திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார்

 

6ஆம் பத்து 6ஆம் திருவாய்மொழி

3398

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு

நீலக் கருநிற மேக நியாயற்கு

கோலச்செந் தாமரைக் கண்ணற்குஎன் கொங்கலர்

ஏலக் குழலி யிழந்தது சங்கே 6-6-1

 

3399

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு

செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு

கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்குஎன்

மங்கை யிழந்தது மாமை நிறமே 6-6-2

 

3400

நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட

திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு

கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்

பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே 6-6-3

 

3401

பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு

மாடுடை வையம் அளந்த மணாளற்கு

நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்குஎன்

பாடுடை அல்குல் இழந்தது பண்பே 6-6-4

 

3402

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு

மண்புரை வையம் இடந்த வராகற்கு

தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்குஎன்

கண்புனை கோதை இழந்தது கற்பே 6-6-5

 

3403

கற்பகக் காவன நற்பல தோளற்கு

பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு

நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்

விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே 6-6-6

 

3404

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு

பையர வினணைப் பள்ளியி னானுக்கு

கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்குஎன்

தையல் இழந்தது தன்னுடைச் சாயே 6-6-7

 

3405

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு

பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்

வாசக் குழலி இழந்தது மாண்பே 6-6-8

 

3406

மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு

சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு

காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்குஎன்

பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே 6-6-9

 

3407

பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு

மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு

நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்குஎன்

கற்புடை யாட்டி யிழந்தது கட்டே 6-6-10

 

3408

கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை

கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்

கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்

கட்டெழில் வானவர் போகமுண் பாரே 6-6-11

Leave a Reply