style="text-align: center;">7ஆம் பத்து 7ஆம் திருமொழி
1608
திருவுக் கும்திரு வாகிய செல்வா.
தெய்வத் துக்கர சே.செய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே.
உலகுண் டவொரு வா.திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால்
உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. (2) 7.7.1
1609
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்
மால்வண் ணா.மழை போலொளி வண்ணா,
சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா.
சாம வேதிய னே.நெடு மாலே,
அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.2
1610
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்
நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்
செய்யா தவுல கத்திடைச் செய்தாய்
சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப்
போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்
ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.3
1611
பரனே. பஞ்சவன் பௌழியன் சோழன்
பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்
வரனே, மாதவ னே.மது சூதா.
மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்
நரனே. நாரண னே.திரு நறையூர்
நம்பீ. எம்பெரு மான்.உம்ப ராளும்
அரனே, ஆதிவ ராகமுன் னானாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.4
1612
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப்
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும்
பண்பா ளா.பர னே.பவித் திரனே,
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை
கரும மாவது மென்றனக் கறிந்தேன்,
அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.5
1613
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச்
சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்
தாடா ளா.தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்
சேயாய், கிரேத திரேத துவாபர
கலியு கமிவை நான்குமு னானாய்,
ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.6
1614
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய்.
கார்வண் ணா.கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய்
எந்தாய். அந்தர மேழுமு னானாய்,
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப்
போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.7
1615
நெடியா னே.கடி ஆர்கலி நம்பீ.
நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,
கடியார் காளைய ரைவர் புகுந்து
காவல் செய்தவக் காவலைப் பிழைத்து
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன்
கூறை சோறிவை தந்தெனக் கருளி,
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.8
1616
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்
கூறை சோறிவை தா என்று குமைத்துப்
போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்
புனிதா. புட்கொடி யாய்.நெடு மாலே,
தீவாய் நாகணை யில்துயில் வானே.
திருமா லே.இனிச் செய்வதொன் றறியேன்,
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.9
1617
அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி
ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை
தூய மாலை யிவைபத்தும் வல்லார்,
மன்னி மன்னவ ராயுல காண்டு
மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே. (2) 7.7.10