திருக்குறுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

திருக்குறுந்தாண்டகம்

 

2032:

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,

கதியினைக் கஞ்சன் மாளக்  கண்டுமுன் ஆண்ட மாளும்,

மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,

விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே (2) 1

 

2033:

காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற

ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப

ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட

கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே. 2

 

2034:

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்

காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,

வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,

மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே. 3

 

2035:

கேட்கயா னுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,

பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,

வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,

வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற் கினிய வாறே. 4

 

2036:

இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்

அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,

வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,

கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே 5

 

2037:

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,

கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்

பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்

பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? 6

 

2038:

இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற,

மெய்ம்மையை விரிந்த சோலை வியந்திரு வரங்கம் மேய,

செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை,

தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே. 7

 

2039:

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற,

தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்,

மானிடப் பிறவி யந்தோ. மதிக்கிலர் கொள்க, தந்தம்

ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் குறுதியே வேண்டி னாரே. 8

 

2040:

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையி னெரிநின் றுண்ணும்

கொள்ளிமே லெறும்பு போலக் குழையுமா லென்ற னுள்ளம்,

தெள்ளியீர். தேவர்க் கெல்லாம் தேவரா யுலகம் கொண்ட

ஒள்ளியீர், உம்மை யல்லால் எழுமையும் துணையி லோமே. 9

 

2041:

சித்தமும் செவ்வை நில்லா தெஞ்செய்கேன் தீவி னையேன்,

பத்திமைக் கன்பு டையேன் ஆவதே பணியா யந்தாய்,

முத்தொளி மரத கம்மே. முழங்கொளி முகில்வண் ணா,என்

அத்த.நின் னடிமை யல்லால் யாதுமொன் றறிகி லேனே. 10

 

2042:

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறு

கண்டு, தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய்,

அண்டமா யெண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான,

பண்டமாம் பரம சோதி. நின்னையே பரவு வேனே. 11

 

2043:

ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால்,

தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம்,

பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று

காவிபோல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே 12

 

2044:

இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க, என்றன்

அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு,

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,

கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே 13

 

2045:

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும்

பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்,

தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை,

பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே. 14

 

2046:

முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து,

அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு,

என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும்,

அன்பினால் ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே. 15

 

2047:

மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து, வையம்

தாயமா பரவை பொங்கத் தடவரை திரித்து, வானோர்க்

கீயுமால் எம்பி ரானார்க் கென்னுடைச் சொற்க ளென்னும்,

தூயமா மாலை கொண்டு சூட்டுவன் தொண்ட னேனே 16

 

2048:

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி,

ஏச்னார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம்,

பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு,

ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே 17

 

2049:

இளைப்பினை யியக்கம் நீக்கி யிருந்துமுன் னிமையைக் கூட்டி,

அளப்பிலைம் புலன டக்கி அன்பவர் கண்ணே வைத்து,

துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே

விளக்கினை விதியில் காண்பார் மெய்ம்மையே காண்கிற் பாரே 18

 

2050:

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்,

உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே? (2) 19

 

2051:

வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும், நாளும்

தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை,

மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலந்தும்,

ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வர் தாமே (2) 20

திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம்

Leave a Reply