style="text-align: center;">3ஆம் பத்து 10ஆம் திருமொழி
1238
திருமடந்தை மண்மடந்தை
யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல
அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து,இவ் வேழுலகத்
தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு
கைதைகள்செங்க் கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு
மிடங்கடொறும் திகழ,
அருவிடங்கள் பொழில்தழுவி
யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. (2) 3.10.1
1239
வென்றிமிகு நரகனுர
மதுவழிய விசிறும்
விறலாழித் தடக்கையன்
விண்ணவர்கட்கு, அன்று
குன்றுகொடு குரைகடலைக்
கடைந்தமுத மளிக்கும்
குருமணியென் னாரமுதம்
குலவியுறை கோயில்,
என்றுமிகு பெருஞ்செல்வத்
தெழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளு
மியன்றபெருங் குணத்தோர்,
அன்றுலகம் படைத்தவனே
யனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.2
1240
உம்பருமிவ் வேழுலகு
மேழ்கடலு மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன்
கண்டுமகிழ வெய்த,
கும்பமிகு மதயானை
மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சிபிடித் தடித்தபிரான்
கோயில்,மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம்
பலபுன்னை காட்டப்
பலங்கனிகள் தேன்காட்டப்
படவரவே ரல்குல்,
அம்பனைய கண்மடவார்
மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.3
1241
ஓடாத வாளரியி
னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த
விரணியனைப் பற்றி,
வாடாத வள்ளுகிரால்
பிளந்தவன்றன் மகனுக்
கருள்செய்தான் வாழுமிடம்
மல்லிகைசெங் கழுநீர்,
சேடேறு மலர்ச்செருந்தி
செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே,
ஆடேறு வயலாலைப்
புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.4
1242
கண்டவர்தம் மனம்மகிழ
மாவலிதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய்
மூவடியென் றிரந்திட்டு,
அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளு மெல்லாம்
அளந்தபிரா னமருமிடம்
வளங்கொள்பொழி லயலே,
அண்டமுறு முழவொலியும்
வண்டினங்க ளொலியும்
அருமறையி னொலியும்மட
வார்சிலம்பி னொலியும்,
அண்டமுறு மலைகடலி
னொலிதிகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.5
1243
வாணெடுங்கண் மலர்க்கூந்தல்
மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடி யொருபதும்தோ
ளிருபதும்போ யுதிர,
தாணெடுந்தின் சிலைவளைத்த
தயரதன்சேய் என்தன்
தனிச்சரண்வா னவர்க்கரசு
கருதுமிடம், தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம்
சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய
வுதிர்ந்தசெழு முத்தம்,
வாணெடுங்கண் கடைசியர்கள்
வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.6
1244
தீமனத்தான் கஞ்சனது
வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனைத
னாருயிரும் செகுத்தான்,
காமனைத்தான் பயந்தகரு
மேனியுடை யம்மான்
கருதுமிடம் பொருதுபுனல்
துறைதுறைமுத் துந்தி,
நாமனத்தால் மந்திரங்கள்
நால்வேதம் ஐந்து
வேள்வியோ டாறங்கம்
நவின்றுகலை பயின்று,அங்
காமனத்து மறையவர்கள்
பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.7
1245
கன்றதனால் விளவெறிந்து
கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன்
காலிகள்முன் காப்பான்,
குன்றதனால் மழைதடுத்துக்
குடமாடு கூத்தன்
குலவுமிடம் கொடிமதிள்கள்
மாளிகைகோ புரங்கள்,
துன்றுமணி மண்டபங்கள்
சாலைகள்தூ மறையோர்
தொக்கீண்டித் தொழுதியொடு
மிகப்பயிலும் சோலை,
அன்றலர்வாய் மதுவுண்டங்
களிமுரலு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.8
1246
வஞ்சனையால் வந்தவள்த
னுயிருண்டு வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமு
துண்டு,வலி மிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ்
வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரிசந்
தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலூடும்
வயலூடும் வந்து
வளங்கொடுப்ப மாமறையோர்
மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென்
றிரைஞ்சுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.9
1247
சென்றுசின விடையேழும்
படவடர்த்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்துகந்த
திருமால்தன் கோயில்,
அன்றயனு மரன்சேயு
மனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகர
மமர்ந்தசெழுங் குன்றை,
கன்றிநெடு வேல்வலவன்
மங்கையர்தம் கோமான்
கலிகன்றி யொலிமாலை
யைந்தினொடு மூன்றும்,
ஒன்றினொடு மொன்றுமிவை
கற்றுவல்லார் உலகத்
துத்தமர்கட் குத்தமரா
யும்பருமா வர்களே. (2) 3.10.10