திருமழிசைப்பிரானின் கொள்கை மாற்றம̷் 0;
திருமழிசைப்பிரான் தம் திருச்சந்த விருத்தத்தில் இப்படி வெளிப்படுத்துகிறார்…
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்
– என்கிறார்.
இருந்தபோதும், அவர் இயல்பில் முனி குமாரராகையால் வயது ஏழு வந்தவுடனேயே ஐம்புலன் அடக்கி அஷ்டாங்க யோகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்கு இந்த உலகுக்கெல்லாம் மூலகாரணமான பரம்பொருள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அத்தகைய பரம்பொருளைத் தியானித்து யோக நிஷ்டையில் அமர வேண்டும். எனவே அதற்குரிய வழியை ஆராய்வதற்காக அனைத்து சமய நூல்களையும் தத்துவ நுட்பங்களையும் கற்றுத் தெளிவுற எண்ணினார்.
அதன் அடிப்படையில், சாக்கியம் மற்றும் சமண மதங்களின் நூல்களைக் கற்றார். பின் அவற்றை விட்டுவிட்டு, சைவ சமயத்தில் புகுந்து சைவம் தொடர்பான நூல்களை ஆராய்ந்தார். பிறகு சைவ சமயத் தத்துவங்களுக்கு ஓர் அவதார புருஷராகவும் மகானாகவும் விளங்கினார்.
ஞான ஒளியும் தெய்வீக அருளும் பெற்று, யோகங்கள் பலவும் புரிந்து சித்தராக மாறினார் திருமழிசைப்பிரான். சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தலங்களுக்குச் சென்று விரிசடையில் பிறைசூடிய முக்கண்ணனை சேவித்தவாறே, திருமயிலைக்கு வந்தார். அங்கே மௌன விரதம் கைக்கொண்டார்.
அந்த நேரத்தில், திருமயிலையில் வைணவரான பேயாழ்வார் ஒரு பூஞ்சோலையில் தங்கியிருந்தார். திருமழிசையார் ஒரு மகா யோகி; மா மேதை; சைவர்; என்று பேயாழ்வார் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். எனவே சிறப்பு வாய்ந்த திருமழிசையாருக்கு உண்மையான பரம்பொருள் யார் என்பதை உணர்த்தி, பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் ஆத்மானுபவத்தை போதித்து, அவரை சைவ சமயத்திலிருந்து வைணவத்துக்கு திருத்திப் பணி கொள்ள எண்ணினார் பேயாழ்வார்.
எனவே அவர் திருமழிசையாரை நாடிச் சென்று சமய வாதம் செய்ய அழைத்தார். ஆனால் திருமழிசையாரோ மௌன விரதம் கைக்கொண்டிருந்ததால் அதற்கு இணங்கவில்லை. எனவே பேயாழ்வார் ஒரு யுக்தியைக் கையாண்டார். திருமழிசையாரின் கண்களில் படும்படி, ஓரிடத்தில் செடிகளைக் கொண்டுவந்து நடத் தொடங்கினார். ஆனால் வழக்கம்போல நடாமல், அவற்றின் வேர்களை வானத்தை நோக்கியும், இலைகள் பூமியில் பதியும் படியும் தலைகீழாக நட்டு வைத்தார். பிறகு அறுத்து முடியப்பட்ட கயிற்றில் பொத்தல்கள் உள்ள ஓட்டைக் குடத்தைக் கட்டி, நீர் எடுத்து அச்செடிகளுக்கு ஊற்ற முயன்றார்.
பேயாழ்வாரின் விசித்திரமான செய்கையைக் கண்ட திருமழிசையார் எள்ளி நகையாடினார். உடனே பேயாழ்வார், யோகியாரே ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்.
நீர் செய்யும் பித்துகொண்ட செயலைக் கண்டால் யாவரும் சிரிக்கத்தான் செய்வார்கள் என்றார் திருமழிசையார்.
பித்து கொண்ட செயலை யாமோ செய்கிறோம்? பித்தனை வழிபட்டு வெறும் சித்துக்களாலும் யோக வித்தைகளினாலுமே பரம்பொருளை அடைந்துவிட முயலும் நீர்தான் பித்துப் பிடித்தவர்போல் செயல் புரிகிறீர். நான் செடி நடுவதைக் கண்டு பேதைமையால் ஏளனம் செய்தீரே தவிர, அதன் உட்பொருளை உம்மால் உணரமுடியவில்லையே. நீரா மறுமையில் முக்தியெனும் பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டப் போகிறீர்? என்று கேட்டார் பேயாழ்வார்.
திகைப்பு மேலிட ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தார் திருமழிசைப்பிரான். பிறகு அவர் மாயனை வழிபடுபவரே, நும் செயலின் உட்பொருள்தான் யாதோ? என்று கேட்டார்.
சிவயோகியாரே, யாம் செய்த செயல் நும் மன நிலையைக் குறிப்பதாகும். அது எவ்வாறு என்பதை விளக்குகிறேன். உம்முடைய மனம் சிறிது காலம் ஒரு மதத்தைச் சார்ந்திருந்தது. அதை விட்டுவிட்டு மற்றொரு மதத்தைப் பற்றிக்கொள்வதையே அறுந்து முடிபோட்ட கயிறு குறிக்கிறது. இந்த ஓட்டைக் குடத்தில் முகக்கும் தண்ணீரெல்லாம் ஒழுகி ஓடிவிடுமல்லவா? அதுபோலவே உம்முடைய மனத்தில் எவ்வித மதக்கொள்கையும் தத்துவ ஞானங்களும் நிலைகொள்ளாமல் பலவாறாக நீங்கி ஓடிவிடுகின்றன. செடிகளைத் தலைகீழாக நட்டது, உலகத்துக்கு ஆதி அந்தம் தெரிந்து கொள்ளாமலே உண்மையான பரம்பொருளை அறிந்து விட்டதாக நினைத்து மயங்கித் தலைகீழாகச் செல்லும் உம்முடைய ஞானநிலையையே குறிப்பதாகும் என்றார் பேயாழ்வார்.
