நம்மாழ்வார் சரிதம்

நம்மாழ்வார்

நம்மாழ்வாரின் திருச்சரிதம̷் 0;

பாண்டிய நாடு தாமிரபரணி நதியால் வளம் பல பெற்று மலர்ச்சியோடு திகழும் பூமி. அந்த தாமிரபரணி நதிக்கரையில் திருக்குறுகூர் திருத்தலம், சிறப்புறத் திகழ்ந்தது. அவ்வூரின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக ஒரு கதையும் விளங்குகிறது. அந்தக் கதை…

தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு யோகி இருந்தார். அவர் அன்புடன் ஒரு நாயை வளர்த்து வந்தார். நாள்தோறும் அந்த நாய் வைணவப் பெரியவர் வீடுகளின் முன் கிடக்கும் எச்சில் இலையில் உள்ள உணவை உண்டு திரும்பி வரும். இவ்வாறு இருக்கும்போது ஒருநாள் வழக்கம்போல் திருநகரிக்குச் சென்ற நாய் வெகு நேரம் வரையில் திரும்பி வரவில்லை. அதனால் மனம் வருந்திய அந்த யோகி, பொருனையாற்றின் வடகரையில் நின்று தென்கரையிலிருக்கும் திருநகரியினை நோக்கி அந்த நாயின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த நாய் நட்டாற்றில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் பெருவெள்ளம் சூழ்ந்துவிட்டது. அவ் வெள்ளத்தை எதிர்த்து நாய் ஆனமட்டும் நீந்திக் கரையைக் கடக்க முயன்றது. ஆனால் வெள்ளத்தை அதனால் கடக்க முடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அதன் கால்களும் ஓய்ந்துவிட்டன. அது நீரில் மூழ்கி மேலே வந்தது. வயிறு நிறைய ஆற்று நீரையும் குடித்து விட்டது.

அதனால் நாயின் மண்டை வெடித்தது. அந்த மண்டையின் வழியே நாயின் ஆத்மா பேரோளியுடன் எழுந்து விண்வெளி நோக்கிச் சென்றது. அதைக் கண்ட யோகி பெரும் வியப்படைந்தார். நாய் வீடுபேறு பெற்றதை எண்ணினார். ஓஎதனால் அதற்கு வீடுபேறு கிடைத்தது?ஔ என்று சிந்தித்தார். ஆழ்வார் திருநகரியில் வாழும் வைணவர்கள் சாப்பிட்ட இலையிலிருந்த மீதத்தை உண்டதால்தான் அந்த நாய்க்கு இந்த அரும்பெரும் பேறு கிடைத்தது என்பதை முடிவில் உணர்ந்தார். அதனால் அவர் மனம் உருகி கண்களில் நீர் மல்கியது.

வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரியுண்ட

நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்

பேய்க்கும் இடமளித்தால் பழுதோ? பெருமான் மகுடம்

சாய்க்கும் படிக்கு கவிச்சொல்லு ஞான தமிழ்க்கடலே!

– என்று இந்தச் சிறப்பு உண்டாகக் காரணமான நம்மாழ்வாரைப் போற்றி பல பாடல்களைப் பாடிப் பணிந்தார். அது முதல் நம்மாழ்வார் மீது ஆராக் காதலும் பக்தியும் கொண்டு வாழ்ந்தார். முடிவில் நம்மாழ்வாரின் அருளால் அந்த யோகியும் பரமபதம் அடைந்தார்.

இவ்வளவு பெருமை அந்தத் தலத்துக்கு வரக் காரணமாக அமைந்தவர்தான் ஸ்வாமி நம்மாழ்வார்.

 

திருக்குருகூரில் வேளாண் குலத்தில் பிறந்த பொற்காரியார் என்னும் திருமகள்நாதனின் தொண்டர் ஒருவர் புகழ் பல பெற்று வாழ்ந்து வந்தார். அவர் முற்பிறவியில் செய்த தவப் பயனால், அவருக்கு காரியார் என்று ஒரு மகவு பிறந்தது.

காரியார் மணப் பருவம் அடைந்தார். திருவண்பரிசாரத்தில் வாழ்ந்துவந்த திருவாழ்மார்பரின் அருந்தவச் செல்வி உடையநங்கையை இவருக்கு மணம் புரிவிக்க எண்ணினார் பொற்காரியார். திருவாழ்மார்பரிடம் தம் எண்ணத்தைச் சொல்ல, அவரும் அதுகேட்டு மகிழ்ந்து, அவ்வாறே செய்வோம் என்றார்.

நல்லதொரு மங்கல நாளில் காரியாருக்கும் உடையநங்கைக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. அவர்கள் இல்லறத்தை மகிழ்வுடன் தொடங்கினார்கள். மனமொருமித்த காதல் தம்பதியாக வாழ்ந்து வந்தார்கள். ஆண்டுகள் சில சென்றன. ஆயினும் அவர்களுக்கு குழந்தைச் செல்வம் மட்டும் கிட்டவில்லை.

அதனால் வருத்தத்தில் ஆழ்ந்திருந்த காரியாரும் உடையநங்கையாரும் ஒரு குழந்தைக்காக மிகவும் ஏங்கினார்கள். ஒருமுறை, காரியார், மனைவியோடு மாமனாரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, திருவண்பரிசாரத்திலிருந்து திருக்குருகூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் திருக்குறுங்குடியை அடைந்து, அவ்வூரில் கோயில் கொண்டுள்ள மலை நம்பியைக் கண்டு வணங்கினார். அவருடைய உள்ளத்தில் மழலைச் செல்வம் பற்றிய துக்கம் மேலிட, நம்பியைப் பலவாறாகப் போற்றினார். ஓஎம்பெருமானே! எங்களுக்கு எல்லாச் செல்வமும் அளித்த நீ மழலைச் செல்வத்தையும் அளித்து அருள் புரிய வேண்டும்ஔ என்று வேண்டிக் கொண்டார். பிறகு அவர்கள் இருவரும் அன்றிரவு ஓரிடத்தில் படுத்து உறங்கினார்கள்.

அன்று இரவு, அத்தம்பதியின் கனவில் திருக்குறுங்குடி நம்பி தோன்றி, ஓஉங்களுக்கு நம்முடைய அம்சமாக ஒரு மகன் பிறப்பான்ஔ என்று கூறி மறைந்தார்.

