ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

ஸ்ரீமத் ராமானுஜர்

3 993

மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதிமயங்கித்

 

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி

உயக்கொண்டு நல்கும் இராமா னுச.என்ற துன்னையுன்னி

நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே. 101

3994

நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம்

ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவினையேன்

கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்

வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே? 102

3995

வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்

கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து

விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்

களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே. 103

3996

கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்

மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ

செய்யில் தரிப்பன் இராமா னுச என் செழுங்கொண்டலே. 104

3997

செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ்

விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்

தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்

எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே. (2) 105

3998

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்

பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்

திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்

திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே. (2) 106

3999

இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய

துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே

அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே. (2) 107

4000

அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்

பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்

தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே

பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே. (2) 108

 

திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

Leave a Reply