திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார்

 

 

6ஆம் பத்து 9ஆம் திருவாய்மொழி

 

ஆழ்வார் எம்பெருமானைக் கூவி அழைத்தல்

நீராய் நிலனாய், தீயாய் காலாய் நெடுவானாய்

சீரார் சுடர்கள் இரண்டாய், சிவனாய் அயன் ஆனாய்

கூரார் ஆழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன்பால்

வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே ! 6-9-1

 

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய், வலம் காட்டி

மண்ணும் விண்ணும் கொண்ட மாயவம்மானே!

நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட

நண்ணி ஒருநாள் ஞாலத்தூடே நடவாயே. 6-9-2

 

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்

சாலப் பல நாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!

கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே

சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ? 6-9-3

 

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறா

பிளந்து வீயத் திருக்கால் ஆண்ட பெருமானே!

கிளர்ந்து பிரமன், சிவன், இந்திரன், விண்ணவர் சூழ

விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே! 6-9-4

 

விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல் சேர்ப்பாய்!

மண்மீது உழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்!

எண்மீது இயன்ற புற அண்டத்தாய்! எனது ஆவி

உள்மீது ஆடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ? 6-9-5

 

பாய் ஓர் அடிவைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்

தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த

மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்

தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? 6-9-6

 

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்

உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து

அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ!

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே! 6-9-7

 

அறிவெலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்!

வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே

கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ

பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே! 6-9-8

 

ஆவி திகைக்க, ஐவர் குமைக்கும் சிற்றின்பன்

பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?

தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே

கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? 6-9-9

 

குறுகா, நீளா, இறுதிகூடா எனை ஊழி

சிறுகா பெருகா, அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்

மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும்

சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே? 6-9-10

 

தெரிதல், நினைதல், எண்ணல் ஆகாத் திருமாலுக்கு

உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்

உரிய தொண்டராக்கும், உலகம் உண்டாற்கே! 6-9-11

 

 

Leave a Reply