7ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

7ஆம் பத்து 9ஆம் திருமொழி

1628

கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்

வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்

தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்

துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே (2) 7.9.1

1629

தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி

மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,

திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து,

உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே 7.9.2

1630

பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்.

அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்

சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத்

துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே 7.9.3

1631

வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,

தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்

தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்

தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே 7.9.4

1632

நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்

எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்

செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து

அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே 7.9.5

1633

முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,

கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,

செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,

தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே 7.9.6

1634

சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்

மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,

தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்

தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே (2) 7.9.7

1635

மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,

உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்

செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,

ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே 7.9.8

1636

கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா,

பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா,

திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,

அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. (2) 7.9.9

1637

சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,

ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,

காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,

பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே (2) 7.9.10

Leave a Reply