பின்னர், அனைத்துக்கும் மூலகாரணமான பரம்பொருளின் தத்துவம் பற்றி இருவருக்குமிடையே பலவித வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. மாலடியாரே! காணுதற்கரிய அந்தப் பரம்பொருளை நீர் கண்டீரோ? என்று கேட்டார் திருமழிசையார்.
கண்டேன்; என்னுள்ளேயும் கண்டேன்; எனக்கு வெளியேயும் கண்டேன்; நான்மறையுள்ளும் அவனைக் கண்டேன். அன்றலரும் மலரினுள்ளும் கண்டேன். வீசும் காற்றிலும் கண்டேன். மண்ணிலும் கண்டேன்; விண்ணிலும் கண்டேன். நாமங்கள் பல சொல்லி நாரணனாகி நிற்பதைக் கண்டேன் என்றார் பேயாழ்வார்.
சரி, அவன் எல்லாமாகி எங்குமாகி நின்றாலும், அவன் உருவைக் காண முடியுமா? என்று கேட்டார் திருமழிசையார்.
அவன் உருவமற்றவன் என்றாலும், அவன் உருவமெடுப்பதையும் நான் கண்டேன். நாராயணனாகி நிற்கும் அவன் திருமேனி அழகையும் கண்டேன். திகழும் அருக்கன் நிறங்கண்டேன். அவன் கையில் பொன்னாழியும் வலம்புரிச் சங்கும் கண்டேன். அந்த மணிவண்ணன் குழலூதி மாடு மேய்ப்பதையும் கண்டேன். வாமனனாகி மாவலியிடம் மூவடி நிலம் தானம் கேட்பதையும் கண்டேன். பின் நெடுமாலாகி மூவுலகையும் ஈரடியால் அளந்து மூன்றாம் அடியாக மாவலியின் முடி மீது திருவடி வைப்பதையும் கண்டேன். என் உள்ளத்துள்ளே ஒளிவிளக்கேற்றி வைத்த அந்த மாயனை நான் நாடிநாடி என் மனத்தினுள்ளே வசப்படுத்தினேன். அவன் என் உள்ளத் தாமரையில் புகுந்து நின்றான்; இருந்தான்; கிடந்தான்… அவன் அடி சேர்ந்து வாழும் வகையையும் யானறிந்தேன் என்று, பேயாழ்வார் உள்ளம் உருகி அவன் தரிசனம் கண்ட விதத்தை எடுத்துரைத்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த திருமழிசையாருக்கு மெய் சிலிர்த்தது. அனைத்துலகத்துக்கும் ஆதிமூலமான பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணனே என்பதை அவர் உணர்ந்தார்.
மேலும் பெருமான் உலகை உண்டு உமிழ்ந்த காரணத்தையும் விளக்கினார். கடல் அலைகள் எல்லாம் கடலிலே பிறந்து, அதாவது கடலிலிருந்தே பொங்கிப் பொங்கி எழுந்து, கடைசியில் கடலினுள்ளேயே அடங்கி விடுவதுபோல், உலகில் தோன்றிய அனைத்தும் இறைவனாலேயே தோன்றி இறைவனுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. இதை உலகுக்குக் காட்டவே எம்பெருமான் உலகத்தை உண்டு உமிழ்ந்தான் என்று விளக்கமளித்தார் பேயாழ்வார்.
ஆத்மானுபவமாக நீங்கள் கண்ட பரம்பொருளை யானும் காண வழிகாட்ட வேண்டும் என்று பேயாழ்வாரை வேண்டிக் கொண்டார் திருமழிசையார். ஓபரஞான பரபக்தியோடு பரம பக்தியின் மூலம் பரம்பொருளின் அருள்பெற்றால்தான், அந்தப் பரம்பொருளைக் காணமுடியும்ஔ என்றார் பேயாழ்வார்.
உடனே திருமழிசையார் அவரை நோக்கி, என் மன இருளைப் போக்கி ஞானம் பெற அருள்செய்தீர். அதனால் நீரே எனக்கு குரு. இனி நான் திருமகள்நாதனின் திருவடித்தாமரையையே பற்றுக் கோடாகக் கொள்வேன். அதற்குரிய தன்மையை எனக்கு நீரே கூறி அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
பேயாழ்வாரும் அதற்கிணங்க திருமழிசையாருக்கு திருமந்திரத்தை உபதேசித்து அருளினார். பிறகு திருமழிசையார் பேயாழ்வாரை வணங்கி, அத்திருமந்திரத்தையே சிந்தித்து யோகத்தில் ஆழ்ந்தார். அவருக்கு ஸ்ரீமந் நாராயணன் தம் தேவியோடும் பரிவாரத்தோடும் சங்குசக்ரதாரியாக கருடன் மீது தோன்றி காட்சியளித்தார். திருமழிசையார் அக்காட்சியைக் கண்டு அகம் மகிழ்ந்து,