திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

இனி திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியையும், திருச்சந்த விருத்தத்தையும் கொஞ்சம் பார்க்கலாம்.

 

விஷ்ணு புராணத்தை மையமாகக் கொண்ட தத்துவத்தை இவர் தன்னுடைய நான்முகன் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே தெளிவுற வெளிப்படுத்துகிறார்.

நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் – யான்முகமாய்

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை;

சிந்தாமல் கொள்மின்நீர், தேர்ந்து.

ஸ்ரீமந் நாராயணனே நான்முகங்களுடைய பிரமனைப் படைத்தான். அப் பிரமனும் தன்னையே முதலாகக் கொண்டு சங்கரனைப் படைத்தான். நான் அறிந்த இந்த ஆழ்பொருளை அந்தாதி வடிவத்தில் சொல்கிறேன். சிந்தாமல் சிதறாமல் மனதில் இதைக் கொள்ளுங்கள்.

நான்முகன் திருவந்தாதியின் இரண்டாவது பாசுரத்தில் இதை இன்னும் யோசித்துப் பார்க்கிறார் ஆழ்வார்.

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்;

ஆரும் அறியார் அவன் பெருமை; – ஓரும்

பொருள்முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்

அருள்முடிவது ஆழியான் பால்

தேர்ந்து பார்த்தால் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை ஒருவரும் அறிய மாட்டார். வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள் முடிவும் இத்தனையே. எவ்விதமான சாதனங்களை மேற்கொண்டவர்களுக்கும் அவற்றின் பலன் சக்கரம் ஏந்திய திருமாலின் அருளால் மட்டுமே உண்டாகும்.

அறியார் சமணர்; அயர்ந்தார் பவுத்தர்;

சிறியார் சிவப்பட்டார்; செப்பில்- – வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்

ஈனவரே, ஆதலால் இன்று

இதுநாள் வரை மாயவனை மாலவனை மாதவனை ஏற்றிப் போற்றாதார், அறியாமையாலே நீசரேயாவார் என்று கூறுகிறார்.

இன்றாக நாளையே ஆக இனிச் சிறிது,

நின்றாக நின் அருள் என்பாலதே; — நன்றாக

நான் உன்னையன்றி இலேன் கண்டாய்; நாரணனே!

நீ என்னை அன்றி இலை

நாராயணனே, இன்றைக்கோ, நாளைக்கோ, என்னும் சிறிது காலம் கழித்தோ என்றைக்கு ஆனாலும் தலைவனான உன்னருள் அடியவனான என்னிடம் ஏற்படும். நிச்சயமாக நான் உன்னையன்றி வேறு புகல் இல்லாதவன். அதேபோல் நீயும் என்னையன்றி வேறு காப்பாற்றப்படக்கூடிய பொருள் பெறாதவன்.

வாழ்த்துக -வாய்; காண்க கண்; கேட்க செவி; மகுடம்

தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்- – சூழ்த்த

துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை

வழாவண் கைகூப்பி மதித்து

திருத்துழாய் மாலை சூடிய திருமுடி உடையவனும் என்னிடம் நெடுநாட்களாக அன்பு பூண்டவனும் ஆன திருமாலை, விடாது கைகள் கூப்பித் தொழுது, தியானித்து, தலை சாய்த்து வணங்கி, குளிர்ந்த பூக்கள் கொண்டு வழிபடுங்கள். உங்கள் வாய் அவனைத் துதிக்கட்டும். கண்கள் அவனையே நோக்கட்டும். காதுகள் அவனைப் பற்றியே கேட்கட்டும் – என்று எப்போதும் அவனைச் சிந்தித்திருக்கும் வழியைக் காட்டுகிறார் இந்தப் பாசுரத்தில்.

திருமழிசை ஆழ்வார் இறுதியில் அடைய விரும்புவது வைகுந்தத்தை. வைகுந்தம் அடைவது எங்ஙனம்? அவர் தமது நான்முகன் திருவந்தாதியின் இறுதிப் பாடல்களில் அதைத் தெரிவிக்கிறார்.

ஏன்றேன் அடிமை; இழிந்தேன் பிறப்பு இடும்பை;

ஆன்றேன் அமரர்க்கும் அமராமை; – -ஆன்றேன்

கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை

இடம் நாடு காண, இனி.

