ந்தான் . அதன் பிறகு திருமழிசையார் கச்சி மணிவண்ணனை தம் நெஞ்சில் நிறுத்தி யோகத்தில் அமர்ந்தார்.

 

Leave a Reply