வடவேங்கடம் முதல் தென்குமரி வரை விரிந்து பரந்த தமிழகத்தை தமிழன்னையாகப் பாவித்தால், அவளின் நெற்றித் திலகம்போல் திகழ்வது, தொண்டை நாடும் அதன் தலைநகராகத் திகழ்ந்த காஞ்சிபுரம் நகரமும். தொன்றுதொட்டு பழம்பெரும் நகராக விளங்கி வருகிறது இந்தக் காஞ்சிபுரம் நகரம். இதற்கு கச்சி என்றும் திரு அத்தியூர் (சின்ன காஞ்சிபுரம்) என்றும் பெயர்கள் பலவுண்டு. அந்த அத்தியூரான அத்திகிரியில் கோயில் கொண்டு அருள்பாலிப்பவரே அத்திகிரி அருளாளனான வரதராஜப் பெருமான். சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் நகருக்குப் பல வைணவத் திருத்தலங்களும் பல சிவத் தலங்களும் பெருமை சேர்க்கின்றன. வைணவக் கோயில்கள் பல கொண்ட அந்தக் காஞ்சி மாநகருக்குப் பெருமை சேர்த்திருந்தது, திருவெஃகாவில் உள்ள யதோக்தகாரி பெருமாள் சந்நிதி. திருமாலின் பெருங்கருணை நிறைந்திருக்கும் அந்தத் தலத்தில் பெருமாள் பக்தர்களின் பக்திப் பனுவல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று பின்னாளில் மிகப் புகழ்பெற்ற யதோக்தகாரி சந்நிதியின் அருகே ஒரு பொய்கை. அந்தப் பொய்கையில் தேவர்களும், வானுலகக் கன்னியர்களும் நீராடுவார்களாம். அத்தகு சிறப்புடையதும், கருணை மிகப் பொழியும் பரந்தாமனின் மார்பைப் போன்று மிகக் குளிர்ச்சி பொருந்தியதுமான அந்தப் பொய்கையில், பொற்றாமரை மலர் ஒன்று அன்றலர்ந்த மலராய் மணம் வீசிக்கொண்டிருந்தது.
கண்ணுக்கு இனிய காட்சியும் மனதுக்கு பக்தி மணமும் கொடுக்கும் அந்த அழகிய பொற்றாமரை மலரில், அன்பே குணமாகக் கொண்டு, அறிவொளி வீசும் ஞானச் சுடராக ஒருவர் அவதரித்தார். திருமாலின் சங்காகப் புகழ்பெற்ற பாஞ்ச ஜன்னியத்தின் அம்சத்தவராக அயோனிஜராக ஒரு பொய்கையில் அவதரித்ததால் பொய்கையார் என சிறப்பிக்கப்பட்டார்.
பொய்கையார் என்கிற இந்தப் பெயரை சங்க இலக்கியங்களான புறநானூறிலும் நற்றிணையிலும்கூடக் காணலாம். அவர் புறநானூறிலும் நற்றிணையிலும் சில பாடல்களைப் பாடியதாக நமக்குக் கிடைக்கும் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது. அதேபோல், சேரனுக்கும் சோழனுக்கும் நடந்த போரில் அகப்பட்ட சேர அரசனை விடுவிப்பதற்காக, சோழன் கோச்செங்கணானைப் புகழ்ந்து களவழி நாற்பது என்ற நூலைப் பாடியவரும் பொய்கையார் என்பவர்தான்.
ஆனால், சங்ககாலப் பொய்கையாரும், களவழி நாற்பது பொய்கையாரும், ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாரும் ஒருவரல்லர் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். காரணம், மூவரும் வெவ்வேறு காலத்தவர் என்பது மட்டுமல்லாமல், மூவருடைய பாடல்களிலும் காணப்படும் வேறுபாடுகளும், எண்ணங்களின் மாறுபாடுகளும் மூவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன எனலாம். ஆழ்வாரான பொய்கையாரின் பாடல்களில் தோள் அவனையல்லால் தொழா என்றும், நயவேன் பிறர் பொருளை நண்ணேன் என்றும் வருவதால், இவருடைய பக்திச் சிறப்பும் உயர்வும் நமக்குத் தெரியவரும். மேலும் இவர் முனிவர் வகையறாவைச் சேர்ந்தவர் என்பதால், இவர் மன்னரைப் பாடிப் புகழ வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் தெளியலாம்.
