முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்


2162:

ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,

வாளமர் வேண்டி வரைநட்டு, – நீளரவைச்

சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்

பற்றிக் கடத்தும் படை? 81

 

2163 :

படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்

தொடையலோ டேந்திய தூபம், – இடையிடையின்

மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்

மான்மாய எய்தான் வரை. 82

 

2164:

வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்

நிரைவிடையேழ் செற்றவா றென்னே, – உரவுடைய

நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,

பேராழி கொண்ட பிரான்? 83

 

2165:

பிரான். உன் பெருமை பிறரா ரறிவார்?,

உராஅ யுலகளந்த ஞான்று, – வராகத்

தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை

அடிக்களவு போந்த படி? 84

 

2166:

படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்

கொடிகண் டறிதியே?கூறாய், – வடிவில்

பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,

நெறிநின்ற நெஞ்சமே. நீ. 85

 

2167:

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்

பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்

கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்

இடைகழியே பற்றி யினி. 86

 

2168:

இனியார் புகுவா ரெழுநரக வாசல்?

முனியாது மூரித்தாள் கோமின், – கனிசாயக்

கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,

நன்கறிந்த நாவலம்சூழ் நாடு. 87

 

2169:

நாடிலும் நின்னடியே நாடுவன, நாடோ றும்

பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்

பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,

என்னாகி லென்னே எனக்கு? 88

 

2170:

எனக்காவா ராரொருவரே, எம்பெருமான்

தனக்காவான் தானேமற் றல்லால், – புனக்காயாம்

பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,

மாமேனி காட்டும் வரம். 89

 

2171:

வரத்தால் வலிநினைந்து மாதவ.நின் பாதம்,

சிரத்தால் வணங்கானா மென்றே, – உரத்தினால்

ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,

ஓரரியாய் நீயிடந்த தூன்? 90

Leave a Reply