முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்


2122:

குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்

இன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்

புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்

திறனுரையே சிந்தித் திரு 41

 

2123 :

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்

திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், – திருமகள்மேல்

பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,

மாலோத வண்ணர் மனம்? 42

 

2124:

மனமாசு தீரு மறுவினையும் சார,

தனமாய தானேகை கூடும், – புனமேய

பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,

தாம்தொழா நிற்பார் தமர். 43

 

2125:

தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,

தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து

எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,

அவ்வண்ணம் அழியா னாம். 44

 

2126:

ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,

நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, – பூமேய

மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,

பாதமத்தா லேண்ணினான் பண்பு. 45

 

2127:

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,

வெண்புரி_ல் மார்பன் வினைதீர, – புண்புரிந்த

ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்

போகத்தால் பூமியாள் வார். 46

 

2128:

வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,

சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய

மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்

கைந்நாகம் காத்தான் கழல். 47

 

2129:

கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,

சுழலும் சுராசுரர்க ளஞ்ச, – அழலும்

செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,

மருவாழி நெஞ்சே. மகிழ். 48

 

2130:

மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,

நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், – முகில்விரிந்த

சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்

ஆதிகாண் பார்க்கு மரிது. 49

 

2131:

அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்

பரியப் பரிசினால் புல்கில், – பெரியனாய்

மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்

ஏற்றானைக் காண்ப தெளிது. 50

Leave a Reply