சிறு வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டுத் திளைத்த பொய்கையாழ்வார், இளமையில் கற்க வேண்டிய நூல்களை திருவரங்கப் பெருமானின் கருணையால் குற்றம் நீக்கிக் கற்றுணர்ந்தார். அதன் காரணத்தால், இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது திருமாலின் தொண்டே எனத் தெளிந்தார். உலகப் பற்றையும், அகங்கார மமகார உணர்வையும் முழுவதுமாகத் தூக்கி எறிந்து, பகவான் ஸ்ரீமந் நாராயணனிடமே அன்பு பூண்டு, அவன் சேவைக்கே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டார்.
என் உள்ளம் அவனது அன்பையே எக்காலமும் சிந்தித்து மகிழ்கிறது. என் நாக்கோ, மகாலட்சுமித் தாய் உறையும் திருத்துழாய் மாலை சூடிய அவன் மார்பை, செங்கமலக் கண்களை, சக்ராயுதம் தரித்த கையை, கழல்கள் அணிந்த கால்களை, வெண்ணெய் ஒழுகும் செம்பவழ வாயை எப்போதும் பாடிக்கொண்டேயிருக்க விழைகிறது. என் கண்களோ, மாயக் கள்ளன் திருமகள் நாதனான கண்ணபிரானைக் காண் என்கின்றன. என் செவிகளோ, அவன் புகழையே எப்போதும் கேள் என்று கேட்க விழைகின்றன.
இப்படியே அவர் எந்நேரமும் சொல்லிக் கொண்டிருப்பார். கண்கள் இரண்டும் ஆனந்தக் கண்ணீர் சொரிய, அகம் கரைந்து உள் ஒடுங்கி திருமாலின் திவ்விய ரூப சௌந்தர்யத்தில் தன்னையும் மறந்திருப்பார்.
இயல்பிலேயே இறையருளால் இயல் இயற்றும் வரம் கைவரப் பெற்ற பொய்கையார், பகவானின் கல்யாண குணங்களைப் பாடி பக்தரோடு பரவசராய் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வார். அப்படி இருக்கும்போது, ஒரு நாள் பூதத்தாழ்வாரோடும் பேயாழ்வாரோடும் இவரை சந்திக்க வைத்து, இம்மூவருக்கும் தன் திவ்விய ரூப அழகைக் காட்டி, இவர்களின் பக்தியை ஊரறியச் செய்ய எண்ணம் கொண்டான் நாரணன். அதன் பிறகு இவர் அமுதனைப் போற்றி பாசுரங்கள் பாடினார். அது நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் முதல் திருவந்தாதியாக இடம்பெற்றுள்ளது.
இந்தத் தொகுப்பில் நூறு அந்தாதிப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாசுரங்கள் அனைத்தும் அழகிய வெண்பா நடையில் அமைந்திருக்கின்றன. வெண்பா என்ற பா வகையையும் ஏற்று, அந்தாதியையும் எடுத்துக் கொண்டு இவர் செய்த முதல் நூற்றந்தாதியில் இருந்து, சில முக்கியமான பாசுரங்களைப் பார்க்கலாம்.
இவர், சைவ – வைணவ ஒற்றுமை பேசியவர் என்பது பொதுவான கருத்து. ஆனால், சம்பிரதாய ரீதியாக உள்ளார்ந்த விளக்கங்களை அளித்தவர்கள், அந்தக் கருத்தில் இருந்து விலகியிருக்கிறார்கள். சிவபெருமானைப் பற்றி இவர் விவரித்ததாக ஒரு பாசுரத்தைச் சொல்வார்கள். ஆனால், எங்கும் நீக்கமற நிறைந்த ஸ்ரீவிஷ்ணு பரமாத்மா, தன் ஓர் அம்சமாக சிவபெருமானாகக் காட்டிக் கொண்டார் என்ற விளக்கத்தையும் சிலர் சொல்லியிருக்கிறார்கள̷் 0;