காலையில் கண்விழித்து எழுந்ததும், அவர்கள் தங்கள் கனவைக் குறித்து ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தனர். பின்னர் திருக்குறுங்குடி கோயிலை அடைந்து, நம்பியை வணங்கிப் பலவாறு துதித்து, பின் திருக்குருகூரை அடைந்தார்கள்.

பரந்தாமன் அவர்களுக்கு அருளியவாறே, சேனை முதலியார் அம்சமாக, உடையநங்கையாருக்கு ஒரு மகவைப் பிறக்கச் செய்தார். ஆழ்வாராக சேனைமுதலியார் அங்கு அவதரிப்பதற்கு முன்பே, பெருமாளின் பஞ்சணையான ஆதிசேஷன் அவ்வூரின் பெருமாள் கோயிலில் வடபுறத்தில் ஒரு புளியமரமாகத் தோன்றியிருந்தார். நம்மாழ்வார் அவதரித்ததுமே, நம்பியெம்பெருமாள் அவர் மனையினுள் அருள் வடிவமாகப் புகுந்து, அவருக்கு ஞானமென்னும் தெய்வீகப் பாலை ஊட்டி மறைந்தார்.

ஞானப் பாலமுது உண்ட அந்தப் பச்சிளம் குழந்தை அரங்கப் பெருமானின் திருவடி ஒன்றினையே தன் உள்ளத்தில் நிலைநிறுத்தி, தாயின் முலைப்பால் அருந்தாமலும் அழாமலும் கண் திறவாமலும் கண்ணிமை மூடியபடியே அசைவற்றுக் கிடந்தது. ஆயினும் உடலில் வாட்டமுறாமல், பொலிவு குன்றாமல் திவ்விய ஒளியோடு திகழ்ந்தது. காரியாரும் உடையநங்கையாரும் தங்கள் குழந்தை அவ்வாறு இருப்பதைக் கண்டு வருத்தினார்கள். தான் பெற்ற பிள்ளை தன்னிடம் பால் அருந்தவில்லையே; வாய் திறந்து அழவில்லையே; கண் திறந்து பார்க்கவில்லையே – என்று உடையநங்கையின் உள்ளம் பெரிதும் ஏங்கித் தவித்தது.

பெருமாளே நமக்கு மகனாகப் பிறப்பதாக நம் கனவில் சொன்னார்! ஆனால், இந்தக் குழந்தை இப்படிக் கண் திறவாமல் கிடக்கிறானே? என்று காரியாரின் உள்ளம் கரைந்தது.

தம்பதி தங்கள் குழந்தையைத் தூக்கிச் சென்று குருகூரின் சங்கணித்துறையுடைய தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் திருக்கோயில் கொண்ட பொலிந்து நின்ற பிரானின் திரு முன் கிடத்தினார்கள்.

அந்தப் பெருமானை வணங்கி ஓபகவானே! எல்லாம் உன் செயல்ஔ என்று மனம் தேறினார்கள். பிறகு அப்பெருமாளை வணங்கி, மாறன் என்று தங்கள் மைந்தனுக்குப் பெயரிட்டு, தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி தாலாட்டினார்கள். பின்னர் குருகூர் திரும்பி, எம்பெருமானின் திருவருளை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

அதேநேரம், வைகுந்தத்தில் திருமால் தம் சேனைத் தலைவரான சேனைமுதலியாரிடம் நம் ஆழ்வாருக்கு உபதேசம் செய்துவிட்டு வருக என்று பணித்தார்.

சேனை முதலியார் அவ்வாறே திருக்குருகூர் சென்று, பிறர் அறியாதவாறு பாலகனான மாறனுக்கு தத்துவப் பொருட்களை விளக்கிக் கூறினார். பாலகனான ஆழ்வாரும் எல்லா உண்மைப் பொருட்களையும் நன்குணர்ந்துகொண்டு, ஆதிப்பிரான் சந்நிதியின் வடபுறத்தில் ஆதிசேடன் உருவமாக நிற்கும் புளியமரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அமர்ந்தார் (ஆழ்வார் திருநகரியில் பழைய புளியமரம் இன்றும் இருப்பதைக் காணலாம்).

பரந்தாமனின் முகத்தையன்றி வேறு எதிலும் விழியேன் என்று கண்களை மூடிய வண்ணம், எதையும் உண்ணாமலும் அருந்தாமலும் பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் ஆழ்ந்திருந்தார்.

குழந்தைகள் பிறந்ததும் இவ்வுலகப் பிறவி பந்தத்தைப் பிணைப்பதற்காக, சடம் என்ற வாயு குழந்தைகளிடம் சேர்ந்து விடுவது உலக இயல்பு. ஆனால் இவர் தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த சட வாயுவைக் கோபித்து விரட்டி, முன் உணர்வோடு விளங்கி, பிறவி பந்தச் சுழலை வென்றுவிட்டார் என்பதால் இவர் சடகோபர் எனப்பட்டார்.

சடகோபரோ பிறவித் தளைகளிலிருந்து விடுபட்ட ஆத்மாவாகி பரந்தாமனான பரமாத்மாவிடமே உள்ளுறைந்து வாழ்ந்தும்

சஞ்சரித்தும், பரமாத்மாவை எல்லா விதத்திலும் அனுபவித்து வந்தார். நம்மாழ்வார், திருமாலின் திருவடி அம்சம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் பெருமாள் சந்நிதிகளில் பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வதிக்கும் சடாரியை சடகோபம் என்கிறார்கள்.

அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன் என்பதே. அவர் காரியாருடைய மைந்தர், ஆகையால் அவரைக் காரிமாறன் என்றும் கூறுவார்கள். பெருமாளின் பிரசாதமான மகிழ மாலையை இவர் சூடியதால் வகுளாபரணர் என்றும் அழைப்பார்கள். தம் பாசுரங்களால் புறத் தத்துவங்களை ஓட்டியதாலும், அங்குசத்தால் பரமனாகிய களிறு தம் வசமாகும்படி செய்ததால் இவரை பராங்குசர் என்றும் அழைப்பர். திருமகள்நாதன் அவரை நம்மாழ்வார் என்று கூறி சிறப்பித்ததால் வைணவர்கள் அனைவரும் அவரிடம் கொண்ட அன்பினால் நம்மாழ்வார் என்று குறிப்பிட்டு வந்ததால், அந்தப் பெயரே நிலைபெற்று விளங்கியது.

