7ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

7ஆம் பத்து 4ஆம் திருமொழி

1578

கண்சோர வெங்குருதி வந்திழிய

வெந்தழல்போல் கூந்த லாளை,

மண்சேர முலையுண்ட மாமதலாய்.

வானவர்தம் கோவே. என்று,

விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு

மணிமாட மல்கு, செல்வத்

தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார்

காண்மினென் தலைமே லாரே. (2) 7.4.1

1579

அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை

வரையகலத் தமர்ந்து, மல்லல்

கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று

கொண்டெறிந்த கூத்தர் போலாம்,

வம்பலரும் தண்சோலை வண்சேறை

வானுந்து கோயில் மேய,

எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும்

என்மனத்தே யிருக்கின் றாரே 7.4.2

1580

மீதோடி வாளெயிறு மின்னிலக

முன்விலகு முருவி னாளை

காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த

கைத்தலத்தா. என்று நின்று,

தாதோடு வண்டலம்பும் தண்சேறை

எம்பெருமான் தாளை யேத்தி,

போதோடு புனல்தூவும் புண்ணியரே

விண்ணவரில் பொலிகின் றாரே 7.4.3

1581

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை

வெஞ்சமத்துப் பொன்றி வீழ,

போராளும் சிலையதனால் பொருகணைகள்

போக்குவித்தாய் என்று, நாளும்

தாராளும் வரைமார்பன் தண்சேறை

எம்பெருமா னும்ப ராளும்,

பேராளன் பேரோதும் பெரியோரை

ஒருகாலும் பிரிகி லேனே 7.4.4

1582

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின்

வல்லமணர் தமக்கு மல்லேன்,

முந்திசென் றரியுருவா யிரணியனை

முரணழித்த முதல்வர்க் கல்லால்,

சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை

எம்பெருமான் தாளை, நாளும்

சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி

எப்பொழுதும் தித்திக் கும்மே 7.4.5

1583

பண்டேன மாயுலகை யன்றிடந்த

பண்பாளா. என்று நின்று,

தொண்டானேன் திருவடியே துணையல்லால்

துணையில்லேன் சொல்லு கின்றேன்,

வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை

எம்பெருமா னடியார் தம்மை,

கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம்

கண்ணிணையும் களிக்கு மாறே 7.4.6

1584

பைவிரியும் வரியரவில் படுகடலுள்

துயிலமர்ந்த பண்பா. என்றும்,

மைவிரியும் மணிவரைபோல் மாயவனே.

என்றென்றும், வண்டார் நீலம்

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்

திருவடியை சிந்தித் தேற்கு,என்

ஐயறிவும் கொண்டானுக் காளானார்க்

காளாமென் அன்பு தானே 7.4.7

1585

உண்ணாது வெங்கூற்றம் ஓவாது

பாவங்கள் சேரா, மேலை

விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்

மென்தளிர்போ லடியி னானை,

பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ்

தண்சேறை யம்மான் றன்னை,

கண்ணாரக் கண்டுருகிக் கையாரத்

தொழுவாரைக் கருதுங் காலே 7.4.8

1586

கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால்

போதொருகால் கவலை யென்னும்,

வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள்

கருநீலம் களைஞர் தாளால்

தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை

எம்பெருமான் தாளை, நாளும்

உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர்

என்னுள்ள முருகு மாறே 7.4.9

1587

பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து

வயல்நின்ற பெடையோடு, அன்னம்

தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும்

தண்சேறை யம்மான் றன்னை,

வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி

ஒலிமாலை கொண்டு தொண்டீர்,

தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும்

துணைக்கையால் தொழுது நின்றே. (2) 7.4.10

Leave a Reply