2142:
உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும், – உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு. 61
2143 :
புணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து,
மணமருவ மால் விடையேழ் செற்று, – கணம்வெருவ
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,
சூழரவப் பொங்கணையான் தோள். 62
2144:
தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும்
கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,
நாணாமை நள்ளேன் நயம். 63
2145:
நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை? 64
2146:
வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால். 65
2147:
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
பேராழி கொண்டான் பெயர். 66
2148:
பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,
ஒருவனையே நோக்கும் உணர்வு. 67
2149:
உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,
உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்
விண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய். நீகிடந்த பால்? 68
2150:
பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69
2151:
சொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு,
சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று. 70