3 973
சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமா னுச.இனியுன்
சீரொன் றியகரு ணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே. 81
3974
தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ.
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே. 82
3975
சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்
எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார்கொண்ட வண்மை இராமா னுச.இது கண்டுகொள்ளே. 83
3976
கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய் விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்
றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே. 84
3977
ஓதிய வேதத்தின் உட்பொரு ளய், அதன் உச்சிமிக்க
சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை. 85
3978
பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே. 86
3979
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்
குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர்
தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில்
புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே. 87
3980
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்
வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்
புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே. (2) 88
3981
போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்
ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி
ஆற்றகில் லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே. 89
3982
நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே. 90