3 943
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51
3944
பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52
3945
அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53
3946
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்
வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54
3947
கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55
3948
கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56
3949
மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57
3950
பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58
3951
கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே. 59
3952
உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்
புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60