style="text-align: center;">3ஆம் பத்து 3ஆம் திருமொழி
1168
வாட மருதிடை போகி
மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு,
ஆடல்நல் மாவுடைத் தாயர்
ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான்,
கூடிய மாமழை காத்த
கூத்த னெனெவரு கின்றான்,
சேடுயர் பூம்பொழில் தில்லைச்
சித்திர கூடத்துள் ளானே. (2) 3.3.1
1169
பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட
பிள்ளை பரிசிது வென்றால்,
மாநில மாமகள் மாதர்
கேள்வ னிவனென்றும், வண்டுண்
பூமகள் நாயக னென்றும்
புலங்கெழு கோவியர் பாடி,
தேமலர் தூவ வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.2
1170
பண்டிவன் வெண்ணெயுண் டானென்
றாய்ச்சியர் கூடி யிழிப்ப
எண்டிசை யோரும்வ ணங்க
இணைமரு தூடு நடந்திட்டு,
அண்டரும் வானத் தவரு
மாயிர நாமங்க ளோடு,
திண்டிறல் பாட வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.3
1171
வளைக்கை நெடுங்கண் மடவா
ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தண்தடம் புக்கண்டர் காண,
முளைத்த எயிற்றழல் நாகத்
துச்சியில் நின்றது வாட,
திலைத்தமர் செய்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.4
1172
பருவக் கருமுகி லொத்து
முட்டுடை மாகட லொத்து,
அருவித் திரள்திகழ் கின்ற
வாயிரம் பொன்மலை யொத்து,
உருவக் கருங்குழ லாய்ச்சி
திறத்தின மால்விடை செற்று,
தெருவில் திளைத்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.5
1173
எய்யச் சிதைந்த திலங்கை
மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி
ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க
அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான்
சித்திர கூடத்துள் ளானே. (2) 3.3.6
1174
ஆவ ரிவைசெய் தறிவார்?
அஞ்சன மாமலை போலே,
மேவு சினத்தடல் வேழம்
வீழ முனிந்து,அழ காய
காவி மலர்நெடுங் கண்ணார்
கைதிழ வீதி வருவான்,
தேவர் வணங்குதண் தில்லைச்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.7
1175
பொங்கி யமரி லொருகால்
பொன்பெய ரோனை வெருவ,
அங்கவனாக மளைந்திட்
டாயிரந் தோளெழுந் தாட,
பைங்க ணிரண்டெரி கான்ற
நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,
சிங்க வுருவில் வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.8
1176
கருமுகில் போல்வதோர் மேனி
கையன வாழியும் சங்கும்,
பெருவிறல் வானவர் சூழ
ஏழுல கும்தொழு தேத்த,
ஒருமக ளாயர் மடந்தை
யொருத்தி நிலமகள், மற்றைத்
திருமக ளோடும் வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.9
1177
தேனமர் பூம்பொழில் தில்லைச்
சித்திர கூட மமர்ந்த,
வானவர் தங்கள் பிரானை
மங்கையர் கோன்மரு வார்f,
ஊனமர் வேல்கலி கன்றி
யொண்டமி ழொன்பதோ டொன்றும்,
தானிவை கற்றுவல் லார்மேல்
சாராதீவினைதானே. (2) 3.3.10