7ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center;">7ஆம் பத்து 5ஆம் திருமொழி

1588

தந்தை காலில் பெருவி

லங்கு தாளவிழ, நள்ளிருட்கண்

வந்த எந்தை பெருமானார்

மருவி நின்ற வூர்போலும்,

முந்தி வானம் மழைபொழியும்

மூவா வுருவில் மறையாளர்

அந்தி மூன்று மனலோம்பும்

அணியார் வீதி அழுந்தூரே. (2) 7.5.1

1589

பாரித் தெழுந்த படைமன்னர்

தம்மை யாள, பாரதத்துத்

தேரில் பாக னாயூர்ந்த

தேவ தேவ னூர்போலும்,

நீரில் பணைத்த நெடுவாளைக்

கஞ்சிப் போன குருகினங்கள்,

ஆரல் கவுளோ டருகணையும்

அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.2

1590

செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்

கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,

உம்பர் வாளிக் கிலக்காக

உதிர்த்த வுரவோ னூர்போலும்,

கொம்பி லார்ந்த மாதவிமேல்

கோதி மேய்ந்த வண்டினங்கள்,

அம்ப ராவும் கண்மடவார்

ஐம்பா லணையும் அழுந்தூரே 7.5.3

1591

வெள்ளத் துள்ளோ ராலிலைமேல்

மேவி யடியேன் மனம்புகுந்து,என்

உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும்

நின்றார் நின்ற வூர்போலும்,

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்

போன காதல் பெடையோடும்,

அள்ளல் செறுவில் கயல்நாடும்

அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.4

1592

பகலு மிரவும் தானேயாய்ப்

பாரும் விண்ணும் தானேயாய்,

நிகரில் சுடரா யிருளாகி

நின்றார் நின்ற வூர்போலும்,

துகிலின் கொடியும் தேர்த்துகளும்

துன்னி மாதர் கூந்தல்வாய்,

அகிலின் புகையால் முகிலேய்க்கும்

அணியார் வீதி அழுந்தூரே 7.5.5

1593

ஏடி லங்கு தாமரைபோல்

செவ்வாய் முறுவல் செய்தருளி,

மாடு வந்தென் மனம்புகுந்து

நின்றார் நின்றா வூர்போலும்,

நீடு மாடத் தனிச்சூலம்

போழக் கொண்டல் துளிதூவ,

ஆட லரவத் தார்ப்போவா

அணியார் வீதி அழுந்தூரே 7.5.6

1594

மாலைப் புகுந்து மலரணைமேல்

வைகி யடியேன் மனம்புகுந்து,என்

நீலக் கண்கள் பனிமல்க

நின்றார் நின்ற வூர்போலும்

வேலைக் கடல்போல் நெடுவீதி

விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,

ஆலைப் புகையால் அழல்கதிரை

மறைக்கும் வீதி அழுந்தூரே 7.5.7

1595

வஞ்சி மருங்கு லிடைநோவ

மணந்து நின்ற கனவகத்து,என்

நெஞ்சு நிறையக் கைகூப்பி

நின்றார் நின்ற வூர்போலும்,

பஞ்சி யன்ன மெல்லடிநற்

பாவை மார்கள், ஆடகத்தின்

அஞ்சி லம்பி னார்ப்போவா

அணியார் வீதி அழுந்தூரே 7.5.8

1596

என்னைம் புலனு மெழிலுங்கொண்

டிங்கே நெருந லெழுந்தருளி

பொன்னங் கலைகள் மெலிவெய்தப்

போன புனித ரூர்போலும்,

மன்னு முதுநீ ரரவிந்த

மலர்மேல் வரிவண் டிசைபாட

அன்னம் பெடையோ டுடனாடும்

அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.9

1597

நெல்லில் குவளை கண்காட்ட

நீரில் குமுதம் வாய்காட்ட,

அல்லிக் கமலம் முகங்காட்டும்

கழனி யழுந்தூர் நின்றானை,

வல்லிப் பொதும்பில் குயில்கூவும்

மங்கை வேந்தன் பரகாலன்,

சொல்லில் பொலிந்த தமிழ்மாலை

சொல்லப் பாவம் நில்லாவே. (2) 7.5.10

Leave a Reply