நம்மாழ்வாரைப் பற்றிய குரு பரம்பரைக் கதைகள் சில உண்டு.

திருக்கோளூரைச் சேர்ந்தவர் மதுரகவியார். அவருக்குத் தென் திசையில் ஒருநாள் திவ்விய ஜோதி ஒன்று பளீர் பளீர் எனத் தெரிந்தது. அதற்கான காரணம் புரியாமல் மதுரகவியார் தவித்தார். அப்படியே அந்த திவ்விய ஜோதியைப் பார்த்தவாறே, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு இடமாக வந்தார். கடைசியில், அந்த ஜோதி திருக்குருகூரில் ஒரு புளிய மரத்தடியில் நிலை கொண்டது. அங்கே ஒளிபொருந்திய மௌனக் குழந்தையாக இருந்த நம்மாழ்வாரைப் பார்த்தார். அவருக்கு உண்மை புரிந்தது. இருந்தாலும் அதையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. உடனே அந்தக் குழந்தையை நோக்கி கை தட்டிப் பார்த்தார். சுவாமி என்று விளித்துப் பார்த்தார். பதில்தான் ஏதுமில்லை. பின்னர் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு, அதிக சப்தம் எழுப்பி, ஆழ்வாரை எழுப்பினாராம் மதுரகவியார்.

பின்னர் அவருடைய ஞானத்தை அறிய எண்ணி, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலாக, ஆழ்வார் முதன்முதலாக வாய்திறந்து, அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றாராம். இந்த பதிலைக் கேட்ட மதுரகவியாருக்கு, ஆழ்வாரின் ஞானநிலை புரிந்தது. அவரையே தன் குருவாக மனதில் சிந்திக்கத் தொடங்கினார்.

மதுரகவியாருக்கும் நம்மாழ்வாருக்கும் நடந்த இந்த உரையாடலில் பெற்ற கேள்வி பதிலின் உள்ளர்த்தம் மிக ஆழமானது. ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய கேள்வி அது. அதாவது ஓர் ஆத்மா எந்த உடலை அடைகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் வடிவத்துக் கேற்ற இன்ப துன்பங்களை அனுபவித்துக்கொண்டு அப்படியே இருக்கும் என்பதை விளக்குகிறது.

மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம் இதுதான். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது… அதற்கு நம்மாழ்வாரின் பதில் – அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.

ஒருநாள் நம்மாழ்வார் மதுரகவியாரை நோக்கி, இறைவனை அடைவதற்கு உரிய வழியைக் காட்டும் பாமாலைகளைப் பாடப்போகிறோம். அவற்றைப் பட்டோலையில் எழுதுங்கள் என்று கூறியருளினார். மதுரகவியாழ்வாரும் அவ்வாறே செய்யலானார். மகாத்மாவே! மேவினேன் அந்தப் பரந்தாமனின் பொன்னடி மெய்மையை என்றார் மதுரகவியார். அவர் விருப்பத்தை சடகோபர் நிறைவேற்றினார். அதன்பின்னர், மதுரகவியார் நம்மாழ்வார் சொல்லச்சொல்ல பாடல்களை பட்டோலையில் எழுத விழைந்தார்.

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் மீது காதல் கொண்ட ஒரு பெண்ணாக தன்னை உருவகப் படுத்திக்கொண்டு, நம்மாழ்வார் பாடினார்…

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்

எழுந்த வாய் மயங்கும் கை கூப்பும்

கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்

கடல் வண்ணா கடியை காண் என்னும்

வட்டவாய் நேமி வலம் கையா என்னும்

வந்திடாய் என்று என்றே மயங்கும்

இட்டனே செழுநீர்த் திருவரங்கத் தாய்

இவள் திறந்து என் சிந்தித்தாய்.

கால் கைகளை அசைக்க முடியாமல் இட்டகால் இட்டபடியே இருக்க இந்தப் பெண் இருக்கின்றாள். வைத்த கை வைத்தபடியே இருக்கும்; எழுந்து வாய் பேச முடியாமல் மயங்கி நிற்கும்; கைகூப்பி வணங்கி நிற்கும்; காதல் என்றால் கஷ்டமே என்று மூர்ச்சிக்கும்; கடல் வண்ணனான திருமாலே நீ மிகவும் கடுமையானவன் பார் என்று சொல்லும்; வட்டமான கூர்மை பொருந்திய சக்கரப் படையை வலக்கரத்தில் ஏந்தி இருப்பவனே என்று சொல்லும்; என்னிடம் வந்துவிடு என்று சொல்லி மயங்கி நிற்கும் இந்தக் காதலியின் திறத்தில் என்னதான் சிந்தித்தாய்?… – என் இஷ்டனே காவேரி சூழ் திருவரங்கத்துள்ள திருமாலே! – என்ற கருத்தமைந்த பாசுரத்தைப் பாடினார்.

இதைக் கேட்ட பரந்தாமன், தன்னை சேவித்து மகிழும் ஆழ்வாருக்குத் தன்னருள் புரிய எண்ணி, திருமகளுடன் சங்கு சக்ரதாரியாக கருட வாகனத்தில் தோன்றி, அவருக்கு சேவை சாதித்து மயர்வறு மதிநலம் அருளினார். சடகோபர் அக்கருணையை எண்ணி மனம் கனிந்தார். பாமாலைகள் பாடலானார்.

 

மதுரகவியாழ்வாரை முன்னிட்டு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களைத் தமிழில் பாட எண்ணி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு தமிழ் வேதங்களாகப் பாடியருளினார். அவற்றை மதுரகவியாழ்வார் முதலானவர்களெல்லாம் கற்றுத் தேர்ந்து பேரருள் பெறும்படி உலகுக்கு வழங்கினார்.

