ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி

ஆண்டாள்

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த

 

நாச்சியார் திருமொழி

 

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

 

தனியன்கள்


(திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச் செய்தது)
இருவிகற்ப நேரிசை வெண்பா


அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர்குல வேந்தனாகத் தாள்* தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.


கட்டளைக் கலித்துறை


கோலச்சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள்* தென்திருமல்லி நாடி* செழுங்குழல்மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக்கிளி* அவள் தூயநற்பாதம் துணைநமக்கே!


(இந்தத் தனியன் முதல் வானமாமலை ஜீயர் ஸ்வாமி அருளியது.

பாண்டிய நாட்டில் வழங்குகிறது)


style="text-align: center;">நாச்சியார் திருமொழி – அறிமுகம்

 

பக்தியால் தமிழ் வளர்த்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் ஸ்ரீமந் நாராயணனையும் அவரின் அவதாரங்களையும் அனுபவித்துப் பாடினர். அந்தப் பாடல்களில் சமூக நிலையும் இறைவன் மீதான பக்தியும் வெளிப்பட்டன.  ஆழ்வார்களின் பாடல்கள் தமிழ் நாகரிகத்தின் வெளிப்பாடு என்பர். தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும் களப்பிரர்களின் காலத்துக்குப் பிறகு, மக்களிடையே தமிழையும் பக்தியையும் ஒருசேர வளர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மிக அதிகம்.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார். எனவே, அவருடைய பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆழ்வார்களின் பாடல்களை பாசுரங்கள் என்று குறிப்பது மரபு.

ஆழ்வார்கள் பன்னிருவரும் சேர்ந்து பாடியவற்றை, நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என்பர். அதில், ஆண்டாளின் பங்கு, முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு திவ்ய பிரபந்தங்கள். அவை – திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகியவை.

ஆண்டாளே நாச்சியார் எனப்படுவார். அந்த ஆண்டாளுடைய திருவாக்கு, இந்தத் திருமொழி. திருவாகிய நாச்சியாரின் வாக்கே, நாச்சியார் திருமொழி எனப் பெயர் பெற்றது.

முப்பது பாசுரங்களால் ஆன திருப்பாவை, மார்கழி மாதத்துக்கு என்றே அமைந்தது. அதுபோல், 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழி தை மாதத்துக்கு என்று அமைந்தது. காரணம் இரண்டு பிரபந்தங்களுமே, மாதத்தின் பெயரைக் கொண்டே தொடங்குகின்றன.

திருப்பாவையானது, மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று துவங்குகிறது. நாச்சியார் திருமொழியோ, தை ஒரு திங்களும் தரை விளக்கி என்று துவங்குகிறது. இப்படி குளிர்காலமாகிய ஹேமந்த ருதுவின் இரண்டு மாதங்களுக்குமாக இரண்டு பிரபந்தங்களைப் பாடி அருளினார் ஆண்டாள் நாச்சியார்.

பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் என்பது, பெரியாழ்வாருக்கே உரிய சிறப்பு. அந்த அளவுக்கு பெருமாள் மீது பெரியாழ்வாருக்கு பரிவு அதிகம். ஆனால் பெருமாள் மீது பரிவு கொள்வதில் பெரியாழ்வாரையும் விஞ்சியவள் ஆண்டாள்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி… என்ற வகையில், பகவான் மீது பக்தி செய்வதில், காதலும் ஒரு கருவியாம். இதற்காக ஆழ்வார்கள் நாயக-நாயகி பாவத்தைக் கைக்கொண்டார்கள். பகவானை நாயகனாக்கி, தம்மை நாயகியாக எண்ணிக்கொண்டு, காதல் ரசம் வெளிப்படப் பாடினார்கள். இந்த வகையில் மற்ற ஆழ்வார்களுக்கு இல்லாத தனித்தன்மை ஆண்டாளுக்கு இருக்கிறது. மற்ற ஆழ்வார்கள் ஆண்களாக இருந்தாலும், தங்கள் மீது பெண் தன்மை ஏறியதாக எண்ணிப் பாடினார்கள்.

ஆனால், ஆண்டாள் விஷயத்திலோ அப்படி இல்லை. ஜன்ம ஸித்த ஸ்த்ரீத்வம் என்றபடி, பிறப்பிலேயே பெண்ணாகப் பிறந்தாள். இயல்பாகவே பெண் தன்மை கொண்டிருந்தாள். பெண்ணுக்கே உரிய காதல் மனதுடன் கண்ணனை நினைந்து பாடினாள். அவ்வகையில், ஆழ்வார்கள் தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், பிஞ்சாய்ப் பழுத்தாள் ஆண்டாள் – என்றார் மணவாள மாமுனிகள். இப்படி ஆண்டாள் பாடிய பாசுரங்களான கோதை தமிழைப் படித்தாலும் கேட்டாலும், அது நம் பாதகங்கள் தீர்க்கும்; பரமனடி காட்டும்; வேதம் அனைத்துக்கும் வித்தாகும்.

