7ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

பெரிய திருமொழி  ஏழாம் பத்து

style="text-align: center;">7ஆம் பத்து 1ஆம் திருமொழி

1548

கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,

மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,

நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,

பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. (2) 7.1.1

1549

வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,

துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,

அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,

பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. 7.1.2

1550

தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,

ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,

காரேய் கடலே மலையே திருக்கோட்டி

யூரே, உகந்தா யையுகந் தடியேனே 7.1.3

1551

புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,

உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,

கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,

வள்ளால் உன்னை எங்ஙனம்நான் மறக்கேனே 7.1.4

1552

வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,

கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,

நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,

சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே 7.1.5

1553

பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,

முனியே திருமூழிக் களத்து விளக்கே,

இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய

கனியே உன்னைக்கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே 7.1.6

1554

கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,

நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே,

பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்

கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.7

1555

அத்தா அரியே என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே உன்னைஎங்ஙனம் நான் விடுகேனே. 7.1.8

1556

தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,

தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,

ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட

வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே 7.1.9

1557

வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும்

தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,

தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,

உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே (2) 7.1.10

 

Leave a Reply