உனக்கு அடிமை செய்வதையே ஏற்றேன். பிறப்பால் வரும் வினைகள் நீங்கப் பெற்றேன். பிரமன் முதலிய தேவர்களும் என் பக்கலில் அமர முடியாதபடியான பக்தி ஞானத்தால் நிறைவுற்றேன். ஆகவே அடியேற்கு சுவர்க்கம் பூவுலக இன்பம் ஆகியன தேவையே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலான அடியார்கள் குழாங்களின் திருநாட்டைக் காண பரம பக்தி பெற்றேன் என்று வைகுந்தம் அடைவதான பரமபக்தியை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார். திருமால் அருகில் எப்போதும் வாசம் செய்யும் பெரும் பேற்றை அளிப்பது வைகுந்தப் பெருவாழ்வு. அது அமரர் உலகைவிடப் பெரிதானது.

இந்த வைகுந்தப் பெருவாழ்வைப் பெறுவதற்காக ஏன் இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்யவேண்டும் என்றால், இந்த உலகுக்கு மூலகாரணனான நாரணனின் இருப்பிடம் அது என்ற ஞானத்தால்தான். அதற்கு மூலகாரணன் நாரணன் என்ற ஞானம் வரவேண்டும். அதை அறிந்த விதம் எங்ஙனம் என்பதை ஆழ்வார் காட்டும் பாங்கு இது. நான்முகன் திருவந்தாதியின் கடைசிப் பாசுரத்தில் அதை வெளிப்படையாக அறிவிக்கிறார் ஆழ்வார்.

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்;

இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை- – இனி அறிந்தேன்

காரணன் நீ; கற்றவை நீ; கற்பவை நீ; நல்கிரிசை

நாரணன் நீ; நன்கு அறிந்தேன் நான்.

சிவனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக இருப்பவன் நீயே என்பதை அறிந்து கொண்டேன். உன் இயல்பை அறிந்ததால், நீயே உலக காரணன் என்பதையும் தெரிந்து கொண்டேன். முன்பு கற்றவை, இனி அறியப் போகிறவை யாவும் நாராயணன் ஆகிற உன் பேரருளாலே என்பதையும் நன்கு அறிந்துகொண்டேன்.

ஆகவே காரணப் பொருளான உன் இருப்பிடமே என் பிறப்பறுக்கும் இருப்பிடம் என்பதாலே அதை நாடினேன̷் 0; என்பது ஆழ்வாரின் தீர்மானமான முடிவு.

திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம், பிரபந்தத் தொகுப்பிலேயே தனிச் சிறப்பு கொண்டது. 120 பாசுரங்களைக் கொண்ட அது சந்தக் கலிவிருத்த யாப்பு வகையைச் சேர்ந்தது. திருச்சந்த விருத்தம், ஓசை நயம் மிகக் கொண்டது… ஒவ்வொரு பாட்டும் ஒரு தாள வாத்தியத்தைத் தட்டுவது போன்ற ஓசை நயத்தோடு திகழ்கின்றது.

திருச்சந்த விருத்தத்தின் முதல் பாடல் இது.

பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்;

தீநிலாய மூன்றுமாய், சிறந்தகால் இரண்டுமாய்;

மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்

நீநிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?

— என்று கீழ் வரிசையாக எண்கள் சென்றுகொண்டிருக்கும். இது என்ன கணக்கு? பூநிலாய ஐந்து என்றது – பூமியில் உள்ள ஒலி, ஊறு, தோற்றம், சுவை, நாற்றம் ஆகியவை (அதாவது ஒலி, தொடுகை, உருவம், சாரம், மணம் ஆகியவை). புனல் கண் நின்ற நான்கு என்றது – நீரில் உள்ள ஒலி, ஊறு, தோற்றம், சுவை என்பது (நீருக்கு நான்கு குணங்கள் உண்டு. ஒலி, தொடுகை, உருவம், சாரம் ஆகியன). தீ நிலாய மூன்று என்றது – தீயில் ஒலி, ஊறு, நாற்றம் என்பது (அதாவது சப்தம், தொடுகை, வடிவம் என்று மூன்று). கால் இரண்டு என்றது – காற்றில் ஒலி, ஊறு என்பது (அதாவது சப்தம், தொடுகை ஆகியன). மீநிலாயது ஒன்று என்றது – விண்ணில் ஒலியாய் என்பது. இப்படி வெவ்வேறு வகைப்பட்ட தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என இவற்றின் ஆத்மாவாய் உள்ள நீ, காரிய காரணப் பொருளாக, முழுமுதலாக இருப்பதை யாரால் நினைக்க முடியும்?