கோதா என்றால் மாலை என்று பொருள். இவளே சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. மாலையாகிற தமிழை பெருமானுக்குச் சூட்டி அழகு பார்த்தவள். பூமாலையும் பாமாலையும் கொண்டு தமிழ் மாலை சூட்டியவள். அப்படிப்பட்ட கோதை நாச்சியாரைப் போற்றி கோதாஸ்துதி பாடினார் சுவாமி தேசிகன்.

அதில், ஆண்டாளை ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் என்று போற்றுகிறார். பெரியாழ்வாரின் குலத்துக்கு மேலும் பெருமை சேர்ப்பதற்காகவே அவதரித்தவள் ஆண்டாள் என்கிறார். நந்தவனம் வைத்து, மாலை கட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயில் உடையானுக்குச் சூட்டி அழகு பார்த்தவர் பெரியாழ்வார். அவர் வழியில் அந்த மாலைகளை தான் சூடி அழகு பார்த்து ரெங்கனுக்கு சமர்ப்பித்தவள் – இந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்… என்று நாச்சியார் திருமொழியில் சொன்னபடி, மனிதர் எவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன்; அந்த தெய்வத்துக்கே வாழ்க்கைப் படுவேன் என்பது ஆண்டாளின் ஒரே குறிக்கோள். ஸ்ரீமந் நாராயணனே திருவரங்கநாதனாக இருக்கிறான். அவனே கண்ணனாக அவதரித்தான். அந்தக் கண்ணனுக்கே வாழ்க்கைப்படுவோம் என்று இருந்தாள். இந்த உறுதி அவளுக்கு வரக் காரணம், பெரியாழ்வார் சொல்லிக் கொடுத்த கதைகள்.

பகவானின் அவதார குணங்களை, மகிமைகளை அவர் ஆண்டாளுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவனே பரதெய்வம் என்பதைப் புரிய வைத்தார். அது புரிந்தவுடன், ஜெகத்துக்கு யார் காரணமோ, எவன் படைத்துக் காப்பவனோ, எவன் நமக்காகவே காத்திருக்கிறானோ, எவன் ஒருவனாலே மோட்சம் கிட்டுமோ அவனைத் தவிர வேறு எவர் மீதும் சிந்தையைச் செலுத்த மாட்டோம்… எனவே திருவரங்கனுக்கே ஆட்பட்டிருப்போம் – என்று மனத்திலே உறுதி கொண்டாள் ஆண்டாள்.

இப்படி ஒரு நிலையை ஆண்டாளுக்கு ஏற்படுத்தத்தானே பெருமாளும் ஆண்டாளை அவதரிக்க வைத்தார்..! இந்தப் பிரபந்தங்களைப் பாட வைத்தார். பகவானை விட்டுப் பிரிவு, துடிப்பு, விரக தாபம் ஆகியவை ஏற்பட, அந்த தாபத்துடன் தனக்குள் இருக்கும் தாபத்தைத் தீர்த்துக் கொள்ளவே நாச்சியார் திருமொழியைப் பாடினாள் ஆண்டாள்.

நாச்சியார் திருமொழியில் மொத்தம் 143 பாசுரங்கள் உள்ளன. இதில் மொத்தம் 14 பதிகங்கள் உண்டு. பத்துப் பாசுரங்கள் கொண்டது ஒரு திருமொழி. இந்த நாச்சியார் திருமொழி மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல் ஐந்து பதிகங்கள் ஒரு கட்டம். ஆறாம் பதிகம் இரண்டாவது கட்டம். 7 முதல் 14 வரையான பதிகங்கள் மூன்றாவது கட்டம். முதல் கட்டம் திருக்கல்யாணக் கனவு காண்பதற்கு முன்பாக உள்ளவை. இரண்டாம் கட்டம் திருக்கல்யாணக் கனவு பற்றியது. மூன்றாவது கட்டம், கல்யாணம் ஆன பிறகு நடப்பவை.

ஆடியோ கோப்பு:

அகில இந்திய வானொலி – சென்னை – 2010 ம் வருடம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.

அது, நாச்சியார் திருமொழி சிறப்பு நிகழ்ச்சி. இதன் எழுத்தாக்கம் அடியேனுடையது.

அந்த ஒலிபரப்பின் ஒலிப்பதிவு, இங்கே நன்றியுடன் எடுத்தாளப்படுகிறது. 

நாச்சியார் திருமொழி – முதல் பகுதி:

{play}modules/mod_mp3player/NachiarThirumozhi1.mp3|[AUTOPLAY]{/play}

நாச்சியார் திருமொழி – இரண்டாம் பகுதி:

{play}modules/mod_mp3player/NachiarThirumozhi2.mp3|{/play}

நாச்சியார் திருமொழி – மூன்றாம் பகுதி:

{play}modules/mod_mp3player/NachiarThirumozhi3.mp3|{/play}

நாச்சியார் திருமொழி – நான்காம் பகுதி:

{play}modules/mod_mp3player/NachiarThirumozhi4.mp3|{/play}

நாச்சியார் திருமொழி – ஐந்தாம் பகுதி:

{play}modules/mod_mp3player/NachiarThirumozhi5.mp3|{/play}

நாச்சியார் திருமொழி – ஆறாம் பகுதி:

{play}modules/mod_mp3player/NachiarThirumozhi6.mp3|{/play}

Leave a Reply