style="text-align: center;">3ஆம் பத்து 8ஆம் திருமொழி
1218
நந்தா விளக்கே அளத்தற் கரியாய்.
நரநா ரணனே கருமா முகில்போல்
எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று
இமையோர் பரவு மிடம்,எத் திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே
களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. (2) 3.8.1
1219
முதலைத் தனிமா முரண்தீர வன்று
முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,
விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி
வினைதீர்த்த வம்மானிடம்,விண்ணணவும்
பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப்
பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,
மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.2
1220
கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று
கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்
இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ
டணைந்திட்ட வம்மானிடம்,ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்
அணிமுத்தும் வெண்சா மரையோடு,பொன்னி
மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.3
1221
சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று
திசைநான்கும் நான்கு மிரிய, செருவில்
கறையார் நெடுவே லரக்கர் மடியக்
கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,
மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.4
1222
இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு
இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,
தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத்
தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,
குழையாட வல்லிக் குலமாடமாடே
குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்,
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.5
1223
பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப்
பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்
உண்ணா முலைமற் றவளாவி யோடும்
உடனே சுவைத்தா நிடம்,ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக்
கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,
மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.6
1224
தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத்
தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,
இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல்
அடிவைத்த அம்மா னிடம்,மாமதியம்
திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில்
செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,மூன்றில்
வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.7
1225
துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்
துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா
விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம்
விளைவித்த வம்மானிடம்,வேல் நெடுங்கண்
முளைவாளெயிற்று மடவார் பயிற்று
மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல்,
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.8
1226
விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த
விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்,
படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று
இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப்
பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத்
தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்,
மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.9
1227
வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர்
மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும்
தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்
கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
கண்டார் வணங்கக் களியானை மீதே
கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,
விண்டோ ய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்
விரிநீ ருலகாண் டுவிரும் புவரே. (2) 3.8.10