682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
“தீபாவளி ஆசீர்வாதங்கள் “
- குருஜி கோபாலவல்லிதாசர்
தீப ஆவளி. தீபங்களின் வரிசை. பகவான் ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறான். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து பகவானை வசீகரிப்பது தான் இந்தக் கொண்டாட்டம்.
தீபாவளி – ஐந்து நாட்களாகக் கொண்டாடுவது வழக்கம்.
முதல் நாள்: தனத் திரயோதசி. தன்வந்திரி திரயோதசி. ஆரோக்கியத்துக்காக. எது தனம்? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (தனம்). எனவே, இந்த தீபாவளியிலிருந்து, ஏதேனும் ஒரு உடற்பயிற்சி ஆரம்பிக்க சங்கல்பம் செய்யவும். தன்வந்திரி பகவான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்ல ஆரொக்கியத்தைத் தரட்டும். தன்வந்திரி பகவான் தான் அமிர்த கலசத்தை எடுத்து வந்த பகவான் விஷ்ணுவின் அவதாரம். அந்தக் காலத்தில் இந்த தன்வந்திரி திரயோதசி அன்று தான் லேகியம் செய்து பூஜை செய்து அதை ஏற்றுக் கொள்வது வழக்கம். தன்தேரஸ்!
இரண்டாம் நாள்: நரக சதுர்தசி. பகவான் கிருஷ்ணன் சத்தியபாமா தேவியோடு சென்று நரகனை வதம் செய்து 16 ஆயிரத்து நூறு கன்னிகைகளை விடுவித்த நாள் நரக சதுர்தசி. பெண்களுக்கு விடுதலை கொடுக்கும் நாள் தீபாவளி. வடக்கே இதை சோட்டி தீபாவளி என்பார்கள்.
மூன்றாம் நாள்: அமாவாசை. பகவான் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி 14 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய வனவாசம் முடித்து அயோத்தி வந்த நாள். கேதார்நாத் பகவானை கௌரி அடைந்த நாள் – கௌரி அர்தாங்கினியாக சிவபெருமானின் பாதி உடலை தன்னுடைய பாகமாக வாங்கி உமையொருபாகனாகிய நாள். லக்ஷ்மி அனுக்கிரகிக்கும் நாள்.
நான்காம் நாள்: பலி பத்யாமி. மஹாபலிச் சக்ரவர்த்தி பாதாள லோகத்திலிருந்து வரக்கூடிய நாள். இதே நாள் தான் இந்திரனின் கர்வத்தை அடக்க கிருஷ்ணர் இந்திர பூஜையைக் கெடுத்த்து கோவர்தன பூஜை செய்த நாள்.
ஐந்தாம் நாள்: பாய் தூஜ் என்கிற யம த்விதியை. யம ராஜன் – யமுனா சகோதர சகோதரிகள். இன்று யாரெல்லாம் யமுனா தேவியை ஸ்மரிக்கிறார்களோ, யாரெல்லாம் யமுனைத்துறைவனான கண்ணனை ஸ்மரிக்கிறார்களோ அவர்களுக்கு யம ராஜனாலும், யமுனா தேவியின் இன்னொரு சகோதரனான சனைஷ்ச்சரனாலும் (சனீஸ்வரன்) எந்த விதமான கஷ்டங்களும் வராது.
தீபாவளியை ஆனந்தத்தோடு கொண்டாடி மகிழுங்கள். தீபாவளி ஆசீர்வாதங்கள். மூன்று வாரங்கள் இமய மலையிருந்து அக்டோபர் 27 தான் கீழே வந்தேன். இமய மலையில் எனக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்ததோ, என்ன அனுக்கிரஹங்கள் கிடைத்ததோ, அவை எல்லாம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் பகவான் சாட்சியாகக் கொடுக்கிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். ராதே கிருஷ்ணா
– Gurujee Gopalavallidasar