நம்மாழ்வார் திருக்குருகூரில் திருப்புளிய மரத்தடியிலே வீற்றிருந்தபோது, திவ்வியதேசப் பெருமாள் திருத்தலங்களில் உள்ள எம்பெருமான்களெல்லாம் அங்கு வந்து நம்மாழ்வாரின் திருமுகம் பார்த்துச் சென்றார்கள். அவர் இவ்வுலகில் முப்பத்தோராண்டு காலம் புளிய மரத்தடியில் வீற்றிருந்து பரமாத்மாவிடமே உள்ளுறைந்து, மாலடியார் தெய்வீகத் தேனமுதாம் பாமாலை அமுதுண்ணுதற்காகப் பாடி, பரமபதம் சேர்ந்தார்.

ஸ்ரீவைணவ தத்துவத்தை நம்மாழ்வார் நிலை நாட்டியதால் குலபதி என்று கூறி உன்னத நிலையில் கொண்டாடுகிறார்கள். திருமாலுக்கு ஆட்பட்ட அவர், தம்மை திருமாலின் பெரிய திருவடிகளே என்று குறிப்பிட்டிருந்ததால், அவரை பெருமாளின் பெரிய திருவடியாகவே வைணவர்கள் பாவித்து, பிற்காலத்தில் அவருடைய திருமேனி உருவையும் பெருமாள் கோயில்களில் வைத்துப் போற்றி பூஜித்து வரலானார்கள்.

வைணவக் குரவர்களை ஆழ்வார்கள் எனவும், ஆசார்யர்கள் எனவும் இருவகையாகப் பிரித்துக் கூறுவார்கள். ஆனால் நம்மாழ்வாரோ அவ்விரு வகையிலும் சேர்ந்தவர். பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரை அவயவி என்றும், மற்ற ஆழ்வார்களை அவரின் அம்ச அவதாரங்களான அவயவங்கள் என்றும் குறிப்பிடுவார்கள்.

வைணவர்கள் பிரபந்தத்தையோ அல்லது பூஜை செயல்களைச் செய்யத் தொடங்கும்போதோ இந்த ஸ்லோகத்தைச் சொல்வது வழக்கம். அது வைணவ குரு பரம்பரையைச் சொல்வது. வைணவ ஆசார்யரான கூரத்தாழ்வார் அருளிச் செய்த இந்த ஸ்லோகத்தில் குரு பரம்பரையைப் பற்றிச் சொல்கிறார்.

லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம்

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

வைணவர்கள் போற்றும் ஆசார்யர்களில், ஸ்ரீமந் நாராயணன், மகாலட்சுமித் தாய், சேனை முதலியார் எனப்படும் முதல் மூன்று ஆச்சார்யர்களும் பரமபதத்தில் இருப்பவர்கள். இதில் மூன்றாவதாகக் குறிப்பிட்ட சேனைமுதலியாரின் அம்சமாகவே நம்மாழ்வார் அவதரித்தார் என்பதால் அவரும் ஆசார்ய பரம்பரையைச் சேர்ந்தவராகிறார்.

இதில் நான்காவதாகக் குறிப்பிடப்படும் நாதமுனிகள், நம்மாழ்வாரின் திருவாய்மொழி விஷயமாக அருளிச்செய்த ஸ்லோகம் இது.

பக்தாம்ருதம் விச்வ ஜநாநுமோதநம்

ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம் |

ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்

நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம் ||

ஆயிரம் சாகைகளாக விரிந்து உபநிஷதங்களுக்கு சமானமாக விளங்கும் – சடகோபர் அருளிச் செய்த – இந்தத் திருவாய்மொழி, திராவிட வேதக் கடலாகும்; இந்த பக்தி அமுதத்தை உலக மக்களுக்காக அவர் அளித்தார் என்பதைத் தெரிவிக்கிறார்.

 

திருவாய்மொழி சம்பந்தமாகவும் நம்மாழ்வார் விஷயமாகவும் ஆசார்யப் பெருமக்கள் அளித்துள்ள எளிய வெண்பாக்கள் சிலவற்றை இங்கே காணலாம்…

(ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது)

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்,

மருவினிய வண்பொருநல் என்றும், – அருமறைகள்

அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,

சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

(சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது)

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்

இனத்தாரை அல்லாது இறைஞ்சேன், – தனத்தாலும்

ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்,

பாதங்கள் யாமுடைய பற்று.

(அனந்தாழ்வான் அருளிச்செய்தது)

ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுச முனிதன்

வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், — ஆய்ந்தபெருஞ்ச்

சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,

பேராத வுள்ளம் பெற.

(பட்டர் அருளிச்செய்தவை)

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்

ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், – ஈன்ற

முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த

இதத்தாய் இராமா னுசன்.

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,

தக்க நெறியும் தடையாகித் — தொக்கியலும்,

ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,

யாழினிசை வேதத் தியல்.

பட்டர் அருளியபடி, மதிள் அரங்கர் வண்புகழ் மேல், தமிழ் மறைகள் ஆயிரம் அருளிச் செய்த ஈன்ற முதல் தாய் சடகோபனாகிற நம்மாழ்வார். அதைப் பாராட்டி சீராட்டி வளர்த்த இதத்தாய் – செவிலித்தாய் ராமானுஜர் என்று காட்டுகிறார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை சாமவேதத்துக்கு ஒப்பாகச் சொல்வார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால், சாமவேதம் என்பது இசையும் சேர்ந்த ஒன்று என்பதால், இந்தத் திருவாய்மொழிப் பாசுரங்களும் இசையோடு பாடுவதற்கு இனிதாக அமைந்திருக்கும். அதனால்தான் பட்டர் இங்கே யாழினிசை வேதத்து இயல் என்று இயலும் இசையும் கலந்த தெய்வீகத் தேனமுதாக நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடுகிறார்.

 

மகாகவி கம்பர் ராமாயணம் பாடப் புகுந்தபோது முதலில் நம்மாழ்வாரைத் துதித்து சடகோபர் அந்தாதி பாடியிருக்கிறார். அந்த சுவையான சம்பவம் இது.

மகாகவி கம்பர், ராம கதையைத் தமிழில் பாட விரும்பி வால்மீகியின் ராமகீர்த்தியையும் இன்னும் சில ராமாயணங்களையும் புராணங்களையும் வடமொழிப் புலவர்கள் மூலம் ஆராய்ந்து தமக்கென ஒரு தனி வழி வகுத்துக் கொண்டு, தமிழில் கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் பதினைந்தே நாளில் இயற்றி முடித்தார்.

