முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்


2152:

நன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி,

நின்று நிலமுழுதும் ஆண்டாலும், என்றும்

விடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய்,

அடலாழி கொண்டான்மாட் டன்பு. 71

 

2153 :

அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்

பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி

காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்

பூணாரம் பூண்டான் புகழ். 72

 

2154:

புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, – திகழ்நீர்க்

கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,

உடலும் உயிருமேற்றான். 73

 

2155:

ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்

நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால்

மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்

கங்கையான் நீள்கழலான் காப்பு. 74

 

2156:

காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,

ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச்

சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை

வந்திப்பார் காண்பர் வழி. 75

 

2157:

வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா

மொழிநின்ற மூர்த்தியரே யாவர், – பழுதொன்றும்

வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த

சீரான் திருவேங்கடம். 76

 

2158:

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,

என்றால் கெடுமாம் இடர். 77

 

2159:

இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்

தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை

பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,

கொய்ந்நாகப் பூம்போது கொண்டு. 78

 

2160:

கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,

மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை

நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்

ஆரங்கை தோய அடுத்து? 79

 

2161:

அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,

படுத்த பொரும்பாழி சூழ்ந்த – விடத்தரவை,

வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,

அல்லாதும் ஆவரோ ஆள்? 80

Leave a Reply