ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

ஸ்ரீமத் ராமானுஜர்

3983

மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்

 

இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்

அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே. 91

3984

புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்

கெண்ணருங் கீர்த்தி இராமா னுச.இன்று நீபுகுந்தென்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே. 92

3985

கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும்

பெட்டைக் கெடுக்கும் பிரனல்ல னே,என் பெருவினையைக்

கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி

வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே. 93

3986

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப்

பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்

திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட்

குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே. 94

3987

உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே

பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும்

விண்ணின் தலைநின்று விடளிப் பானெம் இராமானுசன்

மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே. 95

3988

வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில்

கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன்

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்

குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே. 96

3989

தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமரைத்தாள்

தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால்

தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து

தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே. 97

3990

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்

சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில்

நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே

விடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே? (2) 98

3991

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே. 99

3992

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்

ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே

ஈந்திட வேண்டும் இராமா னுச.இது அன்றியொன்றும்

மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100

Leave a Reply