தான் இயற்றிய அந்த ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் சந்நிதியில் அரங்கேற்ற ஆசை கொண்டார் கம்பர். ஆனால் அதற்கு பல தடங்கல்கள் எழுந்தன. தடை பல தாண்டி, அவர் ஸ்ரீரங்கம் சென்று வைணவ சமய ஆசார்யராக அப்போது வீற்றிருந்த ஸ்ரீமந் நாதமுனிகளிடம் அனுமதி கேட்டர். அவர் அனுமதியளித்த பின்னே, ஆலயத்தினுள் ஒரு மண்டபம் எழுப்பி நல்லதோர் நாளில் தம் ராமாயணத்தை அரங்கேற்ற முனைந்தார் கம்பர். ஆனால் அப்போதும் ஏதோ தடங்கல். கம்பர் அரங்கநாதனை மனமுருகப் பிரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கம்பரின் கனவிலே ஓஎம்மைப் பாடினாய் அன்றி நம் சடகோபனைப் பாடினாயோ? அவனையும் பாடினால்தான் உன் ராமாயணத்தை நாம் ஏற்போம்!ஔ என்று கூறினார்.

அதனால் கம்பர் நம்மாழ்வாரான சடகோபர் மீது நூறு பாக்களால் சடகோபர் அந்தாதியை இயற்றினார். அதன் பிறகே அவருடைய ராமாயணம் நாதமுனிகளின் முன்னிலையில் அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் தாயார் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் அரங்கேறியது.

அப்போது, தாயார் சந்நிதி முன் இருந்த மேட்டு அழகிய சிங்கப் பிரான் சப்தம் எழுப்பிச் சிரித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த மண்டபம், இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் என்று அரங்கநாயகித் தாயார் சன்னிதி முன்னால் உள்ளது.

கம்பர் தம் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரே எனக்குக் காப்பு என்று சொல்லி ஒரு காப்புச் செய்யுள் படைத்து அந்தாதியைத் தொடங்கினார். அந்த துதிப்பாடல்,

தருகை நீண்ட தயரதன் தான் தரும்

இருகை வேழத்தி ராகவன் தன் கதை

திருகை வேலைத் தரைமிசைச் செப்பிடக்

குருகை நாதன் குரைகழல் காப்பதே.

இந்தக் காப்புச் செய்யுளார் நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றிக் கொண்டாடுகிறார் கம்பர்.

இதன்பிறகு வைணவர்கள் நூல் இயற்றத் தொடங்கும்போது முதலில் நம்மாழ்வாருக்குத் துதி கூறும் வழக்கம் உண்டானது.

கம்பரின் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது. அதில் ஒரு சம்பவம்…

நம்மாழ்வாரின் சிறப்புகளை விருது கூறிக்கொண்டு மதுரகவியார் அவருடைய விக்கிரகத்தை எழுந்தருளச் செய்துகொண்டு வீதியுலா வருவார். அப்போது மதுரைச் சங்கத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

நம்மாழ்வாரின் பெருமையைப் பறைசாற்ற, கண்ணன் கழலிணை என்னும் ஒரு பாசுரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மதுரை சங்கத்தைச் சேர்ந்த புலவர்களுடன் வாதுக்குச் சென்றார் மதுரகவியாழ்வார். அப்போது நம்மாழ்வாரின் அந்த ஒரு பாடலுக்கு சங்கப்பலகை இடம் தந்து மற்றவர்களைக் கீழே தள்ளியது (இந்த நிகழ்ச்சியை மதுரகவியாழ்வாரின் சரித்திரத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

இந்த நிகழ்ச்சியை கம்பர் தம் சடகோபர் அந்தாதியில் சிறப்புறக் காட்டுகிறார்.

 

தமிழிலக்கியத்தில் மிக மிக உயர்வான கருத்துகள் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பரவலாக இடம் பெற்றிருக்கின்றன.

நம்மாழ்வார் தனக்காகப் பாடாது, உலக மக்களின் நலனுக்காக எம்பெருமானிடம் அவர்கள் சார்பில் ஒரு விண்ணப்பம் செய்கிறார்…

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்

இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்

எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா

மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

பொய்யான அறிவு; தவறான ஒழுக்கங்கள்; அழுக்கான உடம்பு- இத்தகைய குணங்கள் இனி எங்களுக்கு ஏற்படாதபடியான வாழ்வினைத் தருவாய். வானவர் தலைவனே, அடியேன் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள் என்று உலக மக்களின் சார்பில் எம்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கிறார்.

நான்கு வேத சாரம்

வேத காலத்தில் தொகுக்கப்பட்ட நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதாதிகளின் சாராம்சத்தை ஆழ்வார் திராவிட வேதமாகிற வகையில், தமிழில் எளியோர்க்காக அருளிச் செய்தார் என்பர். அப்படி, திருவாசிரியத்தை யஜுர் வேதத்தின் சாரமென்றும், திருவிருத்தம் ரிக்வேத சாரம் என்றும், பெரிய திருவந்தாதி அதர்வண வேத சாரமெனவும், திருவாய்மொழி சாம வேத சாரம் என்றும் சொல்வார்கள்.

திருவாசிரியம்

இது ஏழு ஆசிரியப் பாக்களால் அமைந்தது. முதல் பிரபந்தத்தில் ஆழ்வார் தம் சம்ஸார பந்தத்தை நீக்கி திருநாட்டை அருளுமாறு பிரார்த்திக்கிறார். அவ்வாறு செய்தால் மற்ற பிரபந்தங்கள் அவதரிக்க வாய்ப்பு ஏற்படாதே! அதனால் பகவான் ஒரு வழி செய்தார். ஆழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்று ஆசைப்படுவது, தன்னை பரிபூரணமாக அனுபவிக்கத்தான் என்பதால், அந்த அனுபவத்தை இந்தப் பூவுலகிலேயே கொடுத்துவிட்டால் என்ன என்று யோசித்து, தன் திருமேனி, குணம் முதலியவற்றை இங்கேயே காட்டி அருளினான். அவ்வண்ணம் அவனை தரிசித்த ஆழ்வார், பரமபதத்தில் பெற வேண்டிய அனுபவத்தை இங்கேயே பெற்றுவிட்ட மகிழ்ச்சியில், அந்த அனுபவத்தை விவரிக்கிறார் இந்தப் பிரபந்தத்தில். இது யஜுர் வேத சாரம் என்று போற்றப்படுகிறது.

