7ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center;">7ஆம் பத்து 3ஆம் திருமொழி

1568

சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச்

செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்

மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்

மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,

நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை

நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,

கனவில் கண்டே னின்றுகண் டமையாலென்

கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே. (2) 7.3.1

1569

தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும்

தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக்

காய்நி னைந்தருள் செய்யு மப்பனை

அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட

வாய னை,மக ரக்குழைக் காதனை

மைந்த னைமதிள் கோவ லிடைகழி

யாயனை,அம ரர்க்கரி யேற்றையென்

அன்ப னையன்றி யாதரி யேனே 7.3.2

1570

வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான்

மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச்

சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச்

சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன்,

கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக்

கோவி னைக்குட மாடிய கூத்தனை,

எந்தை யையெந்தை தந்தைதம் மானை

எம்பி ரானையெத் தால்மறக் கேனே? 7.3.3

1571

உரங்க ளாலியன் றமன்னர் மாளப்

பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,

இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும்

எம்பி ரானைவம் பார்புனல் காவிரி,

அரங்க மாளியென் னாளிவிண் ணாளி

ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,

சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக்

கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே 7.3.4

1572

ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ

தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து

தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி

எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற,

வேங்கடத்தரி யைப்பரி கீறியை

வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட

தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை

அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே 7.3.5

1573

எட்ட னைப்பொழு தாகிலு மென்றும்

என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,

தட்ட லர்த்தபொன் னை அலர் கோங்கின்

தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்

கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக்

காத லால்மறை நான்குமுன் னோதிய

பட்ட னை,பர வைத்துயி லேற்றையென்

பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே 7.3.6

1574

பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற

பாலை யாகி யிங்கே புகுந்து,என்

கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான்

கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள்,

விண்ணு ளார்பெரு மானையெம் மானை

வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல்

வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல்

வண்ண மேயன்றி வாயுரை யாதே 7.3.7

1575

இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக்

கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும்

துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர்

தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்

முனியை வானவ ரால்வணங் கப்படும்

முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்

கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட

கள்வ னையின்று கண்டுகொண் டேனே 7.3.8

1576

என்செய் கேனடி னேனுரை யீர் இதற்

கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,

தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்

நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை

மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்

சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,

பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை

அன்றி யென்மனம் போற்றியென் னாதே 7.3.9

1577

தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்

தோன்றல் வாள்கலி யன்திரு வாலி

நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன்

நல்ல மாமலர் சேவடி, சென்னியில்

சூடி யும்தொழு துமெழுந் தாடியும்

தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை,

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.

பாட நும்மிடைப் பாவம்நில் லாவே. (2) 7.3.10

Leave a Reply