முதல் பாட்டைத் தொடர்ந்து தன் இரண்டாவது பாடலிலும் எண்களோடு விளையாடுகிறார் திருமழிசையாழ்வார்.

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்

ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்,

வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்,

ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே!

மூன்று ஆறு முதலில் வருகிறது. மூன்று ஐந்து; ஓர் இரண்டு, ஒரு மூன்று, ஓர் ஏழு, ஓர் எட்டு, கடைசி வரியில் ஒரு ஐந்து. இந்த எண்ணிக்கைகள் குறிப்பிடுவன…

முதலில் சொல்லப்படும் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன.

இரண்டாவது ஆறு, இந்தச் செயல்கள் செய்வதற்கான ஆறு பருவ காலங்கள்… அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.

மூன்றாவது ஆறு, ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல், தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள்.

அடுத்து ஆழ்வார் கூறும் ஐந்துகள்…

முதல் ஐந்து, ஐந்து யக்ஞங்கள். தேவர்களுக்கு, முன்னோர்களுக்கு, இயற்கைக்கு, மனிதர்களுக்கு, பிரம்மாவுக்கு என ஐந்து யக்ஞங்கள்…

இரண்டாவது ஐந்து உண்ணும்போது செய்யப்படும் ப்ராண, அபான, வ்யான, உதான, சமான என்ற ஐந்து ப்ராண ஆஹுதிகள்…

மூன்றாவது ஐந்து, ஐவகை வேள்வித் தீ…

ஏறு சீர் இரண்டு என்றது, ஞானம் வைராக்கியம் ஆகியன.அடுத்து வரும் மூன்று, செல்வம், கைவல்யம், பரமபதம் ஆகியன.

ஏழு என்பது, விவேகம் முதலிய ஏழு மன நிலைகள்.

ஆறு என்றது, ஞான சக்தியாகிய ஆறு.

எட்டு என்பது பலன்கள். (அவை பாபமற்ற தன்மை, கிழத்தனம் அற்ற தன்மை, மரணமற்ற தன்மை, சோகமற்றிருப்பது, பசியற்றிருப்பது, தாகமற்றிருப்பது, வீண் போகாத இஷ்டம், வைராக்கியம் ஆகியன)

வேறு வேறு மதங்களாகவும் உண்மையும் பொய்யுமாகி தன்மாத்திரைகளாகவும் ஆனவன் மாயன் கண்ணன் என்பது ஆழ்வார் கூறும் உண்மை.

இப்படியும் அல்லாது அழகிய சந்தமெட்டுக்களோடு படித்துப் பார்க்க அழகையும் சிறந்த அனுபவத்தையும் தரும் பாசுரங்கள் திருச்சந்தவிருத்தத்தில் அநேகம் உள்ளன. அவற்றில் ஒரு பாடல்…

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ

சொல்லினால் படைக்கநீ படைக்கவந்து தோன்றினார்

சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்லவல்லரே?

வேதங்களின் தொடர்ச்சி நீயே. வேதங்கள் சொல்லும் பொருளும் நீயே. வேதத்தாலே அளவிட்டு அறியப்படாமல் வெளிப்படும் சோதியும் நீயே. நீ கொடுத்த வேதத்தாலே படைப்பதற்குத் தோன்றிய பிரம்மனும் வெறும் சொற்களால் உன் குணங்களைச் சொல்லிவிட முடியுமா?

– பிரமனாலேயே முடியாதென்றால் மற்றெல்லோரும் எம்மாத்திரம் என்கின்ற கேள்விதான் ஆழ்வாரின் இந்தப் பாடல் மூலம் தொக்கி நிற்கும்.

திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றுஆறு உரைத்தான் வாழியே

அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே

இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே

எழில் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே

முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே

முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே

நன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே

நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே

– அடியேன்,

செங்கோட்டை ஸ்ரீராம்{jcomments on}

Leave a Reply