திருவாசிரியத்திலிருந்து ஒரு பா…

யாவகை உலகமும் யாவரும் இல்லா

மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்

கெல்லாம் அரும்பெறல் தணிவித்து ஒருதான்

ஆகித் தெய்வநான்முகக் கொழுமுளை

ஈன்று முக்கண் ஈசனோடு தேவுபல

நுதலி மூவுலகம் விளைத்த உந்தி

மாயக் கடவுள் மாமுதல் அடியே

இந்தப் பாசுரத்தில், விஷ்ணு புராணத்தை ஒட்டிய செய்திகளும், அதே நேரம், நவீன காஸ்மாலஜி காட்டும் கருத்துகளும் எழுகின்றன. எந்த வகை உலகமும் உயிரினமும் இல்லாத பாழ் காலத்தில் பொருள்களுக்கு எல்லாம் வித்தாக, ஒரே ஒரு தானாக, பிரமனையும் ஈசனையும் தேவர்களையும் கொண்டு வந்து, மூன்று உலகங்களையும் உண்டாக்கியது மாயக் கடவுளான திருமாலின் முதல் அடியே!

செக்கர் மாமுகில் உடுத்து மிக்க செஞ்சுடர்

பரிதி சூடி அஞ்சுடர் மதியம் பூண்டு

– என்று மேகத்தையும் சூரியனையும் சந்திரனையும் திருமாலின் உடைகளாக அணிவித்துப் பார்க்கிறார். இறுதியில்,

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்

தளிர்ஔத இமையவர் தலைவனும் முதலா

யாவகை உலகமும் யாவரும் அகப்பட

நிலம், நீர், தீ, கடல், சுடர் இரு விசும்பும்

மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க

ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்

அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த

எம்பெருமானே அல்லாது

ஒருமா தெய்வம் உடையமோ யாமே?

சிவனும், பிரம்மாவும், இந்திரன் முதலான தேவர்களும் எல்லா உலகங்களும், நிலம், நீர், நெருப்பு, காற்று, சூரிய சந்திரர்கள்; நட்சத்திரங்கள் அனைத்திலும், விதிவிலக்கின்றி மறைந்து விரவியிருக்கும் ஆலிலைமேல் தூங்கும் அந்த எம்பெருமானை அல்லாது வேறு தெய்வம் எங்களுக்கு உண்டோ !

திருவிருத்தம்

இதுவே முதல் பிரபந்தம் ஆகும். கட்டளைக் கலித்துறையால் அமைந்த பாக்கள். விருத்த வகையில் அமைந்திருக்கும். திரு என்பது அதன் மேன்மையைக் காட்டும் அடைமொழி. ஆழ்வார் இந்தப் பிரபந்தத்தில், எம்பெருமானிடம் இந்நிலவுலகில் இருப்பு கொண்டிருப்பது தமக்கு மிகவும் பொறுக்க முடியாதபடி இருப்பதாகச் சொல்கிறார். அதனால் சம்சார பந்தத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு பகவானிடம் விண்ணப்பிக்கிறார். இந்தப் பிரபந்தத்தில் எம்பெருமானாகிய நாயகனிடம் ஆழ்வார் தாம் பெண்மைத் தன்மை அடைந்து பேசுவனவாக இவை அமைந்திருக்கும். இந்தப் பாசுரங்கள் ரிக் வேத சாரமாகும்.

திருவிருத்தத்தில் ஒரு பாசுரம்…

வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்

பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவை அவைதோறும்

அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்

இணங்கு நின்னோரையில்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே

வணங்கும் துறைகள் பலப்பலவாக்கி வைத்தாய். எதிர்க் கருத்துகளால் வேறுபடும் – பிணங்கும் சமயங்கள் பலவற்றையும் ஆக்கி வைத்தாய். தெய்வங்கள் பலவற்றையும் நீயே ஆக்கி உன் உருவத்தையே பரவ வைத்திருக்கிறாய். உனக்கு இணை யாரும் இல்லை. அப்படிப்பட்ட உன்மேல் எனக்கு விருப்பம் எழுகிறது.

பெரிய திருவந்தாதி

நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி முழுவதும் வெண்பாவினால் ஆனது. இது, 87 வெண்பாக்களைக் கொண்டது. இதில் தாம் பெற்ற பகவதனுபவத்தில் ஆசையானது கட்டுக்கடங்காமல் மேன்மேலும் பெருகியது. அந்த அனுபவத்தை முழுவதும் பெற ஆழ்வார் பெறுவதற்காக ஏங்கும் நிலை இதில் வெளிப்படுத்தப்படுகிறது. இந்தப் பிரபந்தத் தொடக்கத்தில் ஆழ்வார் தம் நெஞ்சை அழைத்து, தம்முடன் பகவதனுபவத்தில் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறார். இறுதியில் தம் நெஞ்சுக்கு நல்லுபதேசம் நல்கி, இந்தப் பிரபந்தத்தை நிறுவுகிறார். இது அதர்வண வேத சாரமெனப் போற்றப்படுகிறது.

ஆழ்வார் தம் நெஞ்சுடன் பேசிக்கொள்வதான அழகான வெண்பாக்கள் இவை…

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்

இகழ்வோம் மதிப்போம் மதியோம் – இகழோம்மற்று

எங்கள்மால் செங்கண்மால் சீறல்நீ தீவினையேம்

எங்கள்மால் கண்டாய் இவை.

சிவந்த கண்களுடைய எங்கள் திருமாலே, உன்னை நாங்கள் புகழ்வோம், புகழமாட்டோ ம்; பழிப்போம், பழிக்க மாட்டோ ம்; மதிப்போம், மதிக்காமலும் இருப்போம். நீ அதற்காக எங்களைக் கோபித்துக் கொள்ளாதே… உன்னைச் சரியாக எங்களால் புகழவே முடியாது. இது என்ன தீவினை, இது என்ன பிரேமை?… நீ எங்கள் மாலாயிற்றே!

கடவுள் யார் என்பதில் இருக்கும் ஐயத்தை இந்தப் பாசுரத்தில் இப்படித் தெரிவிக்கிறார்…

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்

அவனாம் அவன் என்றிராதே _ அவனாம்

அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தாய்

அவனே எவனேலும் ஆம்

கடவுள் யார் என்பதில் ஐயமா? அது அவனா, இவனா? இல்லை இரண்டு பேருக்கு இடையில் உள்ள உவனா? அல்லது அமரர் லோகத்தில் இருப்பவனா என்றெல்லாம் கலங்க வேண்டாம், உறுதியாக அவன் கண்ணனே எனத் தெளிந்தோம்.

திருவாய்மொழி

இதுவே ஆழ்வாரின் சரமப் பிரபந்தமாம். அதாவது சரணாகதியடைந்து, அவன் திருவடி அடைதலைக் கூறும் பிரபந்தம் எனக் கொள்ளலாம். இது சாம வேத சாரம் என்பர் பெரியோர்.

ஒரு தாய், தன் குழந்தைக்கு எப்படி அஜீரணமாகாத அளவிலும், அதே நேரம், பசியைத் தணிக்கிற வகையிலும் பார்த்துப் பார்த்து பக்குவமாகச் சோறிடுவாளோ, அப்படி பகவானும் தனக்கு பகவத் விஷயங்களிலே ருசியை ஏற்படுத்தியதையும், அந்தப் பரபக்தி, பரஞான, பரம பக்தியாகக் கொண்டு, பக்குவமானதையும், அதன் பிறகு, இந்த உலக சம்பந்தம் அறுத்து வீடுபேறு பெற்றதையும் தெரிவிக்கிறது இந்தப் பிரபந்தம். இதில் சகல சாஸ்திர சாரமாகச் சொல்லப்படும் அர்த்த பஞ்சகமும் சொல்லப்படுகிறது. இறை நிலை, உயிர்நிலை, சரணாகதியாகிற நெறி, ஊழ்வினை, பேறாகிய அந்தம் இல்லாத பேரின்பம் போன்றவை விவரிக்கப்படுகின்றன.

இப்பிரபந்தம் நூறு பதிகங்களாக அமைந்த ஆயிரத்து நுற்றிரண்டு பாசுரங்களைக் கொண்டது.

ஆழ்வார்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு மற்றைய அருளிச் செயல்களைக் காட்டிலும் ஏற்றம் அதிகம் உண்டு. திருவாய்மொழிக்குத்தான் வைணவ மரபில் அதிக வியாக்கியானங்கள் உள்ளன. குருகைப்பிரான் அருளிச்செய்த ஆறாயிரப்படி, நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதாயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி, நம்பிள்ளை அருளிச் செய்ததை வடக்கு திருவீதிப்பிள்ளை படியெடுத்த ஈடு முப்பத்தாறாயிரப்படி, அழகிய மணவாள ஜீயர் அருளிய பன்னீராயிரப்படி – இப்படிப் பல வியாக்யானங்கள் திருவாய்மொழிக்கு உண்டு என்பது இதன் சிறப்பு.

திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களுக்கும் ஏற்றவாறு அதன் அர்த்தத்தைச் சுருக்கி நூறு வெண்பாக்களால் மணவாள மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதியைப் படைத்துள்ளார். இதில், பத்து பாசுரங்களுக்கு ஒரு வெண்பா என்ற வகையில் இந்த நூற்றந்தாதியைப் படைத்துள்ளார். திராவிட வேதம் என்று சொல்லப்படும் இந்தத் திருவாய்மொழியில், வேத உபநிஷதக் கருத்துகள் அனைத்தும் இருக்கின்றன.

திருவாய்மொழியின் முதல் பாசுரத்தில் பகவானின் குணநலன்களைப் பட்டியலிடுகிறார் ஆழ்வார். அவன் குணமற்றவன் என்ற வேற்று மதக் கருத்தை மறுத்து, அவனுடைய குணங்களை இதில் அடுக்குகிறார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்

மயரவற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயர்அறு சுடர் அடி தொழுது எழன் மனனே 1.1.1

தன்னைவிட உயர்ந்த குணங்கள் இல்லாதவன் எவனோ, அறியாமை (மயர்வு) விலக ஞானத்தையும் பக்தியையும் அருளியவன் எவனோ, மறத்தல் (அயர்வு) இல்லாத தேவர்களுக்குத் தலைவன் எவனோ, துயரங்களைப் போக்குகிற அவனது அடிகளை வணங்கி எழு மனமே என்று தெளிவாக்குகிறார்.

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்

தாமவரிவருவர், அதுவிது வுதுவெது

வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை

ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4

அவரவர் தமதம தறிவறி வகைவகை

அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்

அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்

அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

அவரே அனைத்தாகவும் இருக்கிறார் என்பதை, 1.1.4 பாசுரத்தில் காட்டுகிறார். அவரவர், தங்கள் தங்கள் அறிவினால் அறியப்படுகிற மற்ற தெய்வங்களைத் தொழுதெழலாம். ஆனால் அவரவர் விதிப்படி அந்தந்த வழியை அடையச் செய்வது அந்த தெய்வங்களினுள்ளும் அந்தர்யாமியாய் நிற்கும் திருமாலே.

திடவிசும்பு எரிவளி நீர்நில மிவைமிசை

படர்பொருள் முழுதுமாய் அவை அவைதொறும்

உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்

சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே 1.1.7

திடப்பொருட்கள், ஆகாயம், காற்று, நீர், நிலம் இவை எல்லாவற்றிலும் படர்ந்த பொருள் ஆனவன் அவன். அவற்றில் உடலுக்குள் உயிர்போல மறைந்து உள்ளேயும் வௌதயேயும் வியாபித்திருக்கிறான். வேதத்தில் உள்ளவன். இவையெல்லாம் உண்டவனும் இவனே. பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களிலும் சாரமாக விரவியிருப்பவன். இந்தக் கரந்தெங்கும் பரந்துளன் என்ற வார்த்தைதான் பகவத் ராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யம் எழுதும்போது கைகொடுத்தது என்பர் பெரியோர்.

 

இந்தப் பாசுரம், முதல் பத்தின் சிகரம் போன்றது.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.

உளன் அலன் எனில் அலன் அவன் அருவம் இவ்வருவுகள்

உளனென இலனென அவைகுணமுடைமையில்

உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அவன் உண்டு என்று சொன்னால் உண்டு. இல்லை என்று சொன்னால் இல்லை. இருக்கிறான், இல்லை என்னும் இரண்டு நிலைகளையும் உடையதாலே உருவமுள்ளவைகளும் உருவமற்றவைகளும் பெருமானின் ஸ்தூல, சூட்சும சரீரமாகக் கருதப்படும். இவ்விரண்டு தன்மைகளோடு எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளவன் அவனே!

இரண்டாம் திருவாய்மொழியில் உள்ள பாசுரங்கள்….

வீடுமின் முற்றவும்

வீடுசெய்து உம்முயிர்

வீடுடையானிடை

வீடு செய்ம்மின்னே

எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். அப்படி விட்டுவிட்டு உங்களுடைய உயிரை சொர்க்கத்தில் உள்ளவனிடை ஒப்படைத்து விடுங்கள்.

மின்னின் நிலையில

மன்னுயிர் யாக்கைகள்

என்னுமிடத்து இறை

உன்னுமின் நீரே.

மின்னலைக் காட்டிலும் நிலையற்றது நம் உடல். இதைக்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இறை எண்ணம் தானாய் உள்ளே புகும்.

நீர் நமது என்றிவை

வேர்முதல் மாய்த்து இறை

சேர்மின் உயிர்க்கு அதன்

நேர்நிறை யில்லே

நான் எனது என்கிற அகங்கார மமகாரங்களை வேரோடு மாய்த்து இறைவனைச் சேருங்கள். அதற்கு ஈடானது வேறு எதுவும் இல்லை.

இல்லதும் உள்ளதும்

அல்லதும் அவன் உரு

எல்லையில் அந்நலம்

புல்கு பற்றற்றே

இருப்பது, இல்லாதது, அல்லாதது எவையுமே அவன் உருவம்தான். எல்லையில்லாத பேரானந்தத்தை பற்றுகளை அறுத்து ஏற்றுக்கொள்க.

அற்றது பற்றெனில்

உற்றது வீடுயிர்

செற்றது மன்னுறில்

அற்றிறை பற்றே

பற்றுகளை அற்றுப்போகச் செய்தால், வீடுபேறு நிச்சயம். அதற்கு இறைப் பற்று என்ற ஒன்றினைப் பற்றுக என்கிறார் ஆழ்வார். இவ்விடத்து திருவள்ளுவரின்,

பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு

– என்னும் குறள் ஒப்புமைப்படுத்துகிறது.

இப்படி திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அவற்றின் உள்ளர்த்தங்கள் நவீன தத்துவங்களை ஒட்டியவாறு விரிவடைந்துகொண்டே செல்லும்…

 

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை

வாழியெழத் தண்டும் வாளும் எழ அண்டம்

மோழை எழ முடி பாதம் எழ அப்பன்

ஊழியெழ உலகம் கொண்டவாறே

திருவாய்மொழியின் (7-4-1) இந்தப் பாசுரம், பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணத்தை விவரிக்கிறது. முக்கியமான சிருஷ்டித் தத்துவங்களைச் சொல்கிறது. முதலில் சக்கரம் எழுந்தது. பின் சங்கம், வில், கதை, வாளும் எழுந்தன. எட்டுத் திசைகளிலிருந்தும் வாழ்த்துக்கள் எழுந்தன. பிரபஞ்சம் எனும் முட்டை (மோழை) உடைந்தது. அதிலிருந்து தலையும் பாதமும் எழுந்தன. காலம் எழுந்தது; உலகம் வந்தது.

இப்படிக் கடவுள் தன்னைத்தானே சிருஷ்டித்துக் கொள்ளும் சிருஷ்டி தத்துவம் ஆழ்வாரால் விளக்கப்படுகிறது. நம்மாழ்வாரும் பெண்மையடைந்து, கண்ணனை மோகித்துப் பாடும் பாசுரங்கள் ஏராளம். தான் பராங்குச நாயகியாகி கண்ணனை மோகித்துப் பாடுப் பாசுரங்களில், உருக்கமான சூழ்நிலை நிலவுவதை நாம் உணர்ந்தறியலாம்.

இங்கே இவள் கண்ணனை நினைத்தவாறே ஏங்கிக் கிடக்கிறாள். அப்போது, கண்ணன் பகவத்கீதையில் கூறியதை எண்ணிப் பார்த்தவளாய், அவன் சொன்னவற்றை மொழிகிறாள்… ஆழ்வார் காட்டும் இந்தப் பாடல்தான் கீதையின் மையமான சிந்தனை.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்

கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ

கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்கேன்

கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே

நீரையும் நிலத்தையும் செய்தது நானே; அது ஆவதும் நான், அதைக் கொண்டதும் நான், அதைப் பிளந்ததும் நான், உண்டதும் நான் என்று கண்ணன் சொன்னவற்றை இவளும் மொழிகிறாள். கண்ணன் வந்து இவள் மனத்தே புகுந்ததால் அன்றோ என் மகள் இப்படிப் பேசுகிறாள்….

நம்மாழ்வாரின் பாசுரங்கள் இப்படி வேதத் தத்துவங்களை அழகுத் தமிழில் கொண்டு இலங்குகின்றன. அவை திராவிட தேசத்தின் பக்திச் செழுமையையும் இலக்கிய வளமையையும் என்றென்றும் பறைசாற்றி இப்பூவுலகில் நிலைத்திருக்கும்.

நம்மாழ்வார் வாழி திருநாமம்

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே

ஆசிரியம் ஏழு பாட்டு அளித்தபிரான் வாழியே

ஈனம் அற அந்தாதி எண்பத்தேழு ஈந்தான் வாழியே

இலகு திருவாய்மொழி ஆயிரத்துஒருநூற்றிரண்டு உரைத்தான் வாழியே

வான் அணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே

வைகாசி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே

சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே

திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே

திருவான திருமுகத்துச் செவி என்னும் வாழியே

இருக்கு மொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே

எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே

கருக்குழியில் புகாவண்ணம் காத்தருள்வோன் வாழியே

காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே

வருத்தமற வந்து என்னை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி தம்பிரான் வாழிவாழி வாழியே{jcomments on